சனி, 24 அக்டோபர், 2020

ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்: எழுந்த கோரிக்கை!

 ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்: எழுந்த கோரிக்கை!

minnambalam : ஆளுநர் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.   நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து மற்ற மாநிலங்கள் மருத்துவக் கலந்தாய்வுக்கு தயாராகிவிட்ட நிலையில், தமிழகம் இன்னும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதாவிற்கான ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதே சமயம், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 3-4 வாரங்கள் அவகாசம் தேவை என ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதினார் ஆளுநர்.

சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் ஒப்புதல் அளிக்கக் கோரி வலியுறுத்தியும் ஆளுநர் தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்பப் பெற குடியரசுத் தலைவருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதினார். அதேபோன்ற கோரிக்கை தற்போது வலுக்கத் துவங்கியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் அறிவுரைப்படி ஆளுநர் பணியாற்ற வேண்டும். அமைச்சர்கள் குழு எடுக்கும் முடிவுகளையும் சட்டம் இயற்றப்படுவதற்கான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆளுநருக்குள்ள விருப்பு உரிமையின் அளவு மிக மிகக் குறைவாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதற்கு அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை. பல மாநில ஆளுநர்களைப் போலவே தமிழக ஆளுநரும் மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகவே செயல்படுகிறார்.7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவிற்குத் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். அப்படி வழங்குவதில் காலதாமத்தை ஏற்படுத்துவாரேயானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

தமிழக ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின்படியான தனது கடைமையை நிறைவேற்றாமல், பாஜகவின் கொள்கையை அமல் படுத்தும் நோக்கிலேயே தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நலனையும் அதன்மூலம் தமிழக மருத்துவ கட்டமைப்பையும் சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு துணையாக உள்ளார் என கருத இடம் ஏற்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கவே முடியாது என்று தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “ஆளுநர் உடனடியாக அரசுப்பள்ளி மாவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது ட்விட்டரில், “உள் ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கனவே 45நாட்களாகிவிட்ட நிலையில் அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலையை உணர்ந்து ஆளுநர் விரைவில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக