திங்கள், 19 அக்டோபர், 2020

தஞ்சையின் மனிதநேய மருத்துவர் மறைந்தார்!

 தஞ்சையின் மனிதநேய மருத்துவர் மறைந்தார்!

 minnambalam : தஞ்சையில் மூன்று தலைமுறைகளாக மருத்துவ சேவை ஆற்றிவரும் குடும்பம் அது. ராமநாதன் ஆஸ்பத்திரி என்றால் டெல்டா மாவட்டங்களில் அறியாதவர்கள் கிடையாது. வெறும் பேருந்து நிறுத்தம் அல்ல அது. 90 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் நோய்தீர்த்த புனித இடம்.   இன்றைக்கு மருத்துவ உலகம் என்கிறார்கள். ஆனால் உலகமே அறியாத பாமர மக்களுக்கு தான் கற்ற மருத்துவத்தை தொழில் பக்தியோடு தந்துகொண்டிருக்கும் அந்த குடும்பத்தின் தலைவரை, வறியவர்கள் வசதிபடைத்தவர்கள் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காத மாமனித மருத்துவரை நேற்று (அக்டோபர் 18) காலம் தன் கையில் வாங்கிக் கொண்டது. மரு. குமார் அவர்களை தஞ்சை மக்கள் இழந்துவிட்டார்கள்.

புன்னகை பூத்த முகம், நோயாளர்களை கனிவோடு அணுகுகிற இயல்பு, மாத்திரைகளால் மட்டுமல்ல நம்பிக்கை வார்த்தைகளாலும் குணப்படுத்துகிற யுக்தி, தரம்பிரிக்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கவனிப்பு என மருத்துவ துறையின் நேர்மையாளராக வாழ்ந்தவர் அவர்.

அவர் எவ்வளவு மனிதநேயம் மிக்கவராக தொழில்செய்தார் என்பதற்கு அவரது தெற்கு வீதி கிளினிக்கில் எந்த நேரமும் குவிந்துகிடந்த ஏழை எளிய மக்களின் கூட்டமே சாட்சி. பெரும்பாலும் கிராமத்திலிருந்து வந்தவர்கள், சாலையோர வியாபாரிகள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள் என வரிசைகட்டி நிற்பார்கள். இவர்களுக்கு இடையில் நகரத்தின் பிரமுகர்களும் நாற்காலிகளில் அமர்ந்திருப்பார்கள். இவ்வளவு கட்டணம் என்பதெல்லாம் கிடையாது. ரூ. 5,10,20, எது என்றாலும் அவர் பார்க்காமலேயே பாக்கெட்டுக்குள் போய்விடும். பலநேரங்களில் ஊசிபோட்டுக்கொண்டு மாத்திரை வாங்கிய பின்பும் தயங்கி தயங்கி நிற்போரை 'போய்ட்டு வா' எனும் குரல் சாதாரணமாக அனுப்பிவைக்கும்.

நாள்முழுவதும் உணவு, இயற்கை உபாதைகளுக்கான நேரங்களைத் தவிர மற்ற நேரமெல்லாம் அவர் பிறரின் நாடிகளை பார்த்துக்கொண்டேதான் இருந்தார். அதுதான் இறைவன் தனக்களித்த பணி என்றும் அவர் நம்பினார். தனது தந்தை மரு.ராமநாதன் போலவே மருத்துவத்தை சேவையாகக் கருதி செய்து வந்ததில் பூரண திருப்தி அவருக்கு. 'இந்த கொரோனா நேரத்தில் கிளினிக் போகவேண்டாம்' என அவரது மகன்கள் சொல்லியும் 'என்னால வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க முடியாது' என சொல்லிவிட்டு நோய்தீர்க்க புறப்பட்ட மருந்தீஸ்வரர் அவர்.

அவர் இறந்ததை அறிந்து வந்து, மரு.குமார் உடலை பார்த்து அழுத பலரும் 'அய்யோ சாமி போய்ட்டீங்களா' என்றுதான் கதறி அழுதார்கள். இறந்தவர்கள் சாமியிடம் போவதாகச் சொல்வார்கள். ஆனால் இங்கே ஒரு சாமியே இறந்து போய்விட்டது.

-தஞ்சைவாசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக