ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

பாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெளியே சமரசம் ..? Flashback

 க.ம.மணிவண்ணன்  : பாரதி(யார்? பாரதியின் கவிதைகளைப் படித்துவிட்டு அவரை வானளாவப் புகழும் நம்மில் பல பேர் அவர் சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளில் எழுதியவைகளையும் அவரது கட்டுரைகளையும் முழுமையாக வாசிப்பதில்லை, அவ்வாறு வாசித்திருந்தால் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி களுக்கு அவர்தான் முன்னோடி என்பதும் அவர் மகாகவி அல்ல மகா"காவி" என்பதும் தெளிவாக விளங்கும்.

1) சுதேசமித்திரன் ஏட்டில் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசமாயினதே” என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
2) 1907 இல், சுதேசமித்திரனில் “வந்தே மாதரம்” பாடலில் “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்” என்றெழுதி இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்றழைத்தவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக “ஆன்ற மொழிகளினுள்ளே – உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்று ஆரியத்தை உயர்த்தி எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
4) சமஸ்கிருதம் ஒன்றே தெய்வபாஷை மற்றவைகள் எல்லாம் மனிதர்கள் பேசும் சாதாரண பாஷை என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981)

5) ‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்றவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
 (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், ப.264, வானதி பதிப்பகம், சென்னை, 1981)
6) சுதேசமித்திரன் (11.1.1920) இதழில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள பாரதி சமஸ்கிருதம்தான் இந்தியாவுக்கு பொது மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?  
 7) 1914 ஆம் ஆண்டில், அச்சமில்லை அச்சமில்லை என்று வீரமாக பாடல் இயற்றிய பாரதிதான் ஆங்கிலேய ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியின் கடிதங்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.51,53,55)
8) 28.11.1918ல் கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பின்பு விடுதலையானார் என்பதும் அதன்பிறகு அரசியலை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு சமயம் சார்பாக மட்டுமே பேசியும் எழுதியும் வந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியின் கடிதங்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.57)
9) “நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே – செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி” என்று ‘சமூகம்’ என்ற தலைப்பில் நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடியதும் “நாலு குலங்கள் அமைத்தான் – அதை நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்” என்று ‘கண்ணன் என் தந்தை’ என்ற பாடலில் நால்வருணத்தைக் கெடுத்து விட்டார்களே எனக் கூறி வருந்தியதும் பாரதிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
10) டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதற்கு எதிராக இந்துமத வெறியையும் ஜாதி வெறியையும் தூண்டியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394)
11) தனது நண்பரான நாராயணன்(பிள்ளை) அவருடைய மகனுக்கு தன்னுடைய மகளை மணம் முடித்து வைக்க கேட்டபோது, முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம் என்று ஜாதி வெறியோடு பேசியவர்தான் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதாகப் போற்றப்படும் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?(ஆதாரம்: சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.164)
12) பாரதி ‘ஞானரதம்’ என்ற கதையில் நால்வருணத்தை வலியுறுத்தியுள்ளார் என்பதும் இந்த உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர ஒரே வழி என்னவென்றால் மீண்டும் நால்வருணம் தோன்ற வேண்டும் என்பதே என்றும் கூறியது பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
13) ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை போன்று கணவனுக்காகவே வாழும் கற்புடையவர்களாக பெண்கள் இருக்கவேண்டும் என்றும் உடன்கட்டை ஏறியவர்கள் உத்தமிகள் என்றும் எதிர்காலத்தில் கணவனுடன் உடன்கட்டை ஏறும் பெண்கள் மஹா ஸ்திரிகளாவார்கள் என்றும் பெண்கள் விவாகரத்து செய்யக் கூடாது என்றும் எழுதியவர் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததாக புகழப்படும் பாரதிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
(ஆதாரம்: பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.379, பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.350,351)
14) தான் சார்ந்த இந்துமதத்தை மட்டுமே உயர்த்தியும் அதனை அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்று எழுதி வந்த பாரதி புத்த,முகமதிய,கிருஸ்துவ மதங்களை கடுமையாகச் சாடி விமர்சனம் செய்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியின் பகவத் கீதை (உரைவிளக்கம்), பாரதியார் கட்டுரைகள்)
15) இந்துக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும் என்றும் மதமாற்றத்தை தடுக்கவேண்டும் என்றும் இந்து தர்மத்தை அழியாமல் காக்கவேண்டும் பரப்பவேண்டும் என்றும் இந்தியாவிற்கு பாரததேசம் என்று பெயர் வைக்கவேண்டும் என்றும் பசுவை தெய்வமாக வணங்க வேண்டும் என்றும் இசுலாமியர்களும் கிருஸ்துவர்களும் தேசபக்தி அற்றவர்கள் என்றும் எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?( ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், பாரதியார் புதையல் பெருந்திரட்டு)
க.ம.மணிவண்ணன்
11/12/2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக