திங்கள், 19 அக்டோபர், 2020

ம.பி.யில் மானபங்க வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீனா?- உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

hindutamil.in/ : மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைச் சேர்ந்த விக்ரம் பத்ரி கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை மானபங்கம் செய்துள்ளார். இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் விக்ரம் பத்ரி கைது செய்யப்பட்டார்.

அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, கடந்த ஜூலை 30-ம் தேதி விநோத உத்தரவைப் பிறப்பித்தார். அதில், "திருமணமான விக்ரம் பத்ரியும் அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு பாதிக்கப்பட்ட பெண், விக்ரம் பத்ரிக்கு ராக்கி கயிறு கட்ட வேண்டும். அந்தப் பெண்ணுக்கு அவர் ரூ.11,000 அன்பளிப்பாக வழங்க வேண்டும்" என கூறிய தனி நீதிபதி, விக்ரம் பத்ரிக்கு ஜாமீன் வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து 9 பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பெண் வழக்கறிஞர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் ஆஜரானார்.  

அவர் வாதிடும்போது, ராக்கி கயிறு கட்ட உத்தரவிட்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவது எந்த வகையில் நியாயம்? பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார். ஜாமீன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் இதுபோன்ற அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிக்கக்கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இந்த வழக்கின் முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தனது கருத்தை, ஆலோசனையை கூற அறிவுறுத்தியுள்ளனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக