புதன், 21 அக்டோபர், 2020

புலிகளை தடைசெய்தது தவறு: இங்கிலாந்து நீதிமன்றம்

minnambalam :விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலை புலிகள் பெயரை நீக்குமாறு இங்கிலாந்து உள்துறை அமைச்சரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது. இதனை 2019 மார்ச் மாதம் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் பொருட்டு Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடு கடந்த அரசு வழக்கு தொடர்ந்தது. 

அதில், விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறானது என தமிழீழ அரசின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக ரீதியாக செயற்பாடுகளுக்கும் இது தடையாக இருக்கிறதென தெரிவிக்கப்பட்டது இந்த வழக்கில் இன்று (அக்டோபர் 21) 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை தவறானது எனத் தெரிவித்துள்ளது. எனினும், இங்கிலாந்து அரசின் முடிவைப் பொறுத்தே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை விலகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இந்த செய்தி மகிழ்ச்சியளிப்பதாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது. ஏனெனில், இங்கிலாந்து அரசின் முயற்சியில்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் தடை நீக்கப்பட்டால், மற்ற நாடுகளில் நீக்கப்படலாம். மற்ற நாடுகளில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தவாக தலைவர் தி.வேல்முருகன், “இங்கிலாந்து நீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, விரைவில் இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கும் என்ற நம்பிக்கையை இத்தீர்ப்பு அளிக்கிறது. உழைத்த அனைவருக்கும் நன்றியும்,வாழ்த்துகளும்” என்று கூறியுள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக