விவி மினரல்ஸ் நிறுவனரும் தொழிலதிபருமான வைகுண்டராஜன், தன்னை கடத்தி கொலை செய்ய கூலிப்படையினர் முயற்சி செய்வதாகவும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் நெல்லை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும், தன்னை கடத்துவதற்கு கண்காணித்த நபரை பிடித்துக்கொடுத்ததாகவும் அவரை போலீசார் விட்டுவிட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகர காவல்துறையிடம் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய வைகுண்ட ராஜன் கூறியதாவது, “பொறுப்பு போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனது தம்பி மகன் செந்தில், நான் தனியாக போகிறேனா? எங்கே போகிறேன் என்று என்னை கண்காணித்து பின்தொடர்ந்து கண்காணிப்பதற்காக 10-15 ஆட்களை தயார் செய்து வைத்துள்ளார். அப்படி நேற்று என்னை கண்காணித்த ஆட்களில் 2 பேர்களை பிடித்துவிட்டோம். பிடித்த ஆட்களில் ஒருவரை உதவி காவல் ஆணையரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தோம்.
புகார் மனுவும் எழுதிக் கொடுத்துவிட்டு அந்த நபரின் போனில் இருந்து எடுக்கப்பட்ட 35 வீடியோ, என்னை பின் தொடர்ந்தது, போட்டோக்கள் யார் யாருக்கு அனுப்பப்பட்டது, எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறார் என்று அந்த நபரின் கைப்பட எழுதிக் கொடுத்த வாக்குமூலம் கடிதம் உள்பட எங்களுடைய மனுவையும் பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையரிடம் கொடுத்துவிட்டு வந்தோம். அவர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். பாளையங்கோட்டை காவல் நிலையம் என்பது காவல் நிலையம் அல்ல அது வழக்கறிஞர் சிவக்குமார் காவல் நிலையம். அங்கே எல்லாவற்றையும் வழக்கறிஞர் சிவக்குமார்தான் முடிவு செய்கிறார். அவர், கடந்த மாதம் நான் விஜயவாடாவில் இருக்கும்போது ஒரு தீண்டாமை வழக்கை என் மீது போட வைத்தார்கள். தகவல் தெரிந்து நான் விஜயவாடாவில் இருந்து கமிஷனரிடம் பேசினேன். ஏடிஜிபி-யிடமும் பேசினேன். உடனே அவர் எஃப்.ஐ.ஆர் எல்லாவற்றையும் அழித்துவிட்டு வெறும் புகார் என்று கூறிவிட்டார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி நான் ஏற்கெனவே தனியாக ஒரு மனு கொடுத்துள்ளேன். கடந்த 14ம் தேதி வழக்கறிஞர் சிவக்குமார், காவல் ஆய்வாலர் சோமசுந்தரமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளேன். அந்த காவல் நிலையம் அவர்கள் சொல்வதைக் கேட்பதால், லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒரு புகார் மட்டும் பதிவு செய்துவிட்டு அந்த நபரை விட்டுவிட்டார்கள். அதனால், நான் டிஐஜியிடம் புகார் கொடுத்துள்ளேன். அதற்கு அவர் நான் நேர்மையாக 4 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.
செய்தியாளர்கள் நேற்று நீங்கள் என்ன புகார் கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த வைகுண்டராஜன், “அவர்கள் என்னை கடத்துவதற்கு வந்திருக்கிறார்கள். அவரை பிடித்துக்கொடுத்தால் அந்த குற்றவாளியை விடக்கூடாது இல்லையா.
அந்த நபர்களை பிடித்ததும் பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையர், துணை ஆணையருக்கு கூறுகிறேன். ஆனால், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கறிஞரை அவர்கள் ஆட்களை நான் கடத்திவிட்டதாக புகார் கொடுத்து பதிவு செய்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு நான் என்ன செய்வது.
இதில் நான் உயர் அதிகாரிகளையோ அரசையோ குறை சொல்லவில்லை. குறிப்பாக 2 காவல் ஆய்வாளர்கள் மீது புகார் கூறுகிறேன்.
நேற்று முன்தினம் ஒருவர் எனக்கு போன் செய்து உங்களை 3 – 4 நாட்களுக்குள்
உங்களை கொலை செய்துவிடுவார்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.
அப்படி சொன்னால் நான் விழிப்போடுதானே இருப்பேன். அதனால் எனை பின் தொடர்ந்து
கண்காணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பொலீசார்
விசாரிக்க வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு கொடுக்க
வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக