ஞாயிறு, 22 நவம்பர், 2020

வரவர ராவ் மரணப் படுக்கையில் இருக்கிறார்; மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம்

madrasradicals.com : வரவர ராவ் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் கவிஞரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றக்கூடாது எனவும், அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரவர ராவ் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பீமா கொரேகான் பேரணியில் நடைபெற்ற வன்முறைக்கு, அதற்கு முன்பு நடைபெற்ற எல்கார் பரிசத் கருத்தரங்கத்தில் பேசியது காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரவர ராவ் உள்ளிட்ட பல செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஊபா (UAPA) சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. 

வரவர ராவின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கடந்த மாதம் வரவர ராவின் மனைவி  உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். 81 வயதான படுத்த படுக்கையான நிலையில் உள்ள வரவர ராவுக்கு பிணை வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த பிணை வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே நடத்துமாறு கூறியது. அதே தீர்ப்பில் கவிஞர் வரவர ராவின் மருத்துவப் பரிசோதனை மனுவை விரைவாக பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். 

மூன்று மாதங்களாக சிறுநீர்ப்பை மாற்றப்படவில்லை

இதனால் வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. கவிஞர் வரவர ராவ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதாடுகையில், வரவர ராவ் உதவியாளர் கூட இல்லாமல் முற்றிலும் படுத்த படுக்கையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் டயப்பர்கள் மற்றும் சிறுநீர் குழாய்கள் பயன்படுத்தி வருவதாகவும், அந்த வடிகுழாய்களை மாற்றி உதவி செய்ய யாரும் இல்லாததால் கடந்த மூன்று மாதங்களாக மாற்றப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் அவருக்கு மூளைச் சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் செயலிழந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பீமா கோரேகான் வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், “வீடியோ இணைப்பு மூலமாக ராவ் மருத்துவ பரிசோதனைக்கு செய்து மேற்கொள்ளும்படி மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்ததாக சுட்டிக்காட்டினார். மேலும் அவசியம் ஏற்படுமாயின் மட்டுமே நேரடியான உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

கடந்த வாரம், மும்பை உயர்நீதிமன்றம் கவிஞர் வரவர ராவை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் மட்டுமே மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதித்திருந்தது, அவரது வழக்கறிஞர் அவரை நானாவதி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார். கவிஞர் வரவர ராவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என்று ஜெய்சிங் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் சிறைபடுத்தபட்டுள்ள நிலைமை “கொடூரமான, மனிதாபிமானமற்றதாக” இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ராவின் பிணை மனுமீதான விசாரணை  வருவதற்கு முந்தைய நாள் உச்ச நீதிமன்றம் தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கியது. அதில் உச்சநீதிமன்றம் “உயர்நீதிமன்றங்கள் பல வழக்குகளில் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுப்பதாக”சுட்டிக்காட்டி தனிப்பட்ட சுதந்திரம் குறித்தான கரிசனையை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக