சனி, 31 அக்டோபர், 2020

பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை: செங்கோட்டையன்

பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை: செங்கோட்டையன்

மின்னம்பலம் : நவம்பர் மாதத்துக்கான தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்திய கூறுகளே இல்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு துணை ஆரம்பச் சுகாதார நிலைய கட்டிடத்தை இன்று (அக்டோபர் 31) திறந்து வைத்து, தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கொரோனா குறைந்து வரும் சூழலில்  பள்ளிகள் திறப்பிற்குச் சாத்தியக் கூறுகள் உள்ளதா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், “அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. திறந்தவெளியில் பள்ளிகளை நடத்தினாலும் மாணவர்கள் பனி, வெயிலால் பாதிக்கப்படுவார்கள். எனவே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகுதான் முடிவெடுக்கப்படும். இதுகுறித்து முதல்வர் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

தனியார்ப் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் இதுவரை 5.25 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,  “நீட் தேர்வில் பயிற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி தேவை என்னும் அந்தப் பட்டியலில் வெள்ளிக்கிழமை வரை 9,842 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் கூடுதலாகப் பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் பதிவு முடிவு பெற்ற பின் ஓரிரு நாட்களில் நீட் பயிற்சி தொடங்கும்” என்றும்  கூறினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக