வியாழன், 5 நவம்பர், 2020

மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி?

minnambalam :   2018ஆம் ஆண்டு மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். மக்கள் நீதி மய்யத்துக்கு கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிக வாக்குகள் கிடைத்தன. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது மக்கள் நீதி மய்யம். தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தி.நகரிலுள்ள ஹோட்டலில் நடந்தது. அதில், கழகங்களுடன் கூட்டணி இல்லை, 3ஆவது அணிக்கான தகுதி தங்களுக்கு இருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அவர் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்கனவே உறுதிசெய்துவிட்ட நிலையில், எந்தத் தொகுதியை கமல்ஹாசன் தேர்வு செய்துள்ளார் என்ற விவாதங்களும் தற்போதே எழுந்துள்ளன.

மக்கள் நீதி மய்யத்தின் செல்வாக்கு தொடர்பாக தமிழகம் முழுக்க தனியார் நிறுவனம் ஒன்று சர்வே நடத்தியுள்ளது. அதில், சென்னை பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்திற்கு அதிகளவு செல்வாக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன், கடந்த மக்களவைத் தேர்தலில் சென்னையின் மூன்று தொகுதிகளிலும் அதிக வாக்குகளைப் பெற்றது. குறிப்பாக தென்சென்னையில் போட்டியிட்ட ரங்கராஜன் 1,35,465 வாக்குகளைப் பெற்றார்.

இதனடிப்படையில் தென்சென்னைகுட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கமல்ஹாசன் வீட்டுக்கு அருகே நெருங்கிய தொகுதியாக இருப்பதாலும், சமூக வாக்குகள் அதிகம் என்பதாலும் இந்தத் தொகுதி தேர்தல் பணிகளைத் தற்போதே துவங்கிவிட்டனர் மக்கள் நீதி மய்யத்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மயிலாப்பூர் பகுதி திமுக செயலாளர் மயிலை வேலு, “சூரியனுக்கு முன் நட்சத்திரமா? சவாலை ஏற்கத் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.இதே நேரம் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சியில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்று நகரெங்கும் போஸ்டர் ஒட்டியும், தலைமையிடம் முறையிட்டும் வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் வழக்கறிஞர் கிஷோர் குமாரிடம் பேசினோம்.

“நாங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே திருச்சியில் நம்மவர் கமல்ஹாசன் போட்டியிட வேண்டுமென்று விரும்பி, தலைவரிடம் வற்புறுத்தினோம். ஆனால் 40 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்பதால் அப்போது கமல்ஹாசன் போட்டியிடவில்லை. இப்போது மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திருச்சியில் நின்றால் தமிழகத்தின் மையமான தொகுதியில் மய்யத்தின் தலைவர் நிற்பது பொருத்தமாக இருக்கும். இங்கே படித்தவர்கள் அதிகம். மக்கள் மாற்றத்தை விரும்பும் நிலையில் கமல்ஹாசன் இங்கே நின்றால் வெற்றி உறுதி. திருச்சியை மையமாகக் கொண்டு மக்கள் நீதி மய்யம் பல மக்கள் நலப் பணிகளையும் செய்திருக்கிறது” என்கிறார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் கமல் போட்டியிடலாம் என்று ரிப்போர்ட் தலைமைக்குச் சென்றிருக்கிறது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அல்லது ஆவின் கார்த்திக், திமுக சார்பில் அன்பில் மகேஷ் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

கமல்ஹாசன் இரு தொகுதிகள் நிற்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அப்படி ஒரு நிலை வந்தால் மயிலாப்பூரிலும், இரண்டாவது தொகுதியாக திருச்சி, மதுரை, கோவை இவற்றில் ஒன்று என்றும் சொல்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.

-ஆரா, எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக