வியாழன், 12 நவம்பர், 2020

தேஜஸ்வி : வெற்றி திருடப்பட்டுள்ளது.. தபால் ஓட்டுகளை மட்டும் திரும்ப எண்ணுங்க.. நாங்க ஜெயிச்சிருவோம்-

Veerakumar  - tamil.oneindia.com :  பாட்னா: பீகாரில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 
அங்கு வெற்றிக்கு 122 தொகுதிகள் தேவைப்பட்டது. ஆனால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி 110 தொகுதிகளில் மட்டும் வெல்ல முடிந்தது. அதில் பல தொகுதிகள் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வசம் சென்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த 10ஆம் தேதி இரவே, முறைகேடு நடப்பதாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் குற்றம் சாட்டியிருந்தது. மிகக்குறைவாக வாக்கு எண்ணிக்கை உள்ள தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வந்த தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாகவும், முதல்வர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளுக்கு நெருக்கடி சென்றதாகவும் தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்திருந்தார். 
கவலையே இல்லை இந்த நிலையில் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்த தேஜஸ்வி யாதவ் மேலும் கூறுகையில், நிதீஷ் குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது பற்றி அவர்கள் தரப்பு கொஞ்சம் கூட கவலைப்படவில்லை ஆனால் முதல்வர் பதவிக்கு மட்டும் அவருக்கு ஆசை இருக்கிறது.


முதல்வர் பதவிக்கு ஆசைப்படாதீர்கள் நிதிஷ்குமாரிடம் கொஞ்சமாவது அரசியல் தார்மீக நியாயம் இருக்குமானால் அவர் மீண்டும் முதல்வராக கூடாது. மக்களின் விருப்பப்படி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாஜக இரண்டாவது இடத்தையும், ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இப்படி இருக்கும்போது, மீண்டும் முதல்வர் பதவியில் சென்று அமர வேண்டும் என்று நிதீஷ் குமார் ஆசைப்படாமல், மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டும்.

திருடப்பட்ட வெற்றி அரசியலிலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் நிதிஷ்குமார் இருக்கிறார். இப்போது மரியாதைக் குறைவான செயல்களில் ஈடுபடுவது சரியாக இருக்காது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஓட்டு போட்டனர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி, பணபலம், ஆள்பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு வெற்றியை திருடி வைத்துக் கொண்டு விட்டது. இது திருடப்பட்ட வெற்றி.

தபால் வாக்கு முறைகேடு ஏனென்றால் பல தொகுதிகளில் தபால் வாக்குகள் கடைசியில்தான் எண்ணப்பட்டுள்ளன. அவை எப்போதுமே முதலில் எனப்படுவதுதான் வழக்கம். சில தொகுதிகளில் சுமார் 900 தபால் வாக்குகள் செல்லாது என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றிக்கு நெருக்கமாக இருந்ததோ அங்கெல்லாம் இந்த தபால் வாக்குகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே தபால் வாக்குகளை பழையபடி எண்ண வேண்டும். அவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். 20 தொகுதிகளில் நாங்கள் மிக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோற்றுள்ளோம். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக