திங்கள், 23 நவம்பர், 2020

கட்சிகள் இந்த Cognitive biasஐ புரிந்துகொண்டால் மட்டுமே அதற்கு மாற்றாக தங்கள் கொள்கைகளை, திட்டங்களை, பிரச்சாரங்களை வகுக்க முடியும்.

Karthikeyan Fastura : · இருப்பதிலேயே மிக மிக சுவாரஸ்யமான மார்க்கெட்டிங் யுத்தி Cognitive Bias தான் என்பேன்.                           இதை மட்டுமே ஒரு தனிப்பெரும் புத்தகமாக எழுதலாம். இந்த யுத்தியை மிகச் சரியாக பயன்படுத்தியவர்கள் சாமியார்கள் தான். அதற்கடுத்தார் போல கைரேகை பார்ப்பவர்கள், குறி சொல்பவர்கள், மந்திர தந்திரவித்தைகளை நிகழ்த்துபவர்கள் இவர்கள் ஜுனியர் லெவலில் இதை செய்பவர்கள். மூளையை சில வினாடிகள் முதல் பல வருடங்கள் வரை தேவைக்கேற்ப மழுங்கடிக்க வைத்து அல்லது மயக்கத்தில் வைத்திருந்து காரியத்தை சாதித்துகொள்வது தான் இது. 

Cognitive bias என்பது சுய சிந்தனையிலிருந்து திட்டமிட்ட ஒரு வழிமுறையின்கீழ் திசைதிருப்பும் ஒரு அற்புதமான யுக்தி. மனிதன் நாகரிகம் பெற்று வளர்ந்து வரும் காலம் தொட்டு இந்த வித்தை பல காரணங்களால் பலரால் மக்களுக்குள் திணிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.        இதன் ஒரு வடிவம்தான் மதம், சாதி. இவை போன்ற கற்பனை கடிவாளங்கள் மனிதனின் சிந்தனையை கட்டுப்படுத்தி வருகிறது.

பகுத்தறிவு சிந்தனை என்பது இதற்கு நேர் எதிர் திசையில் அமைந்துள்ளது. உண்மையில் பகுத்தறியும் சிந்தனை தான் இயற்கையான அறிவு.
இயற்கையான அறிவை, உள்ளுணர்வை மழுங்கடிக்கும் யுத்தி தான் Cognitive bias. இதனால் பாதிக்கப்படாதவர்கள் மிக மிக குறைவு. நாம் எல்லோரும் ஏதாவது ஒரு வகை Cognitive biasஆல் பாதிக்கப்பட்டே இருக்கிறோம்.
சிலர்முற்றிலுமாக அதிலிருந்து மீண்டு தங்கள் சுயசிந்தனை என்ன சொல்கிறதோ அதன்படி வாழ்கிறார்கள். உண்மை எதுவோ அதை காரண காரியங்களோடு ஏற்றுக் கொள்கிறார்கள். பெரும்பாலோர் பாதி வெளியில் வந்தும் சிலவற்றில் இருந்து வரமுடியாமல் இருக்கிறார்கள். ஒரு சிறு பகுதியினர் யார் என்ன கூறினாலும், அது உண்மை தான் என்று உச்சி மண்டையில் உரைத்தாலும் மாறாமல் அப்படியே இருப்பார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை வட இந்தியாவின் Cognitive biasஆல் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகம். அவர்களில் பாதி கல்வியறிவு பெற்று இருந்தாலும் இந்த சிந்தனை மயக்கத்திலிருந்து வெளிவராமல் அப்படியே உறைந்து போய் இருப்பார்கள்.
இதுபற்றி படிக்கும்போது ஒரு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 203 வகையான Cognitive bias உள்ளதாக உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்றாலும் அதை மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர்.
1. நம்பிக்கை, முடிவெடுத்தல் மற்றும் குணாதிசய சார்புகள்
2. சமூக சார்புகள்
3. நினைவலை சார்புகள்
இதில் முதல் வகை சார்புகள் தான் இருப்பதிலேயே மிகவும் அதிகம். அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். இவைதான் நம் குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோர்கள், உற்றார் உறவினர் சுற்றம் சூழல் நண்பர்கள் வழியாகவும், பள்ளி கல்விக்கூடங்கள் வழியாகவும் ஏற்படுத்தப்படுகிறது.
காட்சி 1.
5 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு குழந்தை அதனுடன் சேர்ந்து விளையாடி வருகிறது. முதல் குழந்தையின் தாய் சட்டென்று தன் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்று அதனிடம் நீ அவர்களுடன் விளையாடக்கூடாது என்கிறாள்.
“ஏன்மா விளையாடக்கூடாது?“
“அவர்கள் எல்லாம் கருப்பு குழந்தைகள். கருப்பான குழந்தையுடன் விளையாடுவது பாவம். விளையாண்டால் சாமி கண்ணை குத்தும்” என்று கூறுகிறார்
“அப்படியாமா..?” என்கிறது குழந்தை
“ஆமாம் செல்லம்..”
“சரிமா இனிமேல் விளையாட மாட்டேன்.”
காட்சி 2
பிறந்தநாளுக்கு ஆடை வாங்க கடைக்கு செல்கிறார்கள். குழந்தை ஒரு கருப்பு ஆடையை தேர்ந்தெடுத்து எனக்கு அந்த டிரஸ் வாங்கி கொடுங்க அது தான் எனக்கும் வேணும் என்கிறது.
"பிறந்தநாளுக்கு கருப்பு டிரஸ் போட கூடாது. கருப்பு என்பது அபசகுணம். வெள்ளை டிரஸ் வாங்கிக்க அதுதான் அழகாய் இருக்கும்.."
இந்த இரண்டு காட்சிகளின் வழியாக குழந்தைக்கு ஒரு சார்பு நிலை செயற்கையாக உருவாக்கப்படுகிறது. அச்சார்பு கூறும் கருத்து எல்லா மனிதர்களும் ஒன்றல்ல.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு உள்ளது. கருப்பாக இருப்பவர்கள் தீயவர்கள். கருப்பு நிறம் தீய நிறம்.
இப்படியாக நிறம், மதம், சாதி, இனம், மொழி மற்றும் தேசம் என்று பலவித சார்புகள் உருவாக்கப்படுகிறது. இவற்றை உடைப்பது அவ்வளவு எளிதல்ல. அதேசமயம் உடைக்க முடியாததும் அல்ல.
இந்த மனப்பான்மை இதோடு முடிவதில்லை. இது தொடக்கம் மட்டுமே. இந்த சிந்தனையில் வளருகிறவர்கள் தான் பின்னாளில் எல்லோரும் சமமாக வாழும் உரிமைக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு என்ற சமூகநீதியை பற்றிய புரிதல் இல்லாமல் அவை வேண்டாம் என்பதும், அது அவம் என்று நினைப்பதும்.
இந்த சார்புகள் தான் புதிதாக வாக்களிக்கும் இளைஞர்களின் முடிவுகளை சிதைக்கிறது. ஒரு உதாரணத்திற்கு தமிழ்நாட்டு மக்களின் சராசரி வயது 29. ஒவ்வொரு தேர்தலுக்கும் நமது மக்கள் தொகையில் 8.29% அதாவது 66 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெறுகின்றனர் . இதற்கு முந்தைய தலைமுறைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், கல்வி மறுப்பு, பெண்களுக்கான உரிமை மறுப்பு, சமூக சீர்கேடு பற்றிய புரிதல் இவர்களுக்கு இருப்பதில்லை.
ஏன் புரிதல் இருப்பதில்லை என்ற கேள்விக்கு பதில் தான் நாம் இதுவரை பார்த்த உளவியல் சார்புகள். இவை பள்ளி, கல்லூரி, பத்திரிகைகள், வார மாத இதழ்கள், தொலைகாட்சிகள், இப்போது வாட்ஸ்ஆப், பேஸ்புக் மூலம் அடிக்கப்படும் தொடர் விபூதிஅடிப்புகள்.
திட்டமிட்ட முன்னேடுப்பால் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு எவ்வாறு தலை நிமிர்ந்தது என்பதை பற்றியுமான உண்மைகள் அவர்களிடம் சேராமல் இருப்பதாலும் இன்றைய இளைய தலைமுறை தங்கள் தலைமையை தேர்வு செய்வதிலும், வாக்கு செலுத்துவதிலும் நாட்டமில்லாமல் உள்ளனர்
இந்த சார்புகள் ஒவ்வொருத்தர் மனதிலும் படிந்து இருந்தாலும் உள்ளுக்குள் இருக்கும் இயற்கையான உள்ளுணர்வு இது தவறு என்று சொல்லிக் கொண்டே இருக்கும். இன்று விஞ்ஞானம், தொழில்நுட்பம் இந்த உள்ளுணர்வுக்கு வலு சேர்க்கிறது.
ஒவ்வொருத்தர் மனங்களிலும் இருக்கும் இந்த உள்ளுணர்வு, முட்டையைவிட்டு உடைத்துக்கொண்டு வெளிவரக் காத்திருக்கும் குஞ்சு போல இருக்கும். அப்போது வெளியிலிருந்து ஒரு பகுத்தறிவுகல் மெதுவா தட்டினாலே அது உடைந்து விடும்.
இங்குதான் கட்சிகள் இந்த இயற்கையான உள்ளுணர்வுக்கு ஆதரவு தரும் சமத்துவம், சமூகநீதி கொள்கைகளை கொண்டிருப்பது மிக அவசியம் என்பதை மக்கள் உணரவேண்டும். அதை அந்த கட்சிகள் மக்களுக்கு தங்களின் அவசியத்தை உணர்த்த வேண்டியது அவசியம்.
காரணம் Cognitive biasல் சிக்கிக்கொண்ட மனிதர்களின் சுயசிந்தனை என்ற உள்ளுணர்வு வெளிவரத் துடிக்கும். அவ்வாறு துடிக்கும் உணர்வுக்கு சக்தி ஊட்டும்போது யார் அந்த சக்தியை கொடுத்தார்களோ அந்த சுயசிந்தனையை, உள்ளுணர்வை புரிந்துகொண்டார்களோ அவர்களை மக்கள் காலாகாலத்திற்கும் பின்பற்றுவார்கள். இதுவும் ஒரு வகை சார்பு தான் என்றாலும் இந்தவகை சார்பு சுய சிந்தனையை ஊட்டுகிறது என்பதால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
ஆகவே மக்களின் சுயசிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் சக்தி கொடுக்கும் கொள்கைகளை வகுத்து அதை தீவிரமாக பிரச்சாரம் செய்யும்போது அது எளிதில் வெற்றி பெறுகிறது.
கட்சிகள் இந்த Cognitive biasஐ புரிந்துகொண்டால் மட்டுமே அதற்கு மாற்றாக தங்கள் கொள்கைகளை, திட்டங்களை, பிரச்சாரங்களை வகுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக