திங்கள், 12 அக்டோபர், 2020

குஷ்புவுக்கு மூளைச் சலவை; சுந்தர் சி-யின் நிர்ப்பந்தமே காரணம்: கே.எஸ்.அழகிரி அதிரடி

tamil.indianexpress.com : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த குஷ்பு, இன்று மதியம் பாஜக தேசிய பொதுச்செயலாளர் C.T.ரவி  மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் குஷ்பு. டெல்லியில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஷ்புவுக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரொம்ப மகிழ்ச்சியுடன் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்துள்ளேன். 10 ஆண்டுகள் அரசியல் அனுபவத்திற்குப் பிறகு, எது நாட்டுக்கு நல்லது? எது மக்களுக்கு நல்லது?  என்பதை உணர்ந்து, இக்கட்சியில் இணைந்துள்ளேன். நமது மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி போன்று ஒரு தலைவர் இருந்தால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும். அதை நான் தற்போது முழுதும் உணர்ந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.  பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக கூறிய குஷ்பு, “இது ஒரு நிலையான மாற்றம். மக்களின் தேவையை  நான் இப்போது புரிந்துகொள்கிறேன். எதிர்க்கட்சியில் இருந்த போது பாஜக ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டியிருந்தேன். அது எனது வேலை. இருப்பினும், பல சந்தர்பங்களில் பாஜகவை ஆதரிக்கவும் செய்தேன்”  என்று தெரிவித்தார்.

பாஜக எனக்கு என்ன செய்யப் போகிறது என்பதை பற்றி சிந்திக்காமல், இக்கட்சி நாட்டு மக்களுக்கு என்ன  செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் என்னிடம் அதிகமாக உள்ளது. தேசத்தின் 128 கோடி மக்களும்  ஒரு தலைவனை நம்புகிறீர்கள். அவர்கள், சில விசயங்களை சரியான முறையில் செய்கின்றனர் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

   

இதற்கிடையே, குஷ்புவுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறது என்றும், கணவர் சுந்தர் சியின் நிர்ப்பந்தத்தால்தான் குஷ்பு பாஜகவில் இணைகிறார் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்துத் தெரிவித்தார்.

மேலும், குஷ்பு காங்கிரஸ் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த இழப்பும் இல்லை. குஷ்புவை பாஜகவினர் யாரும் அழைக்கவில்லை, அவரே தான் பாஜகவுக்கு செல்கிறார்.  குஷ்பு கட்சியில் இருந்த போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக குடும்பத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். வளர்ச்சி மற்றும் தேசத்தை முன்னெடுக்கும் அரசியல் மேலும் துரிதப்படுத்தும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக