அவர் இப்படி கையறு நிலையை வெளியே சொல்ல வேண்டிய அளவுக்கு அவர் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்றே புரிந்து கொள்ள முடியும். பிஜேபி தொடர்பாக இந்தியாவின் எல்லா மாநில விவகாரங்களையும் அறிந்து வைத்திருக்கும், முடிவெடுக்கும் அமித் ஷா, ரஜினிக்கு இறுதிக் கெடுவை விதித்திருக்கலாம். மோடியோ அமித் ஷாவோ சென்னை வருகையில், நேரில் சந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கலாம். அல்லது, டெல்லி வந்து மோடியை சந்தியுங்கள் என்று அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, வெளியே செல்வதை தவிர்க்கும் ரஜினி, இதற்கு எப்படி சம்மதிப்பார் ? உயிரை பணயம் வைக்க யாருக்குத்தான் மனது வரும் ? இதன் காரணமாகவே, என்னை தயவு செய்து விட்டு விடுங்கள் என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரஜினிக்கு விஜயகாந்த் போலவோ, குஷ்பூ போலவோ அரசியலில் இறங்கியே ஆக வேண்டிய வேட்கையெல்லாம் ஒன்றும் இல்லை. கமல் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது உறுதி என்பதை அறிந்தே அவரும் அரசியல் எண்ணத்தை அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ற செய்தி, தனது திரைப்படங்களின் வியாபாரத்துக்கு உதவுகிறது என்பதை அறிந்தே ரஜினி தொடர்ந்து அதை கடந்த 25 வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். இன்று, அது மிக மிக சிக்கலானது என்பதை உணர்ந்துள்ளார்.
கமல், ரஜினி இருவரும் பாலசந்தர் பள்ளியில் பயின்றவர்கள்தான் என்றாலும், பாலச்சந்தர் கமலைத்தான் செல்லப் பிள்ளையாக வைத்திருந்தார் என்பதை ரஜினி கடைசி வரை மறக்கவேயில்லை. 1979ல் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு பிறகு அவர்கள் இருவரும் பரஸ்பரம் கலந்தாலோசித்து எடுத்த முடிவின்படி, இணைந்து நடிப்பதை தவிர்த்தார்கள். அதன் பிறகு இருவரும் தங்களது பாதைகளில் உச்சத்தை தொட்டார்கள். ஆனால் தனக்கும் திறமையான நடிக்கும் திறன் இருந்தும், வியாபார சிக்கல்கள் காரணமாக தன்னால் நடிப்புக்கு தீனி போடும் பாத்திரங்களில் ரஜினியால் நடிக்கவே முடியவில்லை. மாறாக கமல் பல்வேறு புதிய பரிசோதனைகளை மேற்கொண்டு, நடிப்பில் உச்சங்களை தொட்டார். தேசியவிருது, பிலிம்பேர் என்று விருதுகளை வாங்கிக் குவித்தார். இதன் காரணமாக ரஜினியின் மனதில், கமல் ஒரு அல்டார் ஈகோவாகவே மாறிப் போனார்.
தொண்ணூறுகளில் இருந்த தமிழகம் இன்று இல்லை என்பதை ரஜினி தாமதமாகவே உணர்ந்தார். 2017ல். கட்சி தொடங்கப் போகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு, மக்கள் மன்றத்தை நிர்வகிப்பதில் சிக்கல், நிர்வாகிகளை நியமிப்பதில் சிக்கல், நம்பியவர்கள் ஏமாற்றினார்கள், அவரை சுற்றி வளைத்த பார்ப்பன கூட்டம் அவரை தவறாக வழிநடத்தியது.
ரஜினிக்கு இயல்பாக இருக்கும் நல்ல மனதின் காரணமாக அவர் யாரையுமே பகைத்துக் கொள்ள மாட்டார். தொண்ணூறுகளில் ஜெயலலிதாவோடு ஏற்பட்ட மோதலுக்கு பிறகு அவர் ஜெயாவை பகைக்கவேயில்லை. தைரியலட்சுமி என்று புகழாரம் சூட்டினார். ரஜினி தன் வாழ்நாளில் சறுக்கியது, குருமூர்த்தி என்ற பார்ப்பனராலேயே. அவசியமேயின்றி, பெரியாரை வம்புக்கிழுக்க வைத்தது குருமூர்த்தியே. அதனால் எழுந்த பெரும் சர்ச்சைக்கு பிறகு அவருக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. அச்சம்பவங்களையெல்லாம் நினைத்து ரஜினி வருந்தினார்.
படோடாபத்தோடு கட்சி தொடங்கிய கமல் மக்களவைத் தேர்தலில் வெறும் 5 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. விஜயகாந்த் இன்று இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார். அரசியல் எளிதல்ல என்பதை ரஜினி உணரத் தொடங்கினார்.
தான் பேசுவதெல்லாம் சர்ச்சையாவதை ரஜினி விரும்பவேயில்லை. அது அவரது குணாதிசயத்துக்கு எதிரானது.
திமுக எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பனக் கூட்டம்தான் ரஜினியை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது.
பொது முடக்கத்துக்கு முன், மார்ச் 12ம் தேதி, ரஜினி ஒரு முடிவை அறிவிக்கிறார் என்பது ஊடகங்களில் செய்தியாக பரவியது. அன்றே ரஜினி அரசியலில் இறங்கப் போவது இல்லை என்று அறிவிக்க இருந்தார். ரஜினியை விட்டு விடக் கூடாது என்ற பார்ப்பன கூட்டம், 11ம் தேதி இரவு, வெளியூர் பதிப்புகளெல்லாம் முடிந்த பிறகு, தினமணியில் லேட் சிட்டி எடிஷனுக்காக ஒரு கட்டுரை எழுதப்பட்டது. எழுதியவர் தினமணி ஆசிரியர் வைத்தியனாதன். எழுதச் சொன்னவர் கராத்தே தியாகராஜன்.
இறுதி நேரத்தில், தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்ற சமரசம் இரு தரப்பாலும் எட்டப்பட்டது.
ரஜினி ஒரு கட்டத்தில் அது உண்மை என்றே நம்பினார். நாள் ஆக ஆகத்தான் அவர்கள் தன்னிடத்தில் பொய்யுரைக்கிறார்கள் என்பதே ரஜினிக்கு புரிந்தது. இந்த நேரத்தில் அழுத்தமும் அதிகமாகவும், ஒரு கட்டத்தில் ரஜினி கையை தூக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
ரஜினியை ஒரு நடிகராக எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அவரின் அரசியல் அவதாரத்தை அவரால் ஆதாயம் அடைய நினைப்பவர்களைத் தவிர வேறு யாராலும் விரும்பப்படவில்லை.
ரஜினி அரசியலில் நுழையப்போவதில்லை என்பதை அறிந்து அவர் முடிவை கைவிட வைக்கும் இறுதிக் கட்ட முயற்சிதான் பிஜேபி ஆதரவு வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஏ.சி.சண்முகம். அவர் அப்போதே பிஜேபியில் சேரத் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அவரை ரஜினிக்கான பேக்கப்பாக வைத்திருந்தது பிஜேபி. ஏ.சி.சண்முகத்தின் வேண்டுகோளையும் நிராகரித்தார் ரஜினி.
இப்படி நிராகரிப்பதால், வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளால் சிக்கலை சந்திக்க நேரிடும் என்ற ஆபத்தையும் மீறியே ரஜினி இந்த முடிவுக்கு வந்துள்ளார். அந்த அளவுக்கு ரஜினி அரசியலை வெறுத்து விட்டார்.
இனி, ரஜினியை வைத்து எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று திரிந்த ஒரு கூட்டம்தான் இன்று பிழைப்புக்கு வழியின்றி அலைகிறது. இன்னமும், ரஜினி வரத்தான் போகிறார் என்று பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால் ரஜினி இனி வரமாட்டார்.
கொரொனா முடிந்ததும், ரஜினி, ஒரு முழுநேர நடிகராக, அவர் இத்தனை நாள் ஆசைப்பட்ட வயதுக்கேற்ற நடிக்கும் திறன் அளிக்கும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம்.
ரஜினி மேலும் பல சில்வர் ஜூபிளிகளை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும்.
இன்றல்ல… என்றுமே அவர் சூப்பர் ஸ்டார்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக