வியாழன், 17 செப்டம்பர், 2020

மத்திய உணவு அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜிநாமா

ஹர்சிம்ரத் பாதல்BBC :இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியில் இருந்து வியாழக்கிழமை மாலை விலகியிருக்கிறார். இது தொடர்பான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்துள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஹர்சிம்ரத் பாதல் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் கட்சி உள்ளது. 

இந்த நிலையில், விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டத்தை நிறைவேற்ற ஆளும் பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக ஷிரோமணி அகாலி தளம் குற்றம்சாட்டியது. இத்தகைய ஒரு மசோதா தங்களின் கட்சிக்கொள்கைக்கு எதிரானது என்று அக்கட்சியன் சார்பில் மக்களவையில் இன்று பேசிய சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

முன்னதாக, மக்களவையில் பண்ணை மசோதா, விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக மசோதா ஆகியவை மீதான விவாதம் இன்று மாலை தொடங்கியது.

அதன் மீது பேசிய சுக்பீர் சிங் பாதல், கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாபில் விவசாயத்துறை வளர்ச்சிக்காக வழங்கிய உழைப்பை இந்த இரு மசோதாக்கள் மூலம் மத்திய அரசு களங்கப்படுத்தி விட்டது என்று தெரிவித்தார்.

இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது அதற்கு எதிராக வாக்களிப்போம் என்று சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சுக்பீர் சிங் பாதல் பேசும் ஒலிபெருக்கியை அணைக்கும்படி அவையை வழிநடத்திய சபாநாயகர் உத்தரவிட்டதால் அவர் பேசுவது மற்றவர்களுக்கு கேட்கவில்லை.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். இந்த தகவலை அக்கட்சியின் மற்ற தலைவர்களும் உறுதிப்படுத்தினார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக