செவ்வாய், 3 நவம்பர், 2020

வீடியோவால் பிரபலமான உணவுக் கடை முதியவர்: வீடியோ எடுத்த நபர் பணத்தை ஏமாற்றியதாக புகார்

BBC :சில தினங்களுக்கு முன் ஒரு வயதான தம்பதி தனது சாலையோர உணவுக் கடையில் வியாபாரம் ஏதும் ஆகவில்லை எனக் கண்கலங்கிய வீடியோ ஒன்று வைரலானது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த வயதான தம்பதி குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலான பின் அவர்கள் கடையில்தான் கூட்டம் கூடிவிட்டதே பின் தற்போது என்ன என்றும் உங்களுக்கு தோன்றலாம்.. தான் குறித்த செய்தியை பதிவிட்ட வலைப்பூ நபர் பணமோசடி செய்துவிட்டதாக வைரலான முதியவர் தற்போது புகார் தெரிவித்துள்ளார். கெளரவ் வாசன் என்பவர் வெளியிட்ட வீடியோ பதிவில், இந்த கொரோனா பெருந்தொற்றால், டெல்லியில் உணவுக் கடை நடத்தி வரும் முதியவர் கண்டா பிரசாத், தன் கடைக்கு யாரும் வரவில்லை என கண்கலங்கியபடி பேசியிருப்பார்.

அந்த வீடியோ வைரலானது; பலரும் அந்த முதியவருக்கு உதவ முன் வந்தனர் மேலும், கெளரவ் வாசன் அந்த முதியவருக்கு உதவ நன்கொடைகள் வழங்குமாறும் கேட்டிருந்தார்.தற்போது தனது பெயரில் வந்த பணத்தை, கெளரவ் மோசடி செய்துவிட்டார் என முதியவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை கெளரவ் வாசன் மறுத்துள்ளார்.

வைரலான அந்த வீடியோ ஒரே நாளில் சமூக வலைத்தளங்களால் ஏற்படும் ஒரு பெரிய மாற்றத்தை நமக்கு உணர்த்தியது. பலர் முதியவருக்கு நன்கொடை வழங்கினர். பலர் அவரின் தாபாவிற்கு சென்று உணவு உண்டனர். அடுத்த நாள் எடுக்கப்பட்ட வீடியோவில் அவர் தாபாவில் கூட்டம் நிறைந்து இருந்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது. கண்டா பிரசாத்தும் அவரது மனைவியும் ஒரே இரவில் புகழ்பெற்றனர்.

இந்த நிலையில்தான் தற்போது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.முதியவரின் உணவுக் கடை

தாங்கள் இதுகுறித்து புகார் பெற்றுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர். மேலும் புகார் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் எந்த குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்யவில்லை.

முதியவரின் உணவுக் கடை

கெளரவ் வாசன் வேண்டுமென்றே தன்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்து பெரிய அளவில் நன்கொடை பெற்றதாக குற்றம் சுமத்துகிறார் முதியவர் பிரசாத்.

நன்கொடையாக பெரும் தொகை வந்தது என்றும் ஆனால் கெளரவிடமிருந்து வெறும் இரண்டு லட்சம் ரூபாயை மட்டுமே தான் பெற்றதாகவும் முதியவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுக்கும் கெளரவ் வாசன், தான் பெற்ற எல்லாப் பணத்தையும் முதியவருக்கு அனுப்பிவிட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், தனது பெயரை கெடுக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“பாபா கா தாபா வீடியோவை நான் படம் எடுத்தபோது அது இந்த அளவுக்கு வைரலாகும் என நினைக்கவில்லை. வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு ஒரு நாள் மட்டுமே நான் கேட்டுக் கொண்டேன்,” என கெளரவ் வாசன் தெரிவிக்கிறார்.

தனது யூட் யூப் சேனலில் முதியவரின் வீடியோவை பதிவேற்றிய கெளரவ் வாசன் அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து நன்கொடைகள் குவியத் தொடங்கியதாக தெரிவித்தார்.

அக்டோபர் 8ஆம் தேதி முதியவரும், கெளரவும் சேர்ந்து, வீடியோ ஒன்றில், தேவையான பணம் ஏற்கனவே வந்துவிட்டதால் மேற்கொண்டு யாரும் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தனர்.

முதியவரின் உணவுக் கடை

“நான் அந்த முதியவருக்கு உதவி செய்யவே எண்ணினேன், உங்களுக்காக நான் நன்கொடை சேகரிக்கிறேன் என நான் அவரிடம் கூறினேன். அப்போது அவர் தனது வங்கி கணக்கை வழங்குமாறு என்னிடம் கோரவில்லை. அவர் அவ்வாறு கோரியிருந்தால் நான் கொடுத்திருப்பேன்,” என கெளரவ் தெரிவித்தார்.

இந்த பெருந்தொற்று காலம் பலருக்கும் பெரும் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது. சாலையோரத்தில் உணவுக் கடைகளை வைத்திருப்பவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.

வைரலான இந்த முதியவரின் `பாபா கா தாபா` என்ற சாலையோர உணவுக் கடை டெல்லியின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்வியா நகர் என்ற பகுதியில் உள்ளது. அதில், 50 ரூபாய்க்கும் குறைவான விலையில், பராத்தா உள்ளிட்ட வீட்டில் செய்த வட இந்திய உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து இந்த கடையை நடத்தி வருகின்றனர் வைரலான வயதான தம்பதியினர்.

இருப்பினும் இந்த பெருந்தொற்று காலத்தில் யாரும் வெளியில் வந்து உண்ணாத நிலையில் அவர்களின் வியாபாரம் பெரும் அடி வாங்கியது. கெளரவ் வாசனின் வீடியோவில் கண் கலங்கியபடி தனது நிலையை சொல்லியிருப்பார் அந்த முதியவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக