சனி, 10 அக்டோபர், 2020

குறைந்தபட்சம் இருப்பு ரூ.500 இல்லாத கணக்குகளில் அபராதம் ..பராமரிப்புக் கட்டணமாக ரூ.100 பிடித்தம் ,, வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

hindutamil.in : குறைந்தபட்சம் இருப்பு இல்லாத கணக்குகளில் அபராதம்: அஞ்சல்துறை அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிவங்கிகளைத் தொடர்ந்து அஞ்சலகங்களிலும் குறைந்தபட்சம் இருப்பு இல்லாத கணக்குகளில் அபராதம் விதிக்கப்படும் என அஞ்சல்துறை அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தேசிய வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தற்போது அஞ்சலக சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.500 வைத்திருக்க வேண்டுமென, அஞ்சல்துறை அறிவித்துள்ளது.>மேலும், குறைந்தபட்சத் தொகை இல்லாவிட்டால் வருடாந்திர பராமரிப்புக் கட்டணமாக ரூ.100 பிடித்தம் செய்யப்படும். தொடர்ந்து பணம் பிடித்தம் செய்யப்படும்போது கணக்கில் பணம் இல்லாவிட்டால், அந்தக் கணக்கு தானாகவே முடக்கப்படும். இதையடுத்து டிச.11-ம் தேதிக்குள் தங்களது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்சத் தொகை ரூ.500 வைத்துகொள்ள வேண்டுமென, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் கூறுகையில், ‘‘அஞ்சலங்களில் ஓய்வூதியம், மணியார்டர் பெறும் முதியோர்தான் அதிக அளவில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 முதல் ரூ.1,000 தான் கிடைக்கிறது. அதைத் தங்களது தேவைக்கு எடுத்துவிடுவர்.

அவர்களைப் போன்றோர் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருப்பது சிரமம். இதனால் இந்த உத்தரவை அஞ்சல் துறை திரும்பப் பெற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக