சனி, 14 நவம்பர், 2020

நாம ஜெயிக்கலேன்னா வேற யார் ஜெயிப்பா..? இப்போ ஜெயிக்கலேன்னா வேற எப்போ ஜெயிப்போம்.?

Add caption
Karthikeyan Fastura : · நான் ஒருவேளை தொழில் முனைவோராக இல்லாமல் போயிருந்தால் எனக்கும் சூரரைப்போற்று படம் ரொம்பவும் நாடகத்தன்மை வாய்ந்த, செயற்கையான, அதீத ஒன்றாக தெரிந்திருக்கும். கிண்டல் கூட செய்திருப்பேன். நல்ல வேலையாக நான் அதுபோன்ற சராசரி வட்டத்துக்குள் சிக்காமல் போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் தொழில் முனைவோராக இருக்கிறேன். நான் அந்தப் படத்தின் கதைக்குள் செல்லவில்லை. என் கதையை பகிர்கிறேன்பிறந்தது மதுரை என்றாலும் எட்டாம் வகுப்பு வரை சிங்கம்புணரி என்ற சின்ன டவுனில் தான் பள்ளி வாழ்க்கை. என் தந்தையின் சேர்த்து என் தாத்தாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். என்னையும் சேர்த்து மொத்தம் 13 பேரன்கள், அஞ்சு பேத்திகள். அதில் கல்லூரியை தொட்டது நான் மட்டுமே. சொந்த பந்தங்களையும் சேர்த்தாள் முதன்முதலில் முதுகலை பட்டம் பெற்றவனும் நானே. என் மனைவி ரஞ்சியின் குடும்பத்திலும் அவள் சொந்த பந்தத்திலும் அவள்தான் முதல் தலைமுறை முதுகலை பட்டதாரி.
12 வருடங்கள் ஐடி துறையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்தேன். 2015 டிசம்பர் 31ஆம் தேதியுடன் வேலையை உதறும் போது நான் வாங்கிய சம்பளம் மாதம் ஒன்னரை லட்சம். Zoho, FIS, PWC பொன்ற உலகின் பெரு நிறுவனங்களில் பணி செய்திருக்கிறேன். என்னுடைய Usability துறையில் தேடித்தேடி புது விஷயங்களை கற்றதனால் பணி செய்த காலங்களில் யாருக்கும் அடங்கிப் போனதாக சரித்திரமே இல்லை. என் வேலையில் மென்பொருளைப் பயன்படுத்தும் கடைசி பயனாளி தான் எனக்கு முக்கியம். நான் அவனுக்காகத்தான் மென்பொருளை வடிவமைக்கிறேன். அவனுக்கு எளிதாக இருந்தால்தான் அந்த மென்பொருள் வெற்றி அடையும். அதுதான் Usability.
2016இல் முழுநேர தொழில் முனைவோராக இறங்கி வேலை செய்தேன். பணியிலிருந்த கடைசி நான்கு வருடங்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் எனக்கு வேலை இருக்காது. அப்படி சொகுசாக இருந்தவன் ஸ்டார்ட்அப் வாழ்க்கையில் பணிக்கு என்று தனி நேரமில்லாமல் எல்லா நேரங்களிலும் வேலை செய்வேன். ஆனால் அதெல்லாம் ஒரு கஷ்டமாக தெரியாது. நமக்கு பிடித்ததை தான் செய்கிறோம்.
உண்மையான சோதனை கையில் இருந்த சேமிப்பு எல்லாம் கரைந்து தொழிலை காக்க வேண்டி கடன் பெற்று, அதுவும் போதாமல் மனைவியின் நகைகள் அனைத்தும் வங்கியில் அடமானம் வைத்தோம். ஒரு நண்பர் மூலமாக அரசாங்க தொழில் கடன் பற்றி அறிந்து அதற்கு விண்ணப்பித்து, மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலகம் என்று அலைந்து அந்தத் திட்டத்திற்கு நான் தேர்வானாலும் இறுதியில் வங்கி மேலாளர்கள் கடன் கொடுக்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் பதில் என்னிடம் இருந்தது. சான்றிதழ்கள் இருந்தது. தேவைக்கும் அதிகமாகவே தகுதியும் இருந்தது. ஆனாலும் கொடுக்கவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் கொடுக்கிறேன் என்று சொல்லவும் மாட்டார்கள் கொடுக்கமாட்டேன் என்று சொல்லவும் மாட்டார்கள். நாளைக்கு வாருங்கள் என்று அலைய விடுவார்கள். ஆறு மாதங்கள் ஏறாத வங்கிகள் இல்லை. எந்த வங்கியும் தொழில்கடன் கொடுக்க முன்வரவில்லை
மறுபக்கம் எனது தனிநபர் கடன் சுமை ஏறிக்கொண்டே இருந்தது. நிறைய ஏஞ்சல் நெட்வொர்க், வென்ச்சர் கேப்பிட்டல் என்று என்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்தேன். நான் ஒன்றும் கோடிகளில் முதலீடு கேட்கவில்லை சில லட்சங்களில் தான் கேட்டேன். என்னுடன் படித்த நண்பன் ஒருவனும், உடன் வேலை செய்த நண்பன் ஒருவனும் ஒரு சிறு முதலீடு செய்தார்கள். அந்த நேரத்தில் அது எனக்கு மிகப்பெரும் முதலீடு. இன்னொரு பக்கம் எங்கள் ஸ்டார்ட்அப் பல அங்கீகாரங்களை, விருதுகளை பெற்றது. Economic Times Now Channal வரை பெரும் மேடைகளை பார்த்துவிட்டோம்.
இதில் விந்தை என்னவென்றால் எங்கள் ஐடியா எங்களுக்கு தொடர்ந்து வருவாயை கொடுத்துக் கொண்டே இருந்த ஒன்றுதான். அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்குத் தான் எங்களுக்கு பெரும் முதலீடு தேவைப்பட்டது. இந்த சமயங்களில் பல விஷயங்களை நான் புரிந்துகொள்ள முடிந்தது. மத்திய மாநில அரசுகள் தொழில் முனைவோர்களுக்கு மிகப்பெரிய அளவில் கடன் திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான தொழில் முனைவோர்களை சென்று சேர்வதில்லை. அதற்கு பல தடைகள் இருந்தன. இன்றும் இருக்கின்றது.
மறுபக்கம் பல புதிய தொழில்முனைவோர்கள் தங்கள் கனவுகளை அடைய மிகப்பெரும் போராட்டத்தை செய்யவேண்டியிருக்கிறது. அரசாங்கங்கள் திட்டம் தீட்டி, நிதி ஒதுக்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தினாலும் தொழில் முனைவோர்களுக்குஅவர்களுக்குத் தேவையான முதலீடு வங்கிகள் செய்வதில்லை. பல ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்கள் மிக நல்ல ஐடியாவும், அதற்குத் தேவையான ஊக்கமும் அறிவும் இருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் பலப்பல சிரமங்களை அடைவதை கண்ணாரக் கண்டேன்.
தொழில்முனைவு கூட்டங்கள் அனைத்தும் ஏதோ மதப் பிரச்சாரக் கூட்டம் போல வெற்று நம்பிக்கைகளை மட்டுமே விதைப்பையாக இருக்கின்றன. தொழில்முனைவோர்களுக்கு கை கொடுப்பவையாகவோ, அவர்களின் பிரச்சனைகளை புரிந்து அதற்கு தீர்வு கொடுப்பவையாகவோ இல்லவே இல்லை. இது போதாதென்று இதற்குள் சாதிமத வர்க்க அரசியல் வேறு உள்ளிருக்கிறது.
நம்மால் அந்த அளவிற்கு எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு சொம்பு தூக்கி சுரணையற்று போக மனசு வரவில்லை. இதற்கு நடுவில் சிலர் முதலீடு செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து கடைசி நிமிடத்தில் கழண்டு கொண்டதும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருந்து ஒரு நண்பர் என் வீட்டிற்கு வந்து பார்த்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் பேசிவிட்டு மிகவும் திருப்தியாக இருந்தது என்று சொல்லி சென்றார். 40 லட்சங்கள் முதலீடு செய்வதாக பேச்சு. அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லாததால் அவரை நான் தொடர்ந்து கேட்கவும் உண்மையைக் கூறினார். அவர் இன்னொரு நண்பரிடம்(பிரபல ஏஞ்சல் முதலீட்டாளர்) கருத்து கேட்டதாகவும், ஈரோட்டில் நடந்த ஒரு பிட்சிங்கில் எங்கள் ஐடியாவை பார்த்துவிட்டு அதில் நம்பிக்கை இல்லாமல் கைவிட்ட கதையை அவர் சொல்ல அதை இவர் நம்ப என்னிடம் அது பற்றி எந்தக் கருத்தும் கேள்விகளும் விளக்கங்களும் எதுவுமின்றி விலகுவதாக கூறினார்.
இன்னொரு நண்பர் அமெரிக்காவில் பணிபுரிபவர் கண்டிப்பாக முதலீடு செய்கிறேன் என்று மூன்று மாதங்கள் பேசிக்கொண்டே இருந்தவர் ஒரு நாள் இல்லை எனக்கு வேறு செலவுகள் இருக்கிறது என்று கைவிட்டார்.
அந்த சமயங்களில் எனக்கு புரியாத ஒரு விஷயம் என் ஐடியாவில் ஏதேனும் குறை இருந்தால் கூறுங்கள் என்றால் அதற்கு பதிலே வராது. இன்றும் ஏன் அவை நடக்கவில்லை என்பது புரியாத புதிர். ஆனால் இப்பொழுது அவை எனக்கு நல்லவையாக பார்க்கிறேன்.
ஏனென்றால் அந்த முதலீடு கிடைத்திருந்தால் எல்லா Funded Startups போல நானும் தொழில்நுட்பத்திற்கும்,Inbounding மார்க்கெட்டிங்கிற்கும் அநியாயத்திற்கு செலவு செய்து இருப்பேன் அதுதான் சரி என்று நம்பியும் இருப்பேன். உளவியல் ரீதியாக மக்களே இருக்கும் பல்வேறு வகை Outbounding மார்க்கெட்டிங் பற்றி கற்று இருக்க மாட்டேன். தொழில்முனைவோர்களுக்கான Legals, Accounting, Incorporation பற்றியெல்லாம் தெரிந்திருக்காது அதில் உள்ள மிகப் பெரும் வாய்ப்பும் தெரிந்திருக்காது இன்று Intaxsevaவும் திறந்திருக்காது. அதேபோல Personal Finance Managementல் உள்ள மிகப்பெரும் இடைவெளியும் அதில் உள்ள வாய்ப்பும் புரிந்திருக்காது.
சென்றவாரம் ஸ்டார்ட்அப் பழகாலம் வாங்க என்று சின்ன Gathering வைத்தோம். அதில் மிகக் குறைந்த செலவில் ஒரு ஸ்டார்ட்அப்பை தொடங்கி மிகப்பெரிய அளவில் மக்களை சேர்வது எப்படி, அதில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி என்று மூன்று மணி நேரம் வகுப்பும் இத்தனை சோதனைகள், அனுபவங்கள் இல்லேனா எடுத்திருக்க முடியாது.
ஒரு பின்தங்கிய சமூகத்தில் பிறந்து, முதல் தலைமுறை பட்டதாரியாக, முதல் தலைமுறை தொழில் முனைவோராக ஸ்டார்ட்அப் வாழ்க்கையை நடத்துவது என்பது நெருப்பாற்றில் நீந்திக் கடப்பது போல. இன்று அந்த நெருப்பை கட்டுப்படுத்தும் கலையை நான் கற்று விட்டேன். அதை ஊருக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். அது பல தொழில்முனைவோர்களை உருவாக்கும். பல புதிய ஐடியாக்கள் நடைமுறைக்கு வரும். அது மக்களின் வாழ்வை மிகவும் எளிமைப்படுத்தும். அவர்களது கனவுகளுக்கு தடைகளாக இருப்பவைகளை Just like that என்று தட்டி விட்டுச் செல்லும்.
பின்னே? நாம ஜெயிக்கலேன்னா வேற யார் ஜெயிப்பா..? இப்போ ஜெயிக்கலேன்னா வேற எப்போ ஜெயிப்போம்.?
சூரரைபோற்று படம் இங்குள்ள தொழில்முனைவோர்களின் பிரச்சனைகளில், போராட்டங்களில் 10சதவீதத்தை கூட சொல்லவில்லை. ஆனால் இதையே பலரால் ஏற்கமுடியவில்லை. முற்போக்காளராக காட்டிக்கொள்வோரும் எள்ளி நகையாடுகிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள். உங்க மனதில் எழும் உணர்வே முக்கியம். ஏனென்றால் இதை சொல்லக்கூட இங்கு நாதி இல்லை. அம்புட்டும் பொலம்பல் சக்ரவர்த்திகள். இவனுங்க சாதிக்க போறது ஒண்ணுமே இல்லை.
இங்கே எந்த துறையும் எவன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை. படிப்பில் வெற்றி கொண்டது ஒரு படிநிலை. அதை தாண்டி தொழில் உலகம் பிரமாண்டமாக இருக்கு. அதிலும் வெற்றி பெறவேண்டும். அரசியல் அதிகாரத்திலும் அது தான் நிலையான வெற்றியை கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக