நிதானமாகப் படிக்கவும். எல்லா வரலாற்றுக் கதாபாத்திரங்களுக்கும் இருண்ட பக்கங்கள், சறுக்கல்கள் உண்டு. அந்த நபர்களைப் பற்றிய சினிமாவில் நடித்தாலே அவர்களை ஆதரிக்கவேண்டும் என்று அர்த்தமில்லை. முரளிதரன் பற்றிய சினிமா எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதற்குள் நாம் ஒரு முன்முடிவுக்கு வந்து அந்தப்படம் அவரைக் கொண்டாடும் படமாக மட்டுமே இருக்கும் என்றும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் என்றும் அவர் இனத்துரோகி என்றும் அவரைப் புறக்கணிப்போம் என்றும் பலர் அவருக்கு அழுத்தம் கொடுத்து இறுதியில் அவரை முரளிதரனே அந்தப் படத்தில் இருந்து வெளியேற்றிவிட்டார். ஒரு நல்ல நடிகருக்கு ஒரு முரண்பாடான கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது நல்லதொரு வாய்ப்பு. இந்தப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கக்கூடும். அதன் மூலம் கிரிக்கெட் வீரர் முரளிதரன் சறுக்கிய, சமரசம் செய்த இடங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். இதனால் எல்லோருக்கும் நல்லது தானே!
தோட்டத்தொழிலாளர்கள் தான் இலங்கையில் அதிகம் சுரண்டலுக்கு ஆளாகும் தமிழர்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அவர்கள் சாதி ரீதியாக சூத்திரர்களாகவோ, தலித்துகளாகவோ தான் இருக்கமுடியும். அந்தச்சூழலில் இருந்து வந்த ஒரு தமிழர் இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாடி, மாபெரும் வெற்றி பெற்று உலகச்சாதனை புரிந்திருக்கிறார். (அவருக்குச் சமகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் பார்ப்பனர்கள் மட்டுமே இடம் பெற முடிந்தது).
முரளிதரன் ஆரம்பகாலத்தில் கிரிக்கெட் பந்தை 'வீசவில்லை', 'எறிகிறார்' என்று சொல்லி நடுவர்கள், ஊடகம், வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அவருக்கு எதிராகக் கடும் அழுத்தம் கொடுத்த போது இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்குத் துணை நின்றது. எல்லாவிதமான சோதனைகளையும் செய்து அவருக்கு வலது கை வளைந்திருக்கிறது என்றும் அதனால் தான் பார்ப்பதற்கு அவர் பந்தை 'எறிவது' போல தோன்றுகிறது என்றும் அறிவியல் பூர்வமாக நிரூபித்த பிறகு தான் முரளிதரன் மீண்டும் விளையாடினார். (இதனால் இலங்கை அணிக்குத் தான் சாதகம் என்றாலும், அவர் பல வெற்றிகளை இலங்கைக்குப் பெற்றுத் தந்தார் என்றாலும், நன்றாக விளையாடாத ஒருவரை எந்தக் கிரிக்கெட் அணி எடுத்துக்கொள்ளும்?)
தன்னை வளர்த்துவிட்ட இலங்கைக்கு அவர் விசுவாசமாக இருந்திருக்கிறார். நாம் நியாயமாக எதிர்பார்க்கிற மாதிரி ஈழத்தின் இறுதிப்போரில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொலை செய்யப்பட்ட போது அவர் அதைக் கண்டிக்கவில்லை. 'நான் அதை ஆதரிக்கவில்லை' என்று மட்டும் சொல்லியிருக்கிறார். அதுவும் அவரது சுயநலம் தான். அல்லது 'பலரைப்' போல ஈழவிடுதலையை ஆதரிக்காதவராகவும் இருந்தார். அது அவர் செய்த இனதுரோகம் தான். அதை யாரும் மறுக்கமுடியாது.
ஆனால் அதுவே அவரது வரலாறு. இதை ஏன் படம் எடுக்கக்கூடாது? அதில் ஏன் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது? முரளிதரன் மட்டுமல்ல, நம்மில் பலர் இப்படிப்பட்ட பல முரண்களுடன் தான் வாழ்கிறோம். காந்தியார் கூட பல முரண்கள் கொண்டவர் தான். அவரைப் பற்றி அவர் யாருக்கு எதிராகப் போராடினாரோ, அந்த வெள்ளைக்காரர்களே படம் எடுத்தார்கள்.
முரளிதரன் மட்டுமல்ல, ஹிட்லர் பற்றி கூட படம் எடுக்கலாம். அதில் உலகநாயகனும் நடிக்கலாம். ஏன் விஜய்சேதுபதியே நடிக்கலாம். முரண்களை பிரதிபலிக்கவில்லை என்றால் தான் நாம் பேசவேண்டும். எம்ஜிஆர் அவர்களைப் பற்றியும் கலைஞர் அவர்களைப் பற்றியும் மணிரதன்ம் 'இருவர்' என்ற படம் எடுத்தார். அதில் அவர்களை இழிவாகச் சித்தரித்திருக்கிறார். அது மணிரத்னத்தின் சினிமா அரசியல். அதனால் தமிழர்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டிருக்கிறது? எம்ஜிஆரும் கலைஞரும் நமக்கு இன்னும் பெருந்தலைவர்கள் தான். ஒரு சினிமா நம்மை என்ன செய்துவிடமுடியும்? ஷங்கர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் படம் எடுத்தார். அவரை நாம் என்ன ஊரைவிட்டா துரத்திவிட்டோம்? அவர் மேலும் மேலும் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களை எடுத்துக்கொண்டே தான் இருக்கிறார். இவர்களை நாம் மன்னிக்கவில்லையா?
விஜய்சேதுபதி விவகாரத்தில் நாம் ஒரு அடிப்படைவாதிகள் போலவே செயல்பட்டோம் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். நமது அரசியல் என்னவாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு படம் வரக்கூடாது, அதில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்பது பச்சை அடிப்படைவாதம், பிற்போக்குவாதம், சறுக்கல், கூட்டுத்தோல்வி. அதில் ஒரு மாப் (கும்பல்) மனநிலை வெளிப்பட்டது. அதற்கு அரசியல் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. எல்லோரும் ஜல்லிக்கட்டை ஆதரித்தபோது களத்தில் இறங்கியது போன்ற பக்தி மனநிலையில் இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம்.
இது ஆபத்தான அறிகுறி. இதை நம் எதிரிகள் கவனித்திருப்பார்கள். இப்படி நம்மை 'மயங்கிய' நிலையில் ஒரு கூட்டுச்செயலுக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம்.
நாம் பிறரால் தண்டிக்கப்படுவதை விட நாம் பிறரை நியாயமற்ற முறையில் தண்டிப்பது அறமற்ற செயல். அநியாயமாக விஜய் சேதுபதி எனும் நடிகரை மட்டும் நாம் காயப்படுத்தவில்லை. நாம் நம்மையே காயப்படுத்திவிட்டோம்.
சங்கிகள் மாதொருபாகன் நாவலுக்காக பெருமாள் முருகனை மிரட்டியதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
நாம் கூட்டுச்சங்கிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம். மிகுந்த அடக்கத்துடன், தோழமையுடன், பொறுப்புடன் எச்சரிக்க விரும்புகிறேன்.
இதனால் என்னை பலர் தூற்றக்கூடும். கேலி செய்யக்கூடும்.
மகிழ்ச்சி!
மிகவும் உண்மை. மாறுபட்ட கருத்துகளை வெளியிட தயக்கமும் அச்சமும் கொண்ட சூழல் நிலவுகிறது. இது எந்த விதத்திலும் நல்லதல்ல
பதிலளிநீக்கு