ஞாயிறு, 22 நவம்பர், 2020

ஒரு மாநிலத்திற்குள் CBI விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதி கட்டாயம் வேண்டும் – உச்சநீதிமன்றம்

madrasradicals.com :மாநில அரசின் அனுமதி பெறாமல் அம்மாநிலங்களின் எல்லைகளுக்குள் மத்திய புலனாய்வுத் துறையான CBI விசாரணை மேற்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, இந்த விதிமுறைகள் அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மையின் அடிப்படை கட்டமைப்புகளுக்குள் ஒன்றாகக் கருதப்படுவதாக தெரிவித்துள்ளனர்.    “டில்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டப் பிரிவு 5 ((DSPE-Delhi Special Police Establishment Act) மத்திய அரசு அதிகாரிகளின் அதிகார வரம்புகளின் எல்லைகளை விரிவாக்க உதவுகிறது என்றாலும், அதே சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் அத்தகைய அதிகார வரம்புகளின் நீட்டிப்புக்கு ஒரு மாநிலம் ஒப்புதல் அளிக்காவிட்டால்  சம்பந்தப்பட்ட மாநில எல்லைகளுக்குள் விசாரணைக்கு அனுமதிக்க முடியாது” என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சமீபத்தில் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் அரசாங்கங்கள் சிபிஐ-க்கு தங்கள் மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ள வழங்கியிருந்த “பொது அனுமதியை” வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

அனுமதியை ரத்து செய்த மாநிலங்கள் எல்லாம் தெரிவித்த  குற்றச்சாட்டுகளுள் முக்கியமானவை பாரதிய ஜனதா கட்சி அரசு தனது அரசியல் சுயநலத்திற்காக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ-யை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு வழங்கி உள்ள வழக்கின் பின்னணி

2019-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஃபெர்டிகோ தனியார் முதலீடு நிறுவனத்திற்கு (Fertico Marketing and Investment Private Limited) எதிராக வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஒன்றிய அரசிடம் இருந்து வாங்கிய நிலக்கரி கருப்பு சந்தையில் விற்கப்பட்டதால் ரூ.36.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஃபெர்டிகோ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரை சிபிஐ விசாரிப்பதற்கு உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்று அந்நிறுவனத்தின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் 1989-ம் ஆண்டே உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதற்கும் சிபிஐ விசாரிப்பதற்கு, அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்ததோடு, அந்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு, அம்மாநில அரசு அனுமதித்திருக்க வேண்டும் என்பதையும் இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக