minnambalam : தீபாவளித் திருநாளை ஒட்டி இன்று (நவம்பர் 14) காலை திமுகவில் அழகிரி ஆதரவாளர்களாக இருந்து இப்போது சைலன்ட் மோடில் இருக்கும் பலருக்கும் அழகிரியிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
ஒவ்வொருவரிடமும் ஐந்து நிமிடம், ஏழு நிமிடம், பத்து நிமிடம் என்று பொறுமையாக பேசி தீபாவளி வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார் அழகிரி. பிறகு அவரவர் பகுதியில் திமுக நிலைமை என்ன என்பதையும் விரிவாகவே விசாரித்திருக்கிறார். இந்த தொலைபேசி உரையாடலின் போது அழகிரி கூறிய ஒற்றை விஷயம் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தீவிர அழகிரி ஆதரவாளரும்திருச்சி மாவட்ட அழகிரி பேரவை நிர்வாகியிடம் இதுகுறித்துப் பேசினோம். “ஆமாம் சார். அழகிரி அண்ணன் பேசினார். தீபாவளி வாழ்த்து சொன்னாரு. அதைவிட ரொம்ப உற்சாகமா இனிமேதான் எங்களுக்கு தீபாவளி அப்படிங்குற மாதிரி ஒரு தகவலையும் சொன்னாரு.
அதாவது திமுகவுல மறுபடி சேரணும்குறதுதான் அண்ணனோட ஆசையா இருந்தது. கலைஞர் தலைவரா இருந்து 50 வருஷத்துக்கும் மேலாக கட்டிக் காப்பாத்தின திமுகவை விட்டுப் போக அவருக்கு மனசு இல்ல. ஆனால் ஸ்டாலின் குடும்பத்தினர் அழகிரியண்ணன் மீண்டும் கட்சிக்குள்ள வர்றத விரும்பல போலிருக்கு. கலைஞர் குடும்பத்தில பலர் அண்ணன் மறுபடியும் கட்சிக்குள்ள வரணும்னு விரும்பினாலும், ஸ்டாலின் குடும்பத்தினரின் எண்ணம் அது இல்ல.
தன் தந்தையும் தலைவருமான கலைஞரின் கட்சிக்கு தன்னால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாதுனுதான் ஆறு வருசம் அண்ணன் பொறுத்திருந்தாரு. இனியும் பொறுக்க முடியாதுனு இன்னிக்கு தீபாவளி அன்னிக்கு எங்களுக்கு சொல்லிவிட்டாரு.
வர்ற டிசம்பர் முதல் வாரத்துலயே கலைஞர் திமுக என்ற கட்சி ஆரம்பிக்கப் போறாரு. தனிக் கட்சி முடிவில் உறுதியாக இருக்காரு. தமிழ்நாடு முழுக்க நிர்வாகிகளை நியமிப்பது சம்பந்தமான ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லியிருக்காரு. விரைவில் முதல் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடக்கும். பொறுமை காத்த மதுரைப் புயல் புறப்படப் போகுது” என்று உற்சாகமாகக் கூறினார்.
ஏற்கனவே அழகிரி கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், ரஜினியுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் தகவல்கள் வந்தன. சில தினங்களுக்கு முன் அழகிரியை பாஜக தலைவர் முருகன் சந்தித்துப் பேசியதாகவும் சலசலப்புகள் எழுந்தன. இந்த நிலையில் இன்று தீபாவளியை ஒட்டி அழகிரி தன் ஆதரவாளர்களிடம், ‘தனிக் கட்சி’ என்ற வெடியை பற்ற வைக்கப் போவதாக தெரிவித்திருப்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய நிகழ்வாக இருக்கும்.
-ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக