திங்கள், 12 அக்டோபர், 2020

இரண்டாம் குத்து - கலையும் ஆபாசமும் ~ சினிமா இருள் அவ்வப்போது நம் வாழ்வைக் கவ்வுகிறது.

Karikalan R : · இரண்டாம் குத்து - கலையும் ஆபாசமும் ~ இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் தன் அடுத்தக் குத்தை ஆரம்பித்துவிட்டார். படத் தலைப்பு இரண்டாம் குத்தாம். இன்று பாரதிராஜா புலம்புகிறார். அவரும் ராதாவை கோடிட்ட இடங்களில் மலர்களால் நிரப்பியவர்தான்! என்ன! அது கலைநயத்தோடு இருந்தது. இ.அ.மு. கு டைரக்டரின், ஹரஹர மகாதேவகி படத்தை கடந்த ஆண்டு பார்த்தேன். ஹார்மோன்களில் ஸ்கூட்டி ஓட்டி இளையோரை தடுமாற வைத்த படம் இடைவேளையில் ஒரு டீன் ஏஜ் பையன் அவன் நண்பனிடம் 'டேய் மச்சான் படம் செமடா! திரிஷா இல்லன்னா நயன்தாராவ விட இன்னும் மேலடா!
ஒரே டபுள் மீனிங்! விசிலு அள்ளுதுடா! ' அலையில் பொங்கிக் கொண்டிருந்தான்.
இத்தகையவர்களை மீண்டும்
குறி வைக்கிறது இரண்டாம் குத்து!
சிகரெட் பிடித்து சூயிங்கம் மென்று திரும்புகிற பிள்ளைகளை யாரும் வீட்டுக்குள் சேர்க்காமல் வீதியில் நிறுத்திவிடுவதில்லை.
இன்றைய வணிகம் சூழ்ந்த வாழ்வு, பிள்ளைகளைகளைத் தடுமாற வைக்க எத்தனையோ வசீகர வலைகளை அலைபேசி, கணினி, தொலைக்
காட்சி, சினிமா வழியாக வீசிக்கொண்டே இருக்கிறது.
இடைவெளியில் பார்த்த இளைஞன் போலவே அவனது பதின் பருவத்தில் க.காவும் இருந்தான். எதிர்பால் உடலின் ரகசியத்தை அறிய அவன் செக்ஸ் படங்கள் ஓடிய தியேட்டர்களில்  நுழைந்திருக்கிறான்.
ஆனாலும் அவன் தன் வளமான மரபில் இருந்த காமம் பற்றிய பாடல்களையும் கதைகளையும் படித்துக் கொண்டே இருந்தான்.
போர்னோ படங்களைப் பார்க்க நண்பர்கள் அவனைத் தூண்டியபோது அதிலிருந்த காமம் இயல்பில்லை என்பதை அறிந்தான்.
போர்னோ படங்கள் பெண் உடலை சந்தையாக்கி இருப்பதையும் உணர்ந்தான். வெறும் உறுப்புகளை எக்ஸ்போஸ் செய்து பெண்ணை வன்முறைக்கு உள்ளாக்கும் அக்காட்சிகளில் காமம் அழிந்த பலாத்காரத்தையே அவன் கண்டான்.
ஒரு வகையில் ஹரஹர மஹாதேவகி, இ.அ.மு.கு, இ.கு, போன்ற படங்கள், பாலியல் கிளர்சியை என்னதான் நகைச்சுவையோடு இணைத்துச் சொன்னாலும், இவை பாலியில் குழப்பத்தில் உள்ள இளைஞர்களை, இணையத்தில் போர்னோ படங்களை நோக்கி நகர்த்தவே செய்யும்.
போர்னோ படங்களில் உள்ள காமம் விரும்பி அனுபவிக்கப்படுபவை அல்ல. அவை செயற்கையாக ஊசிகளால், மாத்திரைகளால், உணர்ச்சிகளைத் தூண்டி எடுக்கப்படுபவை.
பார்ப்பவர்களின் பாலியல் படைப்பூக்க மனநிலையை அழித்து வக்கிர உணர்வுகளைத் தூண்டக் கூடியவை.
ஒரு பெண்ணை பலர் அனுபவிக்கும் காட்சிகள் காமம் குறித்த இயல்பான மனப்பதிவுகளை அழிக்கக் கூடியவை.
இப்படங்களில் நடிக்கும் பல பெண்கள் கடத்தப்படுபவர்கள்.வலுக்கட்டாயப் படுத்தி இத்தகையப் படங்களில் நடிக்க வைக்கப்படுபவர்கள்.
போர்னோ சந்தை பெரியது. ஹாலிவுட் சந்தையைவிட பெரியது. இதில் புழங்குபுவை பல பில்லியன் டாலர்கள். அமெரிக்கா, ஜெர்மன், கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இது அங்கீகரிக்கப்பட்ட வணிகமாக இருக்கிறது.
போர்னோ படத்தை பார்க்கும் ஒருவர் தன்னளவில் பாலியல் சிதைவுக்கு உள்ளாவதுடன், உலகில் எங்கோ ஒரு சகோதரி கடத்தப்படுவதற்கு வன்கொடுமையில் தள்ளப்படுவதற்கு காரணமாக இருக்கிறார் என்பதை அறியவேண்டும்.
காமம் அழகானது. அது விழிப்பது, இயங்குவது ஒரு கவிதையைப் போல, நதியைப்போல தனக்கான பாதையைத் தானே தேர்ந்தெடுக்கக்கூடியது.
ஆகவேதான் 'சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை!' என்றார்கள்.
அதே வேளை இளமை, வெறும் காதல், காமம் மட்டுமே சார்ந்தது என்பதெல்லாம் நமது வணிக ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்படுபவை.
இங்கு இயற்கையைக் காக்க, சமூக நீதியைக்காக்க, இனம், மொழி காக்க எழுந்த இளைஞர்களுண்டு.வளர்மதி, வெமுலா, முத்துக்குமார் என இளைஞர்களின் கதைகள் நிறைய இருக்கின்றன.
இரண்டாம் குத்து போன்ற சினிமா இருள் அவ்வப்போது நம் வாழ்வைக் கவ்வுகிறது.
எது விளக்கு? எது இருள்? என்பதை நாமும் நம் பிள்ளைகளும் அறியவேண்டும். ஆகவேதான் கவிதை, சங்க இலக்கியம் என இயங்கியவன் 'திரையும் வாழ்வும்' எழுத நேர்ந்ததும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக