திங்கள், 12 அக்டோபர், 2020

திமுக வின் அடுத்த சமூகநீதிப் போராட்டம்... ஓபிசி இடஒதுக்கீடுll OBCReservation NLUs DMK

  Suriya Krishnamoorthy
: ஓபிசி இடஒதுக்கீடு - திமுக வின் அடுத்த சமூகநீதிப்
போராட்டம்.தமிழ்நாட்டின் அரசியல் களம் மெல்ல தேர்தலின் திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ரகசிய ஆலோசனைகள், முதல்வர் வேட்பாளர்
அறிவிப்புகள்,  அட்ரஸ் இல்லாத அபத்த போஸ்டர்கள், கூட்டணிக் குழப்பங்கள் என்று வெற்று பரபரப்புகள் செய்தி ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் நெடுநாட்களாக மௌனமாக, பெருவெளிச்சமின்றி ஒலித்து வந்த உரிமைக் குரலுக்கு தேசிய கவனத்தை ஈர்த்துத் தந்திருக்கிறது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்களின் கடிதம்.தேசிய சட்டப் பல்கலைக்கழங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி ஒன்றியத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அவர்களுக்கு, டி.ஆர்.பாலு அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதன் விளைவாக ஓபிசி செயற்பாட்டாளர்கள் தரப்பில் மட்டும் பேசுபொருளாக இருந்த இவ்விவகாரம், இன்றைக்கு அநேக ஆங்கில நாளிதழ்களில் முதன்மைச் செய்தியாக இடம்பெற்றுள்ளது.
The Central Educational Institutions Act, 2006 ன் படி இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு மத்தியக் கல்வி நிலையங்களில் 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் தேசிய சட்டப் பல்கலைக்கழங்களில் (NLUs) ஓபிசிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக, பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இளநிலையில் (BA-LLB) உள்ள 120 இடங்களில் பொதுப்போட்டிக்கு 93 இடங்களும், பட்டியல் பிரிவினருக்கு 18 இடங்களும், பழங்குடியினருக்கு 9 இடங்களும் ஒதுக்கப்படுகிறது.
ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை பூஜ்யம்
(OBC = 0).
இதேபோல, ஹைதராபாத், கல்கத்தா, ஜோத்பூர், பஞ்சாப், காந்திநகர், ராஞ்சி, அசாம், திருச்சி உள்ளிட்ட 13 தேசிய சட்டப் பல்கலைக்கழங்களில் உள்ள 1606 இளநிலை மற்றும் 415 முதுநிலை சட்டப் படிப்பிடங்களில், ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பூஜ்யம் என்கிற அநீதியான நிலை தொடர்ந்து நடைபெறுகிறது.
சில கல்லூரிகளில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% பொருளாதார இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு 22% ஓபிசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுக்க உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழங்களில் ஓபிசிகளுக்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது.
கடந்த ஆண்டு இது தொடர்பான புகார் ஒன்று, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் (NCBC) பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது.
ஆணையத்தின் விசாரணையின் போது, தேசிய சட்டப் பல்கலைக்கழங்கள் அரசின் நிதி உதவிப் பெறாத தன்னாட்சி அமைப்புக என்பதால், இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்று அதன் துணைவேந்தர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த விளக்கம் தவறான தகவல் கொண்டுள்ளதாக நிருபிக்கப்பட்டு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. (இது தொடர்பான விரிவான தகவல்களை, AIOBC Federation ன் பொதுச் செயலாளர் திரு.கோ.கருணாநிதி அவர்கள், ஜூன் மாதம் தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்துள்ளார்)
2019 ஜூன் மாதம் தொடங்கிய ஆணையத்தின் விசாரணை முடிவில், அனைத்து தேசிய சட்டப் பல்கலைக்கழங்களிலும் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசின் 27% மற்றும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் (Domicile Seats) அந்தந்த மாநிலங்களின் இடஒதுகீட்டு கொள்கையின் அடிப்படையிலும் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழு இவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
//
"The Commission recommends that all the National Law Universities to strictly implement the UGC guidelines, Central Educational Institutions Reservation Rules, State Government Rules and orders by following the admission of OBC candidates of 27% in "all India seats" and "relevant percentage" recommended by State Governments in the local domicile seats for the admission of academic year starting 2020 onwards, and submit a compliance report at the earliest to this commission."
//
CEI Act - 2006, பல்கலைக்கழக மானிகக்குழுவின் (UGC) நெறிமுறைகள், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC) ன் உத்தரவு, எச்சரிக்கை ஆகிய அனைத்தையும் மீறி, எந்த அமைப்பையும் மதிக்காமல் 2020 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையிலும் ஓபிசி இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் தலையிட்டு, ஓபிசி மாணவர்களுக்கான 27% மற்றும் மாநில வாரி இடஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் தானே என்று சிலர் கருதலாம். ஆனால் மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பிடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு மறுக்கப்பட்டபோது, திமுக தன்னுடைய போராட்டத்தை கடிதத்திலிருந்து தான் தொடங்கியது. இறுதியில் சட்டப்படி அந்த இடஒதுக்கீட்டுக்கான உத்திரவாதத்தை பெற்று தந்தது.
மருத்துவக் கல்விக்கு அடுத்ததாக, சட்ட கல்வியில் ஓபிசி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை திமுக தொடங்கியிருக்கிறது. அதற்கான சான்றும் முதல் முயற்சியும் தான் இந்த கடிதம்.
தேசிய சட்டப் பல்கலைக்கழங்களில் ஓபிசி மக்களுக்கான சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக