செவ்வாய், 13 அக்டோபர், 2020

தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்க மத்திய அரசு சதி?

hindutamil.in : புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி கூற, இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவிக்க இப்பிராந்தியத்தில் இது புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 

பிரெஞ்சு-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 1954ல் புதுச்சேரி பகுதிகளான தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி,காரைக்கால், ஆந்திரத்தை யொட்டியுள்ள ஏனாம், கேரளத்தை யொட்டியுள்ள மாஹே இந்தியாவில் இணைந்தன. ‘4 பிராந்தியங்கள் அடங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படும்’ என்று அப்போதைய பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார். கடந்த 1979ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தமிழகத்துடன் புதுச்சேரியை இணைக்க நடவடிக்கையை தொடங்கினார். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் ஆதரவு தெரிவித்தார். இதை எதிர்த்து புதுச்சேரியில் கடும் போராட்டம் ஏற்பட்டது. அரசு அலுவலகங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டு 10 நாட்கள் வரைபோராட்டம் நீண்டது. வன்முறையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் இணைப்பு முடிவை மத்திய அரசு கைவிட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. 

கடந்த மாதம் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, “புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டவுடன் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பாஜக மத்திய அரசிடம் புகார் அளித்தது. ‘முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது’, என்று கூற, அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக மனு அளித்துள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி மாநில அரசின் நில உரிமையை பறித்து விட்டனர். நிதியும் தருவதில்லை.ரேஷனில் அரிசி போடமுடிய வில்லை. ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. தீபாவளிக்கு ஏழை மக்களுக்கு இலவச துணி தர மறுப்பு தெரிவித்து பணத்தை வழங்குமாறு கூறிவிட்டனர்.

 இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தோடு புதுவையை இணைக்க பா.ஜனதா திட்டமிடுகிறது என குறிப்பிட்டேன். புதுச்சேரி அரசிடம் இருந்த நிலம், நிதி, மக்கள் திட்டங்களுக்கான அதிகாரங்களை பறித்து தமிழகத்தோடு இணைப்பது என்பதுதான் மத்திய பாரதிய ஜனதா அரசின் சதி திட்டம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக