ஞாயிறு, 8 நவம்பர், 2020

மூன்றாவது அணி அமைக்க காய் நகர்த்துகிறாரா கமல்?

 dinamalar.com : கழகங்களுடன் கூட்டணி இல்லை' என்று கூறியபடியே, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், சத்தமில்லாமல் மூன்றாவது அணி அமைக்க வசதியாக, காய்களை நகர்த்தி வருகிறார் என, அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே, லோக்சபா தேர்தலில், கமலின் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிட்டது. ஒரு சில இடங்களில் மூன்றாவது இடத்தை பிடித்ததோடு, பல இடங்களில் கணிசமான ஓட்டுக்களைப் பெற்றது. தற்போது, தமிழக சட்டசபை தேர்தலில், களமிறங்க தீவிரம் காட்டி வரும் கமல், தனியார் நிறுவனம் ஒன்றின் வாயிலாக, கள ஆய்வு நடத்தியதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, கமல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: குறுகிய காலகட்டத்தில், ஒரு லட்சம் பேர், கட்சியில் புதிதாக இணைந்துள்ளனர். இது, எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. லோக்சபா தேர்தலில், 100 ஓட்டுக்கு கீழே இருவர்; 1,000 ஓட்டுக்கு கீழ், ௧௬ பேர், 5,000 ஓட்டுக்கு கீழ், ௪௦க்கும் மேற்பட்டோரும் தோற்றுள்ளனர். எங்கள் கட்சி, 10சதவீதத்திற்கும் அதிக ஓட்டுக்களை பெற்றது.

லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் பெற்ற ஓட்டுக்களை கணக்கிட்டால், 100 முதல்,- 150 இடங்களில் மிகப்பெரிய தாக்கத்தை மட்டுமின்றி, வெற்றியையும் பெற முடியும். வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. விரைவில், அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மூன்றாவது அணி?

கூட்டணி பேச்சில், தி.மு.க.,வுடன் உரசல் ஏற்பட்டால், காங்கிரஸ் வெளியேறி, நம்முடன் இணையலாம் என, கமல் கட்சியினரால் பேசப்படுகிறது. மேலும், 'கழகங்களுடன் கூட்டணி இல்லை' எனக்கூறும் கமல், சத்தமின்றி மூன்றாம் அணிக்கு காய் நகர்த்தி வருகிறார்.
நேற்று, 66வது பிறந்தநாள் கொண்டாடிய கமலுக்கு, ராகுல் போனில் வாழ்த்து கூறியுள்ளார். அப்போதே கூட்டணி பேச்சும், சத்தமின்றி தொடங்கப்பட்டிருக்கலாம் என, கமல் கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றனர். - -நமது நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக