திங்கள், 26 அக்டோபர், 2020

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடம்

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்!

 minnambalam : அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72), கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, தீவிர மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரல் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக அவர் சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. 

இதையடுத்து இன்று அமைச்சர்கள் சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்நிலையில் இன்று (அக்டோபர் 26) மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. 

மேலும், அவரது முக்கிய உடல் உறுப்புகள் சீராக இயங்க வைக்கும் பணி சவாலாக உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரது உடல் ஒத்துழைப்பு தருவதை பொறுத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும், தற்போது அவர் அதிகபட்ச உயிர்காக்கும் சிகிச்சையில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. -பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக