புதன், 14 அக்டோபர், 2020

சேலம் அண்ணணை ஐஸ் பெட்டியில் அடைத்து வைத்து உயிர் பிரிய காத்திருந்த தம்பி!!

veerakesari : சேலம் மாவட்டத்தில் தம்பி உயிருடன் இருந்த அண்ணனை குளிர்பதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டியில் அண்ணன்,சற்று மனநிலை பாதித்த தம்பி தங்கை மகள்கள் ஆகிய நால்வரும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதையொட்டி அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பி ஏற்காடு அடிவாரத்தில் உள்ள இறந்தவர்களை குளிர்பதன பெட்டியில் வைக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொலைபேசி அழைப்பை எடுத்து உறவினர் ஒருவர் இறந்து விட்டார் எனவே குளிர்பதன பெட்டி (பிரீசர் பொக்ஸ்) வேண்டுமென்று அவரது முகவரியை தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் தம்பி வீட்டிற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இறந்தவர்களின் உடலை வைக்கக்கூடிய ஒரு குளிர்பதன பெட்டியை கொண்டு வந்தனர். அப்போது அங்கு இறந்தவரின் உடல் இல்லாததை கண்டு அங்கிருந்த அவரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் இறந்து போனவரின் உடல் வைத்தியசாலையில் உள்ளது. எனவே நீங்கள் குளிர்பதன பெட்டியை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள்.

நாளை மதியம் வந்து எடுத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஊழியர்கள் குளிர்பதன பெட்டியை அங்கு இறக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஊழியர்கள் குளிர் சாதன பெட்டியை எடுக்க தம்பி வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் வைத்து சென்ற குளிர்பதனப்பெட்டியில் அண்ணன்  நடுங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் தம்பியிடம் உயிருடன் உள்ளவரை எதற்காக குளிர்பதனப் பெட்டியில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.


அதற்கு அவர் எனது அண்ணன் இறந்து விட்டார். ஆனால் அவரது ஆன்மா பிரியவேண்டும் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் குளிர்பதன பெட்டியில் வைத்துள்ள முதியவரை மீட்க முயன்றனர். ஆனால் தம்பி அவர்களை தடுத்து விட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சூரமங்கலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பொலிஸார்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடுங்கி கொண்டிருந்த முதியவரை மீட்க முயன்றனர்.

அப்போது பொலிஸாரையும் தம்பி தடுத்துள்ளார். உடனே பொலிஸார் குளிர்பதனப்பெட்டியில் நடுங்கி கொண்டிருந்த அண்ணனை அதிரடியாக மீட்டுள்ளனர்.

பின்னர்  ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதியவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இது குறித்து பொலிஸார் கூறியதாவது:-

தனியார் வை்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த முதியவரை நேற்று நள்ளிரவு வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளனர்.

பின்னர் அதிகாலையில் அவரை குளிர்பதன பெட்டியில் வைத்து உள்ளனர். சுமார் 12 மணி நேரம் அவர் குளிர்பதன பெட்டியில் நடுங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அவருக்கு திருமணம் ஆகவில்லை.

தம்பி சற்று மனநிலை பாதித்தவர் என்பது தெரிய வருகிறது. இதனால் அவர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இருப்பினும் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக