தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி 1926-ம் ஆண்டு கரூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்களால் தொடங்கப்பட்டது. 93 வருட பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான நஷ்டம் காரணமாக நிதி நெருக்கடியில் இயங்கி வந்தது. கடந்த ஆண்டு முதலே மூலதனத்தைப் பெருக்குவதற்காக முதலீட்டாளர்களைத் தேடிக் கொண்டிருந்தது.
லட்சுமி விலாஸ் வங்கியின் உயர்மட்ட குழுவினர் வங்கியை மீட்பதற்கான முறையான திட்டத்தை எதுவும் முன்வைக்காத காரணத்தினால் கடந்த செவ்வாய்கிழமை வங்கியின் செயல்பாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக ஆர்.பி.ஐ அறிவித்தது.
“எந்தவொரு சாத்தியமான திட்டமும் இல்லாத நிலையில்,வங்கியின் முன்னேற்றம் குறைந்து வருவது மற்றும் வாராக் கடன்கள் (NPA- NonPerforming Asset) பெருகிவரும் காரணங்களினால் இழப்புகள் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி தனது நிகர மதிப்பை உயர்த்த மற்றும் தொடர்ச்சியான இழப்புகளைச் சமாளிக்க போதுமான மூலதனத்தை திரட்ட முடியவில்லை.” என ஆர்.பி.ஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு
முதல் கட்டமாக நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 16, 2020 வரை வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு வங்கி ஒழுங்குமுறைகள் சட்டப் பிரிவு 45-ன் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மத்திய அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின்பு தான் விதிக்கப்பட்டது.
இதன்படி லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளரால் (வங்கியில் எத்தனை கணக்கு வைத்து இருந்தாலும்) ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க இயலாது எனவும், அப்படி 25 ஆயிரத்திற்கும் மேல் வங்கி பணம் கொடுக்க விரும்பினால் அதற்கு ஆர்.பி.ஐ-ன் அனுமதிக் கடிதம் இனி தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
வங்கியின் இயக்குநர்கள் குழுவினருக்கு மேலாக கனரா வங்கியின் முன்னாள் தலைவரான டி.என்.மனோகரனை லட்சுமி விலாஸ் வாங்கியின் நிர்வாகியாக தற்போது நியமித்துள்ளது. “இது வாடிக்கையாளர்களின் முதலீடுகளை பாதுகாப்பதற்காக செய்யப்பட்டுள்ளது” என ஆர்.பி.ஐ விளக்கம் தெரிவித்திருக்கிறது.
லட்சுமி விலாஸ் வங்கி முன்வைத்த திட்டங்கள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லட்சுமி விலாஸ் வங்கி (India bulls housing finance)இந்தியா புல்ஸ் எனும் வீட்டு வசதி நிதி நிறுவனத்துடன் இணைவதற்கான திட்டத்தை முன்வைத்தபோது ரிசர்வ் வங்கி அதை ரத்து செய்தது. பின்னர் கிளிக்ஸ் (Clix Capital Ltd) நிறுவனத்துடன் லட்சுமி விலாஸ் வங்கி இணைய இருந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்தே லஷ்மி விலாஸ் வங்கி மீது ஆர்பிஐ இந்த நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது.
சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் திட்டம்
தற்போது லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த டிபிஎஸ் வாங்கியுடன் இணைப்பது தொடர்பான வரைவுத் திட்டத்தை ஆர்.பி.ஐ முன்வைத்தது. இந்த நடவடிக்கை லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை ஆர்.பி.ஐ கையில் எடுத்த சில மணி நேரங்களிலேயே முன்மொழியப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவை டிபிஎஸ் வங்கி நிறுவனத்தின் தலைமை தான் இனி முடிவெடுத்து அறிவிக்கும்.
இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைத்தால் டிபிஎஸ் வங்கி ரூ.2,500 கோடியை லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி மூலதனத்திற்குள் செலுத்த வேண்டும். இது மட்டுமன்றி இந்தியா முழுவதும் 20 கிளைகளை மட்டுமே கொண்ட டிபிஎஸ் வங்கி, நாடு முழுவதும் 550 க்கும் மேற்பட்ட கிளைகளையும், 900-க்கும் மேற்பட்ட ஏடிஎம்களையும் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைந்து நாட்டில் தனது கால்தடத்தை விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஆர்.பி.ஐ கட்டுப்பாட்டிற்கு செல்லும் இரண்டாவது தனியார் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக யெஸ் வங்கியின் நிர்வாகத்தை ஆர்.பி.ஐ கைப்பற்றியது. பின் பொதுத்துறை வங்கியான SBI ரூ.7,250 கோடியை செலுத்தி, யெஸ் வங்கியின் 45 சதவீத பங்குகளை கைப்பற்றி மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக