புதன், 7 அக்டோபர், 2020

சசிகலா சொத்துக்கள் முடக்கம்! ரூ.2,000 கோடி மதிப்பு

minnambalam :சசிகலா உள்ளிட்டோரின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கியுள்ளது.   சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சொத்துக்களை முடக்கும் பணிகளில் வருமான வரித் துறை ஈடுபட்டு வருகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது, பினாமி பெயரில் சேர்த்ததற்காக, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை ஏற்கனவே முடக்கியது.     கடந்த மாதம் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிகலாவின் 65 சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டன. 300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்துகளில் போயஸ் கார்டனில் சசிகலா கட்டி வரும் புதிய பங்களாவிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

 ரூ.2,000 கோடி மதிப்பு: சசிகலா சொத்துக்கள் முடக்கம்!

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகியவை இந்த சொத்துப் பட்டியலில் அடக்கம். இந்த இடங்களில் வருமான வரித் துறையின் பினாமி தடுப்புப் பிரிவினர் முடக்கத்திற்கான நோட்டீஸை இன்று (அக்டோபர் 7) ஒட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த நோட்டீஸ் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள மூன்று பேருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸின் நகல்கள் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபக், தீபாவுக்கும் சென்றிருக்கிறது. .இதுதொடர்பாக வருமான வரித் துறை, “ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான சிறுதாவூர், கொடநாடு பகுதிகளிலுள்ள ரூ.2,000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக