திங்கள், 2 நவம்பர், 2020

நீலகிரி மணப்பெண்: திருமணத்தை நிறுத்த இதுதான் காரணமா? பெண்ணுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை!

 நீலகிரி மணப்பெண்: திருமணத்தை நிறுத்த இதுதான் காரணமா?

minnambalam :நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். இருவீட்டாரது உறவினர்களும் அவர்களைச் சூழ்ந்து வாழ்த்துவதற்குத் தயாராக இருந்தனர்.

மணமகனும் தாலியை கையில் எடுத்துக்கொண்டு கட்டுவதற்காகத் தயாராக இருந்தார். படுகர் இன மரபுப்படி மணமேடையில் மணப்பெண் மூன்று முறை திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு தாலி கட்டுவது தான் வழக்கம். அதன்படி சம்மதம் கேட்டபோது, இருமுறை அமைதியாக இருந்த மணப்பெண் பிரியதர்ஷினி மூன்றாவது முறையாகக் கேட்கையில் சம்மதம் இல்லை என்று கூறி தாலி கட்ட வந்த ஆனந்தின் கையை தடுத்து திருமணத்தை நிறுத்தினார்.

பின்னர் தான் விரும்பும் ஒருவர் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்று கூறி மண மேடையிலிருந்து செல்ல முற்பட்டார். அதோடு, தான் விரும்பும் அந்த நபருக்கு திருமணமாகி குழந்தையும் உள்ளது. குழந்தையையும் இனி நான் தான் பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார். இதை மறுத்து பிரியதர்ஷினியை மேடையிலிருந்து இறங்கத் தடுத்த உறவினர்கள் அவரை தாக்க முற்பட்டனர். இது குறித்த வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அதோடு திருமணத்தை நிறுத்தியதால் மனமுடைந்த பெற்றோர் பிரியதர்ஷினியை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், இதனால் காதலன் வருகைக்காகக் காத்திருந்த பிரியதர்ஷினி அவரைத் தேடி சென்னை கிளம்பியதாகவும் தகவல்கள் பரவின. அதோடு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்ததால் தான் பிரியதர்ஷினி வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த சூழலில் பிரியதர்ஷினி, தனக்கு இந்த திருமணம் பிடிக்காததால் தான் நிறுத்தினேன். தற்போது பெற்றோருடன் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். பிரியதர்ஷினி பெற்றோருடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்.மணப்பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், ஒரு சின்ன பிரச்சினையை ஊதி பெரிதாக்க வேண்டாம். எங்கள் பெண்ணுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்பதால் தான் அப்படிப் பேசிவிட்டார். அதைத் தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை. தற்போது பெற்றோருடன் வீட்டில் தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக