திமுக கூட்டணியில் 200 இடங்களில் உதயசூரியன் சின்னம் களம் காணப் போகிறது என்று தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில்... திமுக தலைவர் ஸ்டாலினே இதற்கு விளக்கம் கொடுத்து அறிக்கை விட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை என்பது பற்றிய பட்டியல் திமுக மேல் மட்டப் பிரமுகர்கள் மத்தியில் உலவி வருகிறது.
அதன்படி: காங்கிரஸ்-27
மதிமுக-6
கம்யூனிஸ்ட்கள் தலா 6 வீதம் மொத்தம்-12
விடுதலை சிறுத்தைகள்-6<>கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி-3
இந்தியன் யூனியன் முஸ்லிக் லீக்-3
இந்திய ஜனநாயக கட்சி-3
மனித நேய மக்கள் கட்சி-3
என மொத்தம் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியிருக்கும் 171 இடங்களில் திமுக போட்டியிடும் என்று தெரிகிறது.
இதில் இந்திய ஜனநாயகக் கட்சி, கொமதேக ஆகியவை போட்டியிடும் 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்லி திமுக வற்புறுத்தும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆக மொத்தம் சுமார் 180 தொகுதிகளுக்கு மேல் உதயசூரியன் சின்னம் களம் காணக் கூடுமென்கிறார்கள். இந்த எண்ணிக்கைக்கு கூட்டணிக் கட்சிகளை உடன்பட வைப்பதிலும் திமுக முன்னணியினர் தீவிரமாக இருக்கிறார்கள்.கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், திமுக கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி தொகுதிகளின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்டுகளை திமுக கணக்கிடுகிறது. அதாவது ஓர் எம்.பி தொகுதியில் போட்டியிட்ட கட்சிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்ற விகிதத்தில் திமுக திட்டமிட்டு வைத்துள்ளது. அதன்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 எம்.பி தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 30 சட்டமன்றத் தொகுதிகள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. (தமிழகத்தில் ஒன்பது இடங்களில் போட்டியிட்டதால் 27 தொகுதிகள்) திமுக கூட்டணியில் அடுத்த கட்சி மதிமுக கடந்த எம்.பி தேர்தலில் ஒரு மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா என இரு எம்.பி.க்களைப் பெற்றது. அதன் அடிப்படையில் மதிமுகவுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள், அடுத்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா இரு எம்.பி தொகுதிகளில் போட்டியிட்டன. அவற்றுக்கு 6 + 6 = 12 சட்டமன்றத் தொகுதிகள். விடுதலைச் சிறுத்தைகள் இரு எம்.பி தொகுதிகளில் போட்டியிட்டதன் அடிப்படையில் அக்கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள். ஒரு தொகுதியில் நின்ற கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி கட்சிகளுக்கு தலா 3 சட்டமன்றத் தொகுதிகள். ஆக இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகள் போய்விடுகின்றன. 234 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகள் போய்விட, மீதி 171 தொகுதிகளில் திமுக போட்டியிட வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்திருந்தோம்.
இப்போது இதுதான் பட்டியலாக திமுக மேல் மட்டப் பிரமுகர்கள் மத்தியில் உலவிக் கொண்டிருக்கிறது. இது உத்தேசப் பட்டியலாக இருந்தாலும், இதில் ஒரு சில மாற்றங்கள் இருக்கக் கூடும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக