வெள்ளி, 30 அக்டோபர், 2020

ஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை ஊழலின் ஊற்றாக அதிமுக அரசு விளங்குகிறது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

dhinakaran :  சென்னை: ஊழலின் ஊற்றாக அதிமுக அரசு விளங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும்,  முதலமைச்சர் பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் காட்டிய அலட்சியத்தால், இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக்  காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு ‘டிசம்பர் 2015’ வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற  அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய்களை முறைப்படி முன்கூட்டியே தூர் வாரி, சீரமைத்து வேண்டிய இடங்களில் அகலப்படுத்தி, இந்த பருவ மழையைச் சந்திக்கச் சென்னை மாநகராட்சி தயாராகியிருக்க  வேண்டும்.



அதற்காக 750 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அதில் வரலாறு காணாத முறைகேடுகள் தலை தூக்கியுள்ளதும் ஏற்கனவே அறப்போர் இயக்கத்தின் சார்பில் கூறப்பட்டது. சிண்டிகேட் அமைத்து சந்தை மதிப்பை விட அதிக  ரேட்டிற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு- உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், லஞ்ச ஊழல் தடுப்புத்துறையும் இது பற்றி  கண்டுகொள்ளவில்லை.  விளைவு சென்னை மாநகர ஆணையரில் இருந்து பொறியாளர்கள் வரை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் மழைநீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்குத் துணை போவது மட்டுமே தங்களின் முக்கியப் பணி  என்று செயல்பட்டு இன்றைக்கு வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடுகளை கோட்டை விட்டுள்ளார்கள். சென்னையில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தது.

ஏற்கனவே 2015 டிசம்பர் வெள்ளத்தில் அ.தி.மு.க. அரசின் தோல்வியால் மக்கள் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. இப்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   கொரோனாவோ டிசம்பர் 2015  வெள்ளமோ, இந்த கனமழையோ - எதையுமே எதிர் கொண்டு மக்களைக் காப்பாற்றும் அடிப்படை அருகதையை எடப்பாடி அரசு இழந்து நிற்கிறது. தேங்கியுள்ள நீர், குளங்கள் போல் சாலைகளில் காட்சியளிக்கிறது.
வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் விட்டது. இன்னும் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு பணிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி அதைச்  செலவிடாமலேயே,  சுருட்டுவது எப்படி என்ற ஊழல் கலையின் ஊற்றாக  அ.தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

அதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ‘ஊழல் நாயகனாக’ வலம் வந்து கொண்டிருக்கிறார். கொரோனாவில் தோற்ற சென்னை மாநகரம், இப்போது ஒரேயொரு கன மழைக்குத் தோற்று நிற்பதும் இது மாதிரியொரு உள்ளாட்சி  நிர்வாகத்தை அளிக்கும் வேலுமணியும் அவருக்கு உற்ற துணையாக இருந்து ஊழல்களுக்குப் பின்பாட்டுப் பாடிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும்,  மாநகரம் எங்கும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்;  வேதனைப்பட வேண்டும். கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உடனடியாக மழை நீர் வடிவதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்குப்  போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்- ஏழை எளியோர்க்கு உணவு உள்ளிட்டவற்றிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், திமுக சென்னை மாநகர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,   சிரமப்படும் மக்களுக்கு ஆங்காங்கே தேவையான அளவு உதவிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மிலாது நபி திருநாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களுக்கு திமுக சார்பில் எனது இதயம் கனிந்த  நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகம் தன் தாயின் கருவறையிலிருந்த போதே தந்தையையும், தனது 6 வயதில் தாயாரையும் இழந்தவர். இளம் பருவத்திலேயே துயரமிகு சூழலில் அவர் வளர்ந்தாலும், பொய் இன்றி,  வாக்குறுதியில் வாய்மையுடன் இறுதிவரை தனித்துவமிக்க தியாக சீலராக வாழ்ந்தவர். ஏழைகளின் மீது தணியாத இரக்கம், ஆதரவற்ற அனாதைகளிடம் அன்பு மிக்க அரவணைப்பு என்பதில் முழுக்கவனம் செலுத்திய அவர், ‘கோபம்,  பொறாமை, புறம் பேசுதல்’ ஆகிய மூன்றையும் துறந்தவர். உயரிய நற்சிந்தனைகளை உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்காக அர்ப்பணித்தவர். ‘ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்’ என்ற கருணையுள்ளத்திற்கு சொந்தக்காரர்.

நபிகளாரின் அர்த்தமுள்ள போதனைகளும், அற்புதமான அறிவுரைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள். அவரது வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியச்  சமுதாயத்தின்பால் எப்போதும் திமுகவிற்கு இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மிலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக