திங்கள், 19 அக்டோபர், 2020

டிஆர்பி என்றால் என்ன?.. ஒரு நிமிடத்துக்கும் மேல் யாரெல்லாம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை....

hindutamil.in : what-is-trp

எளிமையாகச் சொல்வதென்றால், ஒரு நிமிடத்துக்கும் மேல் யாரெல்லாம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கிறார்களோ அவர்கள் அந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களாகக் கருதப்படுவார்கள். ஒரு பார்வையாளர் இரண்டு வயதுக் குழந்தையாகவும் இருக்கலாம். டிஆர்பி அல்லது ‘டார்கெட் ரேட்டிங் பாய்ன்ட்’ என்பது, தொலைக்காட்சிப் பார்வையாளர்களை மதிப்பிடுவதற்கு, சந்தைப்படுத்தல் முகமைகளும் விளம்பர முகமைகளும் பயன்படுத்தும் அளவீடு ஆகும். இந்தியாவில், டிஆர்பியானது ‘பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சி’லால் (பிஏஆர்சி - பார்க்) பதிவுசெய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளின் தொலைக்காட்சிகளில் பார்-ஓ-மீட்டர்களை நிறுவுவதன் மூலம் இது பதிவுசெய்யப்படுகிறது. இதுநாள் வரை, பார்க் அமைப்பானது இந்த மீட்டர்களை நாடெங்கும் 44 ஆயிரம் வீடுகளில் நிறுவியிருக்கிறது. காணொளிகள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு அவற்றில் அடையாள சமிக்ஞை ஒலிகள் பதிவிடப்படும். இந்த ஒலிகள் மனிதக் காதுக்குக் கேட்காது. ஆனால், இவற்றுக்கு உரிய மென்பொருளும் வன்பொருளும் இவற்றைக் கண்டறிந்துவிடும். எந்த நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்ற தகவலை பார்-ஓ-மீட்டர்கள் பதிவுசெய்வதைப் போல, அடையாள சமிக்ஞை ஒலிகளையும் அவை பதிவுசெய்துவிடும்.

வீடுகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன?

பார்-ஓ-மீட்டர்கள் நிறுவுவதற்கான வீடுகளைத் தேர்ந்தெடுப்பது இரண்டு கட்ட நடைமுறையாகும். முதல் கட்ட நடவடிக்கையானது கணக்கெடுப்பு ஆகும். நாடெங்கும் உள்ள 3 லட்சம் குடும்பங்களை நேருக்கு நேர் சந்தித்து இந்தக் கணக்கெடுப்பு விரிவான அளவில் நடத்தப்படும். இது ஆண்டுதோறும் நடத்தப்படும் கணக்கெடுப்பு. இவற்றிலிருந்து எந்த வீடுகளில் பார்-ஓ-மீட்டர்கள் நிறுவப்பட வேண்டுமோ அந்த வீடுகள் தேர்ந்தெடுக்கப்படும். வீடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான களப் பணி நேரடியாக பார்க் அமைப்பால் செய்யப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்த தகவல் தினமும் பார்க் இந்தியா அமைப்பிடம் தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அமைப்பின் இணையதளம் கூறுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் வீடுகள் பரிசோதிக்கப்படுகின்றன.

சந்தேகத்துக்குரிய வீடுகள் பார்க் இந்தியா அமைப்பால் நேரடியாகப் பரிசோதிக்கப்படுகின்றன. மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துபவர்களைக் கண்காணிக்கத் தனி நிறுவனமொன்றை பார்க் அமைப்பு நியமித்திருக்கிறது என்று அந்த அமைப்பின் இணையதளம் கூறுகிறது. தகவல் மற்றும் ஒலி/ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளின்படி பார்-ஓ-மீட்டர்கள் பொருத்தப்படும் வீடுகள் ஆண்டுதோறும் மாற்றப்படுகின்றன. பழைய வீடுகளில் முதலில் நீக்கப்பட்டு, அதே நேரத்தில் எண்ணிக்கையில் குறைவுபடாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒரே நேரத்தில் இல்லாதபடி இந்த சுழற்சி முறையானது, ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுகிறது. பார்-ஓ-மீட்டர்கள் எந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன என்ற ரகசியமும் அவை பொருத்தப்பட்ட வீடுகளின் அந்தரங்கமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று தகவல் மற்றும் ஒலி/ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கூறுகிறது. தன்னிச்சையான நடத்தை நெறிமுறை ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அமைச்சகம் வலியுறுத்துகிறது.

நடைமுறையில் உள்ள ஓட்டைகள் என்ன?

டிஆர்பியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வீடுகளுக்கு ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சி அலைவரிசைகள் பணம் கொடுத்துவருவதாக மும்பை காவல் துறை கூறுகிறது. இது தொலைக்காட்சிகள் டிஆர்பியை அணுகும் விதம் தொடர்பில் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

“தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வீடுகளைத் தங்களுக்குச் சாதகமாகச் சிலர் முன்பு பயன்படுத்தியதுபோல் தற்போதும் பயன்படுத்த முயல்கின்றனர். இதற்கு எதிராக பார்க் தனது கண்காணிப்பையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்கிறது. ‘இந்தியா என்ன பார்க்கிறது’ என்பது குறித்துத் துல்லியமான, நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களைத் தரும் தனது நோக்கத்தில் பார்க் அமைப்பானது சிறிதும் பிறழாமல் உறுதியுடன் இருக்கிறது. மும்பை காவல் துறை இது தொடர்பாக எடுத்திருக்கும் முயற்சிகளை பார்க் பாராட்டுகிறது. எங்கள் உதவியைக் கேட்டால் நிச்சயம் நாங்கள் வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

டிஆர்பியின் இயங்குமுறை பற்றி பல்வேறு தடவை கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. டிஆர்பி நடைமுறைகளை மறுபரிசீலிக்க வேண்டும் என்று சமீபத்தில் குறிப்பிட்ட தகவல் மற்றும் ஒலி/ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ‘டிஆர்பி இதழிய’லைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘பாஞ்சஜன்யா’ இதழ் தொடர்பான நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்துகொண்டு பேசியபோது, “நாம் சுயக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், ஊடக நிறுவனங்கள் தங்கள் உள்ளடக்கங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதற்கான வழிமுறைகளை அவையே தேடிக்கொள்ள வேண்டும். ஊடகச் சுதந்திரம் மீதும், பத்திரிகைச் சுதந்திரம் மீதும் அரசு நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஆனால், அவற்றின் சுதந்திரத்தை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது என்பதற்கான வழிமுறைகளை ஊடகம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்றார் அவர். டிஆர்பியானது உண்மையான பார்வையாளர் எண்ணிக்கையைப் பிரதிபலிக்கவில்லை என்று அரசுத் தொலைக்காட்சி அலைவரிசையான தூர்தர்ஷன் பல முறை கூறியிருப்பதை இங்கே நினைவுகூரலாம்.

பல தரவுகளின்படி, தொலைக்காட்சிகளின் வருமானத்தில் 70% விளம்பரங்களிலிருந்தும் 30% சந்தாவிலிருந்தும் வருகிறது. சந்தா விகிதம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பதை ‘இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்’தான் (ட்ராய்) நிர்ணயிக்கிறது. சந்தா விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளும் பல முறை வேண்டுகோள் விதித்திருக்கின்றன.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக