ஞாயிறு, 8 நவம்பர், 2020

கேரளாவிலும் சிபிஐ விசாரணை நடத்த முடியாது; உரிமத்தை ரத்து செய்தது கேரள அரசு

madrasradicals.com : கேரளா மாநிலத்திற்குள் விசாரணைகள் நடத்துவதற்கு மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு(CBI) கொடுக்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்துள்ளது. இதற்குப் பின் மத்திய புலனாய்வுப் பிரிவு கேரளா மாநிலத்திற்குள் விசாரணை நடத்த அம்மாநில அரசின் அனுமதியை பெறவேண்டியது கட்டாயமாகிறது. கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. அதையடுத்து தற்போது கேரளாவும் இதே முடிவை எடுத்திருக்கிறது. டெல்லி சிறப்பு காவல் சட்டம் என்ற சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வுப் பிரிவு(CBI) செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் காவல்துறை அதிகாரம் அந்தந்த மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் இருப்பதால் குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் விசாரணை நடத்துவதற்கு அந்தந்த மாநிலங்களின் அனுமதி பெறுவதும், அந்த அனுமதியை தொடர்ச்சியாக புதுப்பிக்கும் நடைமுறையும் கட்டாயமாக உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் இந்த ஆண்டு தொடக்கத்தில் சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தது. கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிபிஐ-க்கு வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சில தினங்களுக்கு முன்னர் தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கும் பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள்  தங்கள் அதிகார வரம்பை மீறி மாநிலத்தில் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார்.

கேரளாவின் இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளதாக ‘தி வீக்'(‘THE WEEK’) பத்திரிகை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் கனம் ராஜேந்திரன், மத்திய விசாரணைக் குழுவினை வரவிருக்கும் தேர்தலில் அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்த முற்படுவது சரியான அணுகுமுறை அல்ல என்று தெரிவித்துள்ளார். 

கேரளாவில் தற்போது பரவலாக நடைபெறும் ஊழலை மறைப்பதற்காகவே கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக, கேரளாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். “கேரள அரசு சிபிஐ-க்கு அஞ்சுகிறது” எனவும் “தேசிய அளவில் சிபிஐ மீது கம்யூனிஸ்ட் கட்சி  இதே நிலைப்பாட்டுடன் தான் இருக்கிறதா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் ” என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

லைஃப் மிஷன்( LIFE Mission) ஊழல்  குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருவதை அடுத்து கேரளா அரசு தற்போது  அனுமதியை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார். 

2017-ம் ஆண்டு கேரள அரசு சிபிஐ-க்கு அனுமதி வழங்கியிருந்தது. கேரள முதலமைச்சரின் அலுவலகத்தில் (பெயர் தெரிவிக்க விரும்பாத) அதிகாரி ஒருவர் ‘தி வீக்’ பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது, மாநில அரசுகளைத் தாக்க ஒன்றிய அரசு சிபிஐ-யை பயன்படுத்துவதே பினராயி விஜயன் அரசு இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் எனவும், “லைஃப் மிஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிபிஐ காட்டிய அவசரம் முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது” எனவும் தெரிவித்துள்ளார்.

லைஃப் மிஷன்(LIFE Mission) வழக்கு

லைஃப் மிஷன் என்பது வீடு மற்றும் நிலமற்றவர்களுக்கான வீடு கட்டித் தருவதற்கான கேரள மாநில அரசின் திட்டமாகும். வடக்கஞ்சேரியில் ஒரு மருத்துவமனை கட்டமைப்பது உள்ளிட்டவையும் இத்திட்டத்தில் அடங்கும். தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு வரும் ஐக்கிய அரபு நாட்டின் முன்னாள் தூதரக ஊழியர் ஸ்வப்னா சுரேஷ்க்கு ரூ.1 கோடியை கமிஷனாக உனிடக் கட்டிட நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக தேசிய புலனாய்வு அமைப்பிடம் வெளிப்படுத்தியதையடுத்து இத்திட்டம் சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக