சனி, 28 நவம்பர், 2020

சந்திரசேகரன் மக்கள் முன்னணி ! மலையகத்தில் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அனுஷா சந்திரசேகரன்!


சந்திரசேகரன் மக்கள் முன்னணி"
மலையக அரசியலுக்கு புது இரத்தம் பாய்ச்சிய என் தந்தையின் மறைவுக்குப் பின் அரசியல் களம் மாத்திரமல்ல அவர் ஆரம்பித்த கட்சியின் செயற்பாடுகளும் மௌனித்துள்ளதை மறக்க முடியாது.
இதனை பார்வையாளராக இருந்து விமர்சிப்பதோடு என் கடமையை மட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன் என் தந்தை வழியில் எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய 17 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அடுத்தகட்ட சமூக செயல்பாடுகளுக்கான அடித்தளமாக அமைத்துக்கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்பேன்.
இதன் ஊடகமாக "அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி" என்ற தொழில் சங்கத்தையும் "சந்திரசேகரன் மக்கள் முன்னணி" என்ற அரசியல் கட்சியையும் பதிவு செய்து என் பணியை ஆரம்பிக்க உள்ளேன்.
ஆரோக்கியமான முற்போக்கான தூய நோக்குடைய அனைத்து சக்திகளின் ஆதரவுடன் நிச்சயமாக புதிய அரசியல் தொழிற்சங்க கலாசாரத்தை உருவாக்கும் மக்கள் சக்தியுடனான வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிப்பேன்.
மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்.

 ராதா மனோகர் :  மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் முன்பு  ஏழு  நாடாளுமன்ற பிரதிநிதிகள் அங்கு தெரிவாகி இருந்தனர் .வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்பு மக்களின் நாடாளுமன்ற அரசியல் என்பது ஒரு முடிவுக்கு வந்தது என்று சிலர் எக்காளமிட்டனர் . 


நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகளும் நியமன எம்பிக்களாக திரு தொண்டமான் அவர்களையும் திரு அஸீஸ் அவர்களையும் நியமித்து தங்களின் மலையக மக்கள் மீதான பற்றினை படம் காட்டிக்கொண்டனர் .

ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்பு மெதுவாக மலையக மக்களுக்கு படிப்படியாக வாக்குரிமை கிடைக்கத்தொடங்கியது .
இதன் பயனாக திரு தொண்டமான் அவர்கள் மட்டும் நுவரெலியா மஸ்கெலியா இணைந்த தொகுதியில் தட்டு தடுமாறி வெற்றி பெற்றார் .    அவரின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் அரசியல் பிரிவு அன்று மலையக மக்களின் ஏகப்பிரதிநிதி என்று அறியப்பட்டது.
அந்த ஒற்றை அரசியல் சாளரமானது சாதாரண மக்களுக்கு கொஞ்சம் எட்டாத உயரத்தில் இருந்தது.


இரண்டு மூன்று தசாப்தங்களாக தொண்டமான் அவர்களின் அரசியல் மட்டுமே இருந்த சூழ்நிலையில் மாற்று அரசியல் கட்சியோ இயக்கமோ மட்டுமல்ல அதை பற்றி  நினைத்து கூட யாரும் துணியாத ஒரு சூழ்நிலையும் இருந்தது என்பதை மறுப்பத்தற்கு இல்லை.
 

இந்த காலக்கட்டத்தில்  திரு. பெரியசாமி சந்திரசேகர் என்ற மலையக இளைஞர் திரு தொண்டைமானின் இ.தொ.கவில் இருந்து பிரிந்து மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பை நிறுவினார்.
மலையகத்தில் ஒரு இடது சாரி கருத்தியல்  கோட்பாட்டை அடிப்படையக  கொண்டு மலையக மக்கள் முன்னணி அரசியலை முன்னெடுத்தது.
 

அந்த காலக்கட்டத்தில் தென்னிலங்கை எங்கும் வீறுகொண்டு எழுந்த ஜேவிபியின் போராட்டம் மலையகத்திலும் தாக்கத்தை செலுத்தியது.
இளைஞர் பெரியசாமி சந்திரசேகர் கைது செயப்பட்டு ராணுவமுகாமில் அடைக்கப்பட்டார் .
பின்பு அவர் வெளியே வந்து தேர்தல்களில் போட்டி இட்டு பல தோல்விகளுக்கு முகம் கொடுத்து இறுதியில் வெற்றிகளை குவித்தார் என்பது வரலாறு.
 

அவர் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று அமைச்சரானார் . அதன் பின் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றினர்.  குறிப்பாக மலையக வீட்டு திட்டங்களை வேகமாக நிறைவேற்றினார்.
அமரர் பெரியசாமி சந்திரசேகர் பற்றி நான் இதுவரை எழுதியது எல்லாம் ஒரு சிறு குறிப்பு மட்டுமே. 

தந்தையின் வழியில் கொஞ்சம்கூட குறையாமல் தனது அரசியல் சமூக களப்பணிகளை முன்னெடுத்து வருகிறார்   அனுஷா சந்திரசேகர் அவர்கள்.
சென்ற தேர்தலில் இவரின் தந்தை உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியில் இருந்து இவரை தூக்கி எறிந்து விட்டது இன்றய மலையக மக்கள் முன்னணி..
இது மிகவும் வேதனையான நிகழ்வாகும்.  இவர் ஒரு பெண் என்பதையும்  தாண்டி  இவரின் ஆளுமை சாதாரணமானது அல்ல . 

காலம் இவரை நிச்சயம் அடையாளம் காட்டும் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகம் இல்லை.
இவரின் தெளிவான கருத்துக்கள் திட்டங்கள் எல்லாமே ஒரு பண் பட்ட களப்போராளியின் உள்ளத்தில் இருந்து மட்டும்தான் வரமுடியும் என்பதை காட்டுகிறது.
இவரின் தலைமையில் உருவாகியுள்ள சந்திரசேகரன் மக்கள் முன்னணி நிச்சயம் இமாலய வெற்றி பெறும் . சென்ற தேர்தலில்   அனுஷா சந்திரசேகரன் பெற்ற வாக்குகளே அதற்கு சான்று பகர்கிறது.

இவர்கள் எதிராக்காலத்தில் பெறப்போகும் வெற்றிகள் மலையக மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சட்டும்.
உலகெங்கும் பரந்து வாழும் மலையக உறவுகளின் ஒன்று பட்ட வெற்றியாக இருக்கும்.     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக