வெள்ளி, 20 நவம்பர், 2020

இரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Alexander Dubyanskiy காலமானார் .. செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்

Image may contain: 1 person
Alexander Dubyanskiy,
Subashini Thf : ·  இரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Alexander Dubyanskiy,  1941-2020) மாஸ்கோவில் இன்று மறைந்தார். கொரோனா தொற்றின் தாக்கத்தால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பிலும் தமிழ்கூறு நல்லுலகு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொல்காப்பியம் சமஸ்கிருத அடிப்படை கொண்டதல்ல எனத் தெளிவாக எடுத்துரைத்த அயல்நாட்டுத் தமிழ் அறிஞர் இவர்.

 திமுக தலைவர் மு க ஸ்டாலின் :   செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் - ஆய்வாளர் - பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர் துப்யான்ஸ்கி. சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போன நிலையில், பேராசிரியர் துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது போற்றுதலுக்குரியதாகும்.
அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் ஆய்வுப் பணியை மேற்கொண்டு, புதிய பார்வையுடன் பல கட்டுரைகளை வழங்கிய பேராசிரியர் துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் மொழியை அறிந்துகொண்ட மேல்நாட்டவர் ஏராளம். 2010-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில் கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்றவர். பேராசிரியர் துப்யான்ஸ்கியின் இறப்பு தமிழ் மொழி ஆய்வுத் தளத்தில் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மேற்கொண்ட பணிகளைத் தொடர்ந்திடச் செய்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும்.
- திமுக தலைவர் மு க ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக