திங்கள், 16 நவம்பர், 2020

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர்! தமிழர்களின் பூர்வீக வழிபாடுகளை மறந்து வைதீக நெறிகளை கட்டாயப் படுத்தியவர்

 Image may contain: 1 person, outdoor, text that says 'ஈழத்து நண்பர்கள் ஆகச்சிறந்த தமிழ் பற்றாளர்களாக இருந்தும் கோயில்களில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் புகுந்தது ஏன்? என பல நாட்கள் எண்ணியதுண்டு. ஈழத்து மக்கள் எழுப்பிய சைவக் கோயில்களில் வைதீகமும், அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதமும் நுழைந்ததற்கு ஆறுமுக நாவலரும் ஒரு காரணம்'Dhinakaran Chelliah : · !!ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர்!! ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தலைசிறந்த தமிழ்,சமஸ்கிருத பண்டிதர்,அறிஞர் வித்வான், சைவ சமய காவலர் என்று புகழப்படுகிறார். ஆனால் அவர் பற்றி பலதரப்பட்ட கருத்துக்களை இணையத்தில் காணக்கூடியதாய் உள்ளது.கடந்த சில நாட்களாக அவர் எழுதிய சில நூல்களை வாசிக்க நேர்ந்தது, குறிப்பாக பாலபாடம்(பாகம் 1,2,3,4), சைவ வினாவிடை(புத்தகம் 1,2),சிவஆலய தரிசன விதி, சைவதூஷண பரிகாரம்,நித்திய கரும விதி, ஆறுமுகநாவலர் பிரபந்த திரட்டு(நல்லூர் த.கைலாசபிள்ளை திரட்டியது) மற்றும் சமய தீக்ஷதா அநுட்டானவிதி. இவை தவிர நாவலர் பற்றிய காணொளிகளையும் சிலவற்றைக் கேட்க முடிந்தது.நாவலரது நூல்கள் பல இன்றும் இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சமய வகுப்புகளுக்கு பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாணவ மாணவியர் படித்துவருகிறார்கள்.

தமிழ் நாடு போல அல்லாமல் இலங்கையில் அவரவர் சாரந்த சமயங்களை படிப்பது பள்ளிகளில் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது .    

நாவலர் அவர்களின் நூல்களை வாசிக்கும் போது ஒரு விடயம் மனதிற் ஆழமாய்த் தோன்றியது அது,       வைதீகம் நாவலரையும் உள்வாங்கிக் கொண்டுவிட்டது என்பதுதான்.12 வயதில் அவர் சமஸ்கிருதம் பயில வேத பாடசாலைக்கு சென்றார்.     அவர் சமஸ்கிருதம் பயின்றதற்கு சுவாரஸ்யமான கதைகள் உண்டு    .ஆனால் வேத வைதீக ஆகமங்களின் வர்ணாஸ்ரம ஆதிக்கத்தை அவரது அனைத்து எழுத்துக்களிலும் காண முடிகிறது.

அந்த அளவிற்கு வைதீக கொள்கை அவரை உள்வாங்கிக் கொண்டது எனலாம்.

பெரிய புராணம் பற்றி விளையாட்டாகப் பேசிய சொந்த அண்ணனைக் குறுவாளால் தலையைக் துண்டாக்கத் துணிந்தவர் நாவலர்.அண்ணன் இறக்கும் காலம் வரை அவருடன் பேசாமலேயே இருந்திருக்கிறார் நாவலர்.இராமலிங்க அடிகளின் திருஅருட்பா கோயில்களில் பாடப்பட்டதை கடுமையாக கண்டித்து வழக்குகள் தொடர்ந்திருக்கிறார்.
இதே தீவீரவாத அணுகுமுறையினை சைவ நாயன்மார்களில் சண்டேஸ்வரர்
முதல் கோட்புலி நாயனார் வரை பலர் கடைப்பிடித்ததைக் காணலாம். ஒரு வேளை திருஅருட்பா பாடப்பட்டிருந்தால் பெரிய சமுதாய மாற்றத்திற்கு உதவியிருக்கலாம்.ஆனால் நாவலரின் போக்கினால் சைவ தீவீரவாதம் வளர்ந்தது என்றே கூறலாம்.
ஈழத்து நண்பர்கள் ஆகச்சிறந்த தமிழ் பற்றாளர்களாக இருந்தும் கோயில்களில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் புகுந்தது ஏன்? என பல நாட்கள் எண்ணியதுண்டு.
ஈழத்து மக்கள் எழுப்பிய சைவக் கோயில்களில் வைதீகமும்,அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதமும் நுழைந்ததற்கு நாவலரும் ஒரு காரணம்.
ஒரு எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இவரது ஆக்கங்கள் இல்லை என்பார்கள், ஆனால் முழுக்க முழுக்க சமஸ்கிருத வார்த்தைகளை எல்லா நூல்களிலும் காண முடிகிறது.
பாலபாடம் பாகம் 4 ல் “திராவிடமென்னும் வடமொழி தமிழென்றாயிற்று” என்றே எழுதியிருக்கிறார்.அதாவது,தமிழ் வடமொழியிலிருந்து பிறந்தது என்கிறார்.இது ஒப்புக் கொள்ளக் கூடியதா?!
இலங்கை முழுக்க கிறித்தவம் பரவ விடாமல் தடுத்ததற்கு நாவலரது அயராத முயற்சியே காரணம் என்பர்.ஆனால் தமிழர்களின் பூர்வீக வழிபாடுகளை மறந்து வைதீக நெறிகளை கட்டாயப் படுத்தியவர் நாவலர் எனலாம்.
வைதீக முறைப்படி, மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ளபடி நாவலரும் தனது பாலபாடம் பகுதி 4 ல் “பெண்கள் இளமைப்பருவத்திலே பிதாவினாலும்,யெளவனத்திலே கணவனாலும்,மூப்பிலே புத்திரனாலும், காக்கத்தக்கவர்; ஆகையால் ஒரு போதும் பெண்கள் சுவாதீனரல்லர்” என்கிறார். ஆனால்,
இன்று கோயில்களில் இவரது குருபூஜையைப் பெண்கள்தான் முன்நின்று நடத்தி வருகிறார்கள்.
“திருக்கோயிலினுள்ளே போதற்கு யோக்கியர்களல்லாத சாதியர்கள் திருக்கோயிற் புறத்திலே பிரதக்ஷணம் பண்ணித் திருக்கோபுரத்தை நமஸ்கரித்துக் கடவுளைத் தோத்திரஞ் செய்யக்கடவர்கள்” என்கிறார் நாவலர்(பாலபாடம் பாகம் 4). கீழ்சாதியர் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை, வெளியிலிருந்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார் நாவலர். இதுதான் “கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்”என்பது.
இதே கருத்தை,பாலபாடம் (பாகம் 2, கேள்வி:318)நூலில் திருக்கோயிலினுள்ளே புகத்தகாத இழிந்த சாதியாரும், புறச் சமயிகளும், ஆசாரம் இல்லாதவரும் உட்புகா வண்ணந் தடுத்தல் ஆகியவை கோயிலுக்குச் செய்ய வேண்டிய உழவாரப் பணிகள் என்கிறார் நாவலர். அதாவது கீழ்சாதியினர் கோயிலுக்குள் நுழைவதை மற்றவர்கள் தடுக்க வேண்டும் என்கிறார்.ஆகம விதிகளின்படி கோயில் என்பது எல்லோருக்கும் பொதுவானதல்ல என்பதை இவரது எழுத்தும் நிரூபிக்கிறது.
வைதீக சனாதன வர்ணாசிர கொள்கையை கடைசிவரை கடைப்பிடித்து அதை மற்றவர்களிடத்திலும் வலியுறுத்தினார் என்பதை இவரது நூல்களும் எழுத்துக்களும் வரலாறும் நிரூபிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக