வியாழன், 26 நவம்பர், 2020

தூத்துக்குடி: ரூ. 500 கோடி மதிப்பிலான ஹெராயின்! – நிவர் புயல் பரபரப்புக்கு இடையே சிக்கிய கும்பல்

vikatan - இ.கார்த்திகேயன் : கடத்தல் படகு தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த படகை, கடலோர காவல்படையினர் சோதனையிட்டதில், ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ூத்துக்குடி `தொழிற்சாலை நகரம்’ என்பதால், உடலுழைப்புத் தொழிலாளர்களைக் குறிவைத்து கஞ்சா தாராளமாக விற்பனை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும்வருகிறது. அதேபோல, தூத்துக்குடி, ராமநாதபுரம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பிடித்து, மருந்துப் பொருள்கள் தயாரிப்புக்காக இலங்கைவழியாக கடத்திவருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவதும், கடல் அட்டைகள் கடத்தப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது.
ஹெராயின் பறிமுதல்
ஹெராயின் பறிமுதல்

ஆனால், கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் கடல் பகுதியில், இலங்கைக்குக் கடத்த முயன்ற ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்புகள் தங்களின் வருவாய்க்காக இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்குக் கொடிய போதைப்பொருள்களைக் கடத்திவருகின்றன.

இது போன்ற சட்டவிரோத கடத்தல்கள், இந்தியாவின் தென்பகுதி கடல் எல்லைகள் வழியாக நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில், இந்திய கடலோர எல்லைப் பகுதிகளுக்குள் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டா, செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு தலைமையகத்துக்கு சிக்னல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில், கடலோர காவல் படையினர் ரோந்தில் ஈடுபட்டனர்.

ஹெராயின்
ஹெராயின்

இந்தநிலையில், தூத்துக்குடி கடல் பகுதியில் தெற்கே இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து சுற்றிய `சேனையா துவா’ என்ற இலங்கையைச் சேர்ந்த படகை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர், அந்தப் படகுக்குள் சோதனையிட்டதில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட, ரூ.3 லட்சம் மதிப்புள்ள துபாயில் தயாரான `துரையா’ என்ற வகையைச் சேர்ந்த `பிரீபெய்டு சேட்டிலைட் போன்’-ஐ பறிமுதல் செய்தனர்.

அந்தப் படகின் கீழ்ப்பகுதியிலுள்ள காலியான பெட்ரோல் டேங்குக்குள் 20 சிறிய பெட்டிகளிலிருந்த, 100 கிலோ எடையுள்ள 99 பாக்கெட்டுகளில் இருந்த ஹெராயினையும் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.500 கோடி. படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த ஆறு பேரையும், அவர்களிடமிருந்த ஐந்து கைத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகு, இலங்கை நிகம்புவிலுள்ள அலென்சு குட்டிகே சின்கா என்பவருக்குச் சொந்தமானது. ஹெராயின் பாக்கெட்டுகளை இலங்கைவழியாக ஆஸ்திரேலியாவுக்குக் கடத்த முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்ட ஆறு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக