செவ்வாய், 24 நவம்பர், 2020

கானா இசைவாணி! BBC 100 WOMEN 2020: சாதனை பெண்கள் பட்டியலில் சென்னை கானா பாடகி

2020ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பா.ரஞ்சித்தின் `The Casteless Collective` குழுவை சேர்ந்த பாடகி இசைவாணி இடம்பிடித்துள்ளார். உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 100 பெண்களும் தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் நேர்மறையான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியவர்கள். அதில் ஒருவராக இசைவாணி இடம்பிடித்துள்ளார். சரி. யார் இந்த இசைவாணி?

திரைப்படங்களில் எப்போதும் மிக மோசமாக சித்தரிக்கப்படும் பகுதி வட சென்னை. அந்த பகுதியைச் சேர்ந்தவர் இசைவாணி. ஆண்கள் மட்டுமே கோலோச்சிய கானா மேடைகளை தன் வசப்படுத்தியவர் இசைவாணி. "கலை மக்களுக்கானது, அதில் மக்கள் அரசியல் பேசாமல் வேறு எங்கு பேசுவது?" என கேட்கும் தீட்சண்ய பார்வை கொண்டவர் இசைவாணி.

இசை ஆர்வம்

"சிறிய வயதில் தனக்கு இசை மீது பெரிதாக ஆர்வம் இல்லை" என்கிறார் இசைவாணி.

"அப்பா கீபோர்ட் ப்ளேயர். ஆனால், எனக்கு தொடக்கத்தில் அதன் மீது ஈர்ப்பு வரவில்லை. அப்பா இசை வகுப்பு எடுப்பார். எனக்கு அதில் ஆர்வம் இல்லை. அதை ஒரு தொந்தரவாகத்தான் பார்த்தேன். ஆனால், எனக்குள் இசை திறமை இருந்திருக்கிறது. ஒரு 7 வயதில் அப்பா எனக்கு ஒரு பாட்டை பாட கற்று கொடுத்தார். எங்கள் தெருவில் நடந்த கோயில் விழாவில் பாடினேன். பின் கொஞ்சம் சில கச்சேரிகளில் பாடினேன்," என்கிறார்.

ஏழு வயதிலேயே பாட தொடங்கி இருந்தாலும், தொடக்கத்தில் லைட் மியூசிக் மட்டுமே பாடி இருக்கிறார்.

"கானா மீது ஆர்வம் வந்தது 2010க்கு பிறகுதான்," என்கிறார் இசைவாணி.

இவர் கானா பாடல் பாட தொடங்கிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

ஒரு முறை இவர் ஓர் இசை கச்சேரியில் பாடிக் கொண்டிருக்கும் போது, அந்த பகுதி இளைஞர்கள் கானா பாடல் பாட சொல்லி கூச்சலிட்டிருக்கிறார்கள். மேடையில் இருந்தவர்களிடம் `கானா பாடல் பாடட்டுமா?` என்று கேட்ட போது, `ஆண்கள்தானே பாடுவார்கள்... நீ எப்படி பாடுவாய்' என கேட்டிருக்கிறார்கள் `இல்லை நான் முயற்சி செய்கிறேன்` என்று பாடி அப்லாஸுகளை அள்ளி இருக்கிறார்.

அதன் பின் தான் இவர் கானாவில் கவனம் செலுத்தத் தொடங்கி, அதில் உச்சங்களை தொட்டு, இன்று பிபிசி சாதனை பெண்கள் பட்டியல் வரை வந்திருக்கிறார்.

`கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் வந்த கதை`

இசை மீது ஆர்வமும், திறமையும் இருந்தாலும் அதில் இருந்த பாகுபாடுகளை பார்த்து இவர் ஒரு கட்டத்தில் அந்த துறையிலிருந்து விலகி இருக்கிறார்.

"அந்த துறையில் இருந்து முழுமையாக விலகி, கிடைத்த வேலைகள் எல்லாம் செய்தேன். போஸ்ட் ஆஃபிஸ், ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி என பல இடங்களில் வேலை பார்த்தேன். அப்போதுதான் ஓர் அண்ணன் மூலமாக பா.ரஞ்சித் அண்ணனின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குறித்து தெரிய வந்தது," என்று கூறுகிறார்.

அந்த குழுவில் சேர்ந்த பிறகுதான் இவர் வாழ்க்கை முழுவதுமாக மாறி இருக்கிறது. உச்சங்களை தொடவும் வழி வகுத்து இருக்கிறது.

ஆனால் தொடக்கத்தில் அந்த குழுவில் சேர இசைவாணியின் வீட்டில் எதிர்ப்பு வந்திருக்கிறது. போராட்டத்திற்கு பிறகே வீட்டில் சம்மதம் பெற்று இருக்கிறார்.

குவியும் வாழ்த்து

பின்லாந்தின் பிரதமர் சன்னா மரின், சாகின்பாக் போராட்ட குழுவை சேர்ந்த பில்கிஸ், சூழலியல் செயல்பாட்டாளர் ரிதிமா பாண்டே, இந்திய தடகள வீராங்கனை மானசி ஜோஷி என நீளும் இந்த சர்வதேச பட்டியலில் தமிழகத்தில் இருந்து இடம் பிடித்துள்ளது இவர் மட்டும் தான்.

சமூக ஊடகங்களில் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பா. ரஞ்சித் பகிர்ந்துள்ள ட்வீட்டில், கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் மூலமாக சமூகக்கருத்துக்களை மேடைகளில் பாடி பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுவரும் குழுவினருக்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்து அங்கீகாரமும், பாராட்டுக்களும் கிடைத்துவருவதால் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக