வியாழன், 1 அக்டோபர், 2020

மதுரை மீனாட்சி? "திரு ஆலவாய் உடைய நாயனார்' ! 'திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்'. கல்வெட்டுகள் தரும் புதிய செய்திகள்

முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் : மீனாட்சி என்ற பெயர் எப்போது சூட்டப்பட்டது? தற்போது கோயிலின் பிரதான தெய்வங்கள் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகினர். ஆனால், கோயிலில் கிடைத்த 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றின்படி, ஆரம்ப காலத்தில் இந்தக் கோயிலில் உறையும் தெய்வத்தின் பெயர் 'திரு ஆலவாய் உடைய நாயனார்' என்பதுதான். அம்மனின் பெயர் 'திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்'. தேவாரத்தில் இந்தக் கோயிலில் உள்ள கடவுளின் பெயர் 'அங்கயற்கண்ணி உடனுறையும் ஆலவாய் அண்ணல்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் பொதுவாக எல்லா பெண் தெய்வக் கோயில்களுக்கு காமக்கோட்டமுடைய நாச்சியார் என்பதுதான் பெயர். அந்தப் பெயரே இங்கேயும் வழங்கப்பட்டிருக்கிறது" . 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த இதுவரை படிக்கப்படாத 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தற்போது ஆய்வாளர்கள் படியெடுத்து, படித்துள்ளனர். இந்தக் கல்வெட்டுகள் கோயில் குறித்த பல அரிய தகவல்களைத் தருவதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது உள்ள மீனாட்சி அம்மன் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அம்மனின் பெயர் திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார் என்றே வழங்கப்பட்டது என்றும் அந்தக் கோயிலில் இருந்த பாண்டிய மன்னர் காலக் கல்வெட்டுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது.

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் படிஎடுத்து, அவற்றை வாசித்து, பதிப்பிக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இந்தப் பணிகள் தொல்லியலாளரான சி. சாந்தலிங்கத்திடம் விடப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த கல்வெட்டுகளில் 60 கல்வெட்டுகளை ஏற்கனவே இந்தியத் தொல்லியத் துறை, படிஎடுத்துப் பிதிப்பித்துள்ளது. தற்போது சி. சாந்தலிங்கம் தலைமையிலான அணியினர் இதுவரை வாசிக்கப்படாத 410 கல்வெட்டுகளை கோயிலில் கண்டறிந்து, படித்துள்ளனர்.

இவற்றில் 79 கல்வெட்டுகள் முழுமையானதாகவும் 23 கல்வெட்டுகளில் பெயர்கள் போன்றவையும் சுமார் 300 கல்வெட்டுகள் துண்டு துண்டானதாகவும் கிடைத்திருக்கின்றன. கோயிலில் பயன்படுத்தப்படும் திருவாச்சி விளக்கு, பாத்திரங்கள் போன்றவற்றிலும் சில பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளன. படிக்கத்தக்க வகையில் இருந்த 79 கல்வெட்டுகளில் 78 கல்வெட்டுகள் தமிழில் இருந்தன. ஒரே ஒரு கல்வெட்டு கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தது. கோயிலில் இருந்த கம்பத்தடி மண்டபம் கட்டப்பட்டது தொடர்பான கல்வெட்டு தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்டிருந்தது.

மீனாட்சி அம்மன் கோயிலைப் பொறுத்தவரை, தற்போதைய முழுமையான அமைப்பு என்பது நாயக்கர் காலத்தில் எட்டப்பட்டது. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நகரின் மையப்பகுதியில் கோயில் இருந்து வந்துள்ளது.


கிழக்குக் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் சில கல்வெட்டுகள் கிடைத்தன. அவை மாறவர்மன் குலசேகரனுடைய காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டுகளின்படி கோயில் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குள்ளாகவே, அதாவது 1250ஆம் ஆண்டுவாக்கில் மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்திருக்கிறது. கர்ப்பகிரகம், ஏழு நிலை கோபுரம், ஆடவல்லான் சன்னிதி போன்றவை அழிந்து, மீண்டும் கட்டப்பட்டுள்ளன என்ற செய்தி கல்வெட்டில் கிடைத்திருக்கிறது.

"கி.பி. 1190 - 1216ல் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியனின் காலத்தில்தான் இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் கோயில் ஏதோ காரணத்தால் அழிந்துவிட, அவனுக்குப் பின்வந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கோயில் புதுப்பிக்கப்பட்டது இந்தக் கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது" என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனரும் ஆய்வாளருமான சொ. சாந்தலிங்கம்.

1220-1235வரை ஹொய்சாள தேசத்தை ஆண்ட சோமேஸ்வரன் என்ற மன்னன் மதுரையில் வந்து தங்கியிருந்திருக்கிறான். அப்போது அவன் பெயரால் வீரசோமேஸ்வரன் சந்தி என்ற பெயரில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்து, அதற்கான நிலக் கொடைகளை அளித்திருக்கிறான் என்ற செய்தியும் கல்வெட்டுகளில் கிடைத்திருக்கிறது. அதேபோல, இந்த மன்னன் கோ சாலை ஒன்றை உருவாக்கி, அதற்காகவும் கொடைகளை அளித்திருக்கிறான்.

மாலிக் காஃபூர் மதுரை மீது படையெடுததற்குப் பிறகு, ஐம்பதாண்டுகளுக்கு கல்வெட்டுகளே இல்லை. அதற்குப் பிறகு, விஜயநகரப் பேரரசு மதுரையை மீட்ட பிறகே மீண்டும் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. புகழ்பெற்ற விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் ராமேஸ்வரத்திற்குப் புனித யாத்திரை சென்றபோது மதுரையிலும் அழகர் கோயிலிலும் தங்கியிருக்கிறார். அவர், மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரு பூஜையை நடத்த, திருஞானசம்பந்த நல்லூர் என்ற ஒரு ஊரையே தானமாகக் கொடுத்திருக்கிறார். 500 பொற்காசுகளையும் கொடுத்திருக்கிறார்.

மீனாட்சி என் பெயர் எப்போது சூட்டப்பட்டது?

தற்போது கோயிலின் பிரதான தெய்வங்கள் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகினர். ஆனால், கோயிலில் கிடைத்த 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றின்படி, ஆரம்ப காலத்தில் இந்தக் கோயிலில் உறையும் தெய்வத்தின் பெயர் 'திரு ஆலவாய் உடைய நாயனார்' என்பதுதான். அம்மனின் பெயர் 'திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்'.

தேவாரத்தில் இந்தக் கோயிலில் உள்ள கடவுளின் பெயர் 'அங்கயற்கண்ணி உடனுறையும் ஆலவாய் அண்ணல்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. "தமிழ்நாட்டில் பொதுவாக எல்லா பெண் தெய்வக் கோயில்களுக்கு காமக்கோட்டமுடைய நாச்சியார் என்பதுதான் பெயர். அந்தப் பெயரே இங்கேயும் வழங்கப்பட்டிருக்கிறது" என்கிறார் சாந்தலிங்கம்.

கி.பி. 1752ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பாவை விளக்கில்தான் மீனாட்சி என்ற பெயர் முதன்முதலில் இடம்பெறுவதாகச் சொல்கிறார் இவர். 1898ல்தான் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என்ற பொறிப்பு ஒரு திருவாச்சி விளக்கில் இடம்பெற்றுள்ளது. "இந்தக் காலத்திற்கு முன்பாகவே குமரகுருபரர் பாடிய பிள்ளைத் தமிழ் மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆகவே மீனாட்சி என்ற பெயர் விஜயநகர மன்னர்களின் காலத்தில் வந்திருக்கலாம். ஆனால், கல்வெட்டில் முதன்முதலாக கி.பி. 1752ல்தான் அந்தப் பெயர் காணக்கிடைக்கிறது" என்கிறார் சாந்தலிங்கம்.

இந்தக் கோயிலில் இருந்த ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கு பல இறையிலி நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன. 1710வாக்கில் அந்த இறையிலி நிலங்களை விஜயரங்க சொக்கநாதன் மீண்டும் எடுத்துக்கொண்டனர். இந்தப் பிரச்சனையில் பாதந்தாங்கிகளில் ஒருவர் கிழக்குக் கோபுரத்தில் ஏறி கீழே விழுந்து உயிரை விட்டார். இந்தச் சம்பவம் ஒரு கல்வெட்டில் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கிறார் சாந்தலிங்கம்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கிழக்கு வாயில் வழியாக கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இப்போதும் கிழக்கு வாயில் வழியாக கோயிலுக்குச் செல்பவர்கள் மிகவும் குறைவுதான்.

காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் இந்தக் கோயிலுக்கு ஒரு லட்சம் வராகன்களை இந்தக் கோயிலுக்குக் கொடுத்திருக்கிறார். அவர் அங்கே ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்கி ஆங்கிலமும் தர்க்கமும் கற்பிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கல்வெட்டுகளில் மீனாட்சி அம்மன் சன்னிதியின் வடக்குச் சுவரிலும் சொக்கநாதர் சன்னிதியின் வடக்குச் சுவரிலும் பல கல்வெட்டுகள் முழுமையாகக்கிடைத்திருக்கின்றன.

மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயத்தையும் சாந்தலிங்கம் சுட்டிக்காட்டுகிறார். "எல்லாப் பெரிய கோயில்களிலும் தேவரடியார்கள் உண்டு. ஆனால், இதுவரை நாங்கள் படித்த கல்வெட்டுகளில் தேவரடியார் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. தேவரடியார் வழக்கம் சோழ நாட்டோடு ஒப்பிட்டால் பாண்டிய நாட்டில் குறைவு என்ற செய்தியோடு இதனைப் பொருத்திப் பார்க்க வேண்டும்" என்கிறார்.

கோயிலைச் சேர்ந்த கல்வெட்டுகளைத் தவிர, வைகை நதிக் கரையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது கோயிலின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கல்வெட்டையும் ஆய்வாளர்கள் படித்துள்ளனர். அந்தக் கல்வெட்டு கி.பி. 700ஆம் ஆண்டைச் சேர்ந்தது. நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. அதில் வைகையில் கால்வாய் வெட்டி, மதுரை தவிர்த்த வேறு பகுதிகளுக்கு நீரைக் கொண்டு சென்ற தகவல் இருக்கிறது.

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களான திருமலை நாயக்கர், விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆகியோரது கல்வெட்டுகள் இங்கு கிடைத்திருக்கின்றன. இங்கு இருப்பதிலேயே மிகப் பழைமையான கல்வெட்டு கி.பி. 700ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அரிகேசரி பராங்குச மாறவர்மன் காலத்தைச் சேர்ந்தது. 1898ல் ஒரு விளக்கில் கிடைத்த பொறிப்புதான் காலத்தால் புதியது.

கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளைப் படியெடுத்து படித்த இந்தக் குழுவில் மதுரை அருங்காட்சியகத்தின் பாதுகாவலர் மருது பாண்டியன், பாண்டிய நாடு வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆர். உதயகுமார், மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த பி. ஆசைத்தம்பி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தற்போது இந்தக் கல்வெட்டுகள் தொகுக்கப்பட்டு, அவற்றின் பொருள் தற்காலத் தமிழில் விளக்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் விரைவில் அதனைப் பதிப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக