புதன், 18 நவம்பர், 2020

EAST WEST AIRLINES உண்மையான சூரர்களை போற்று!.. கேரளா வாஹித் சகோதரர்கள்

 

 Hussain Amma : ஏழைகளும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், விமானக் கம்பெனி தொடங்கி, பின்னர் அதை நல்ல விலைக்கு விற்றுவிட்ட “ஏர் டெக்கான்” கோபி நாத் குறித்து ”சூரரைப் போற்று!!” புண்ணியத்தில் எல்லாருக்குமே இப்போது தெரியும்.

ஏர் இந்தியா மட்டுமே கோலோச்சி வந்த 90-களில், வளைகுடாவில் கஷ்டப்பட்டு சம்பாதித்த தென்னிந்தியர்கள், பம்பாய் வந்துதான் தமது ஊர்களுக்குச் செல்ல முடியும். பயணச் செலவு எகிறுவதோடு, உள்ளூர்ப் பயணத்திலேயே விடுமுறையும் வீணாகச் செலவாகி வந்த காலம் அது.
வானத்தைத் தனியாருக்குத் திறந்து விட்ட 1991-ம் வருடம், கேரளாவைச் சேர்ந்த வாஹித் சகோதரர்கள் “EAST WEST AIRLINES" என்ற விமானச் சேவையைத் தொடங்கி, உண்மையிலேயே பெரும் சேவை செய்து வந்தனர்.
அன்னை தெரசா அம்மையாருக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களது விமானத்தில் இலவசச் சேவை அளித்து வந்தனர்.
ஆனால், இத்தொழிலில் அவர்கள் சந்தித்து வந்தது சாதாரணத் தொழிற்போட்டியோ, எதிர்ப்போ அல்ல - கொலை மிரட்டல்!!
பம்பாயில், விமான டிக்கெட் புக்கிங் செய்து கொடுக்கும் ஒரு ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர்கள் அச்சகோதரர்கள். மும்பையில் தொழில் செய்யும் தென்னிந்தியர்களுக்கு நேரும் அதே எதிர்ப்புகளோடு, சிறுபான்மைச் சமூகம் என்பதினால் எழும் வெறுப்பையும் சந்தித்து வந்தாலும், தம் உழைப்பினால் தொடர்ந்து தம் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டி வந்தனர். விமானச் சேவையின் நெளிவு சுளிவுகளோடு, பயணிகளின் கஷ்டநஷ்டங்களும் அறிந்திருந்ததால், தனியாருக்கு வானத்தின் வாசல் திறக்கப்பட்டதும், வாய்ப்பை உடன் பயன்படுத்திக் கொண்டனர்.
விமானச் சேவை தொடங்கு முன்பே மிரட்டல்கள் தொடங்கிவிட்டன. பொருட்படுத்தாது, நிறுவனம் தொடங்கி, விமானச் சேவையிலும் வெற்றிக் கொடி நாட்டினர்.
ஆனால், நான்கே வருடங்களில், ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸின் நிறுவனர் தகியுத்தீன் வாஹித், படுகொலை செய்யப்பட்டார்!! அத்துடன் நிறுவனம் பல நஷ்டங்களுக்கு உள்ளாகி, மூடப்பட்டது.
மும்பையின் நிழலுகத்தின் அடியாட்களால் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இப்படுகொலை, வழக்கம்போல “சாட்சியங்கள்” இல்லாத காரணத்தால், கொலையாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
வட இந்தியாவில் ஒரு தென்னிந்தியர், அதுவும் சிறுபான்மை இனத்தவர் தொழிலில் முன்னேறுவது எவ்வளவு சாத்தியம் என்பதற்கு இவரின் மரணமும் ஒரு சாட்சி!! திரைப்படமாக எடுக்க முழுத் தகுதியுள்ள கதை.
நன்றி -
Hussain Amma உண்மையான சூரர்களை போற்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக