ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: அண்ணாமலை ஐபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: அண்ணாமலை ஐபிஎஸ்

minnambalam :தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் மூன்று மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் மாணவர் சங்கங்களும், விடுதலைச் சிறுத்தைகள், மமக போன்ற அரசியல் கட்சிகளும் தமிழகம் முழுதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டுள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வு இன்று (செப்டம்பர் 13) காலை தொடங்கி நடந்து வருகிறது.  இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, நீட் தேர்வை பாஜக ஆதரிக்கிறது என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் சொல்வது தவறு என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,   “தற்கொலை செய்துகொண்ட குழந்தைகளுக்கு என் இரங்கல். என் கட்சியின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் இந்த டாபிக் பற்றி நாம் மிக விரிவாகப் பேச வேண்டும். நீட் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் நடக்கும் தேர்வு. தமிழகத்தில் மட்டும்தான் எதிர்ப்பு இருக்கிறது. நீட் தேர்வை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம். தமிழகத்தில் இருந்து நிறைய தமிழ் பிள்ளைகள் பாஸ் ஆகிக் கொண்டிருக்கிறார்கள், குழந்தைகள் உறுதியாக இருக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவியது. இந்த நிலையில் நீட் பற்றி அவர்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது” என்று கூறிய அண்ணாமலையிடம்,

“இந்த தற்கொலைகளுக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள்...திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் சொல்கிறாரே?” என்று கேட்டபோது,

“இதற்கு இந்த மத்திய அரசு எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? 2013 ஆம் ஆண்டு நீட் பற்றி முதன் முதலில் விவாதம் நடந்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு எது என்பது எல்லாருக்கும் தெரியும். பாஜகதான் பொறுப்பு என்பது ஏற்கத் தக்கதல்ல. தமிழகத்தில் அதிக மாணவர்கள் நீட் தேர்வில் பாஸ் செய்கிறார்கள். இந்த நிலையில் ஸ்டாலின் சார் சொன்ன கருத்து சட்டப்படி தவறு. நீட் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கிறது. ஸ்டாலின் சொல்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம்” என்று கூறினார் அண்ணாமலை.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக