சனி, 10 அக்டோபர், 2020

மனம் வலிக்கும் போது சிரி, சிரிக்க வை’ சாப்ளினின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்!

பாண்டியன் சுந்தரம் : நிலைக் கண்ணாடி போன்ற நல்ல நண்பன் எனக்கு


வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் நான் அழும்போது அதற்குச் சிரிக்கத் தெரியாது’ - சார்லி சாப்ளின் கஷ்டத்திலும் சிரிக்கவைத்த கலைஞன்!அரை அங்குல மீசை... இதை மட்டுமே அடையாளமாகக் கொண்ட இருவரில், ஒருவர் உலகை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லர். மற்றொருவர் நகைச்சுவை உலகின் பிதாமகன் சார்லி சாப்ளின்.>ஹிட்லர் பத்தாண்டுகளில் மண்ணோடு மண்ணாக காணாமல் போய்விட்டதும் வரலாற்றில் களங்கமாய் வேறு மாதிரி நீங்காமல் பதிவானதையும் அறிவோம். சார்லி சாப்ளின் மட்டும் காலங்களைக்கடந்து இன்றும் நம் எல்லோரின் புன்னகையிலும் வாழ்கிறார்!‘திரைப்படத்தின் மூலம் உங்களை சிரிப்பலைகளில் மிதக்க வைக்க, எனக்கு ஒரு பூங்கா, ஒரு போலீஸ்க்காரர், மற்றும் அழகிய ஒரு பெண் இருந்தால் போதும்’ என்பது தான் சாப்ளினின் கொள்கை. எப்படிப்பட்ட உம்மணாஞ்சிகளையும் சிரிக்க வைத்து விடும் சாப்ளினின் நடிப்பு. காலம் கடந்து இப்போதும் உலகம் முழுவதும் சாப்ளினுக்கும், அவரது படங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

அந்தளவிற்கு சாப்ளினின் படங்களில் சிரிப்பிற்கு உத்தரவாதம் உண்டு.நம்மை இப்படியெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் என்றால், அவரது மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நமக்குத் தோன்றலாம். ஆனால் திரையைத் தாண்டி நிஜவாழ்க்கையிலும் தன் சோகங்களை மறைத்து மற்றவர்கள் முன் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நடித்தவர் தான் சாப்ளின்.

அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லொண்ணாத் துயரங்கள்.... வாழ்க்கை அவரை ஒவ்வொரு முறை காயப்படுத்திய போதும், தன் புன்னகையால் அவற்றை வென்று காட்டிய உன்னதக் கலைஞர் அவர்.
'மழையில் நனைந்துகொண்டுச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது’ என்ற இந்த வரிகளே சாப்ளினின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்குச் சான்று.
கடந்த 1889-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம்தேதி லண்டனில் ஏழைக் குடும்பம் ஒன்றில் பிறந்தார் சாப்ளின். எப்போதும் நினைத்து மகிழும்படி, அவரது குழந்தைப்பருவம் அவ்வளவு இனிமையானதாக இருக்கவில்லை. அவர் பிறந்த சில தினங்களிலேயே இசைக்கலைஞர்களான அவரது பெற்றோர் சார்லஸ் ஹன்னாவும், ஹாரியட் ஹில்லும் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.
வாடகை தர முடியாத காரணத்தால் அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி, சாப்ளின் மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். இதனால் அடிக்கடி தங்களது தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கிக்கொண்டு அவர்கள் வீடு மாற்றிக் கொண்டே இருந்தனர். பல நாட்கள் பூங்காக்களிலும், தெருக்களிலும் அவர்கள் படுத்து உறங்கியுள்ளனர்.
பின்னர் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் தன் சகோதரருடன் வளர்ந்த சாப்ளின், பசியில் அழாத நாட்கள் இல்லை. சாப்ளினின் தந்தையும் இவரது 12-ஆவது வயதில் இறந்து போனார் . இதனால் தாயார் நிரந்தரமாக மன நலம் பாதிக்கப்பட்டார். காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்ட்டு அனாதையானார் சாப்ளின்.
‘உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது’ என்று அடிக்கடி சொல்வார் சாப்ளின்.
சாப்ளினும் தன் அம்மாவோடு சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார். முதன் முதலில் 1894-ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் பணியாற்றிய தனது தாய்க்குப் பதிலாக ஒரு சிறிய வேடத்தில் தனியே
மேடையில் நடித்தார். கெட்டியாக நடிப்பைப் பிடித்துக் கொண்டார். சிறுவனாக பசியின் பிடியில் படுத்த படுக்கையாக இருந்தபொழுதுகளில், இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார்.
1903-ஆம் ஆண்டில் `ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்' நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவருக்கு ஒரு நாடகக் கம்பெனியில் நிரந்தர வேலை கிடைத்தது. செர்லாக் ஹோம்ஸ் நிறுவனம் நடத்திய நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம் இவர் பேர் சொன்னது. இதனைத் தொடர்ந்து பிரபல சர்க்கஸ் நடத்திய பல்சுவை நிகழ்ச்சியில் கோமாளி வேடத்திலும் நடித்தார்.
சாப்ளினின் திறமையைக் கவனித்து கீஸ்டோன் திரைப்பட நிறுவனம் சேர்த்துக் கொண்டது. முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார்.
இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடம்தான். அந்த ஜானரில் கில்லி எனப் பெயர் எடுத்தார். இவரைப் பார்த்தாலே பரிதாபமும் சிரிப்பும் ஒன்றாக வர ஆரம்பித்தது. அதையே தன் வெற்றி சூத்திரமாக மாற்றிக் கொண்டார்.
1927-ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும், 1930-ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
ஆனாலும் நடிப்புப் பேசியது. ‘டாக்கி (பேசும் சினிமா) வந்ததும் நடிப்புக்கலை செத்து விட்டது’ என்பதே சாப்ளினின் கருத்து.
1952-ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் டைட்டில் இசை அமைப்பையும் இவரே செய்தார்.
இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது `ஸ்மைல்'. இவரது முதல் டாக்கீஸ் 1940-ஆம் ஆண்டில் வெளியான `தி கிரேட் டிக்டேடர்'. உலகையே தன் ஆளுகைக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு சர்வாதிகாரியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஹிட்லரின் நடவடிக்கைகளை விமர்சித்து அப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ‘உலகம் ஒரு சர்வாதிகாரியின் கையில் சிக்கினால் மக்களின் நிலை என்னவாகும்?’ என்பதே அப்படத்தின் கருவாக இருந்தது.இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் குதிப்பதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இன்றுவரை அப்படம் பேசும் அரசியல் மிகவும் தைரியமானது.
இப்படத்தில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார். ஹிட்லர் மற்றும் நாசிஸ்டுகளால் கொடுமையாகக் கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இருமுறைப் பார்த்தார். ஆனால் கோபப் படவில்லை.
திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை பல முறை திருமணம் செய்திருக்கிறார். 28 வயதில் முதன்முறை 16 வயது மில்ட்ரெட் 'ஹாரிசை' மணந்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தும் போனது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
35 வயதில் `தி கோல்ட் ரஷ்' திரைப்படத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்த போது, 16 வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26,1924-இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததது.
இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்டார் சாப்ளின். இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது.
மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இவரை எதிர்த்துப் பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் 47-ஆவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது.
இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது. ஆனால், சாப்ளினை பேரி துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்குத் தொடர்ந்தார்.
இரத்தப் பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் ரத்தப் பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1943 -இல் தனது 54-ஆவது வயதில் ஓ நீல் என்ற 17 வயதுப் பெண்ணை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர்.
‘நிலைக் கண்ணாடி போன்ற நல்ல நண்பன் எனக்கு வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் நான் அழும்போது அதற்குச் சிரிக்கத் தெரியாது’ - என்ற சாப்ளின்
ஓரளவு வளர்ந்ததும்தான் அமெரிக்காவுக்குப் பயணமானார்.
அன்றைய கால கட்டத்தில் அமெரிக்காவின் குடியமர்வதற்கு ஓரளவு வசதியுடன் இருக்க வேண்டும். ஒரு அகதியாக கார்னோ என்ற குழுவுடன் அக்டோபர் 2, 1912- அன்று அமெரிக்கா வந்தடைந்தார்.அங்கு மெக்சன்னட்டின் நாடகக்குழுவில் அவர் சேர்ந்தார்.
1914-ஆம் ஆண்டு அவர் நடித்த நாடோடி கதாபாத்திரமான டிரெம்ப் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து 1940 வரை ஏறத்தாழ 25 வருடங்கள் அது போன்ற வேடத்திலேயே நடித்து உலகை சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார்.
இதனிடையே இவரது திரைப்படங்களில் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையினை சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டதன் காரணமாக அவர் அமெரிக்க கொள்கைளுக்கு புறம்பான நடவடிக்கைளில் ஈடுபடுவதாகவும், அவர் கம்யூனீசிய வாதியெனவும் சந்தேகிக்கப்பட்டார்.
மேலும் அவரைக் கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டன. சார்ளி சாப்ளின் பெற்ற வெற்றிகள் அனைத்தும் 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் பெறப்பட்டவை என்றாலும், அவர் பிரித்தானிய குடியுரிமையுள்ள ஒரு நபராகவே வாழ்ந்து வந்தார்.
1952 ஆம் ஆண்டில் சார்ளி சாப்ளின் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவர் அங்கிருந்து அமெரிக்கா திரும்புவதை தவிர்ப்பதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக அவர் அமெரிக்கா திரும்புவதற்கான அனுமதிச் சீட்டு இரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர் ஐரோப்பாவிலேயே தங்கி வாழ்ந்ததோடு, பெரும்பாலும் வெவே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிலேயே வாழ வேண்டியதாயிற்று.
‘உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது’ என்று அடிக்கடி சொல்லும் சார்லி சாப்ளின்,
சிறிய மீசை, கிழிந்த கோட்டு, தலைக்குப் பொருந்தாத தொப்பி, வித்தியாசமான நடை, வலிகளை மறைக்கும், மறக்க வைக்கும் புன்னகை என தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று இவர் தொடாத திசைகளே இல்லை. காட்டாத முகங்கள் இல்லை.
சாப்ளினின், டிரேம்ப் (TRAMP), தி கிட் (The kid), கோல்ட் ரஷ் (Gold Rush), சர்க்கஸ் (Circus), சிட்டி லைட்ஸ் (City lights), மாடர்ன் டைம்ஸ் (Modern Times), தி கிரேட் டிக்டேட்டர் (The great Dictator) ஆகிய படங்கள் இன்றளவும் திரை உலக இதிகாசங்களாகப் புகழ் பெற்று விளங்குகின்றன.
‘லாங் ஷாட்டில் பார்க்கும் போது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமானதுதான். க்ளோசப் ஷாட்டில் பார்க்கும்போதுதான் அதில் சோகத்தை நம்மால் கவனிக்க முடியும்’ என்ற சாப்ளினுக்கு இரண்டு முறை சிறப்பு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஏன் நமது இந்தியாவிலும் அவரது தபால் தலையை வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறார்கள்.
1925, ஜூலை மாதம், டைம்ஸ் வார இதழின் அட்டை படத்தை அலங்கரித்த முதலாவது திரைப்பட உலகைச் சேர்ந்த நாயகன் இவர்.
மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார். இவருக்கு இந்தப் பெருமையை வழங்கக் கோரி 1956ஆம் ஆண்டே பரிந்துரைத்திருந்தாலும், இதனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எதிர்த்தது.
சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், அவரைச் சிறப்பிப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்கனவே விரிசல் விட்டிருந்த உறவு மேலும் பாதிக்கப்படும் என்றும் கருதினார்கள்.
இதனிடையே சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் ஆஸ்கர் விருது பெற்ற அட்டன்பரோ கடந்த 1992-ஆம் ஆண்டு சாப்ளின் எனும் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.
சார்லி சாப்ளினின் தாயாராக இதில் நடித்தவர் அவரது மகள் ஆவார். 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற "நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்" எனும் கருத்துக்கணிப்பில் உலகத்தின் தலைசிறந்த 20 நகைச்சுவை நடிகர்கர்களில் ஒருவராக சாப்ளின் தெரிவு செய்யப்பட்டார்.
சாப்ளின், 1977-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று டிசம்பர் 25-இல் தனது 88-ஆவது வயதில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
செத்தும் விடவில்லை சாப்ளினைத் துயரங்கள்...மார்ச் 1, 1978-ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர்.
பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.
சாப்ளினின் மறைவுக்குப் பின்னர் அவரைக் கவுரவிக்கும் வகையில், அவரது தீவிர ரசிகையான உக்ரைன் நாட்டு விண்வெளி வீராங்கனையான லியூட்மீலா கரச்கினா, ஒரு எரிகல்லுக்கு 3623 சாப்ளின் எனப் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
சாப்ளினின் அந்தக் காலப் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்ததப்பட்டது. ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளினும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பங்கு பெற்றார். அதில் அவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
‘உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை’ இது தான் சாப்ளினின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக