செவ்வாய், 15 செப்டம்பர், 2020

இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் வெடித்த போராட்டம் .. "கன்னடா சாக்கு.. இந்தி திவாஸ் யாக்கே?"

Veerakumar - /tamil.oneindia.com :  பெங்களூர்: 'ஹிந்தி திவாஸ்' என்ற பெயரில் இந்தி தினம் கொண்டாடப்படுவதற்கு கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. சமீபகாலமாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி முன்னெடுப்பின் பேரில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி சட்டைகளை அணிந்து பல திரைப்பட பிரபலங்கள் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.  இதையடுத்து தமிழகம் முழுக்கவே இளைஞர்கள் மத்தியில் இது போன்ற டி ஷர்ட்டுக்குள் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துக் காணப்படுகிறது.      இது ஒரு பக்கம் என்றால், கர்நாடகாவிலும் இந்தித் திணிப்புக்கு எதிராக சமீபகாலமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தி திவாஸ் என்ற பெயரில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதை எதிர்த்து கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பினர் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடத்தினர். 

மைசூர் கலெக்டர் அலுவலகம் எதிரே கன்னட அமைப்பினர் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியை தேசிய மொழியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினர். மூன்றாவது மொழியாக இந்தியை திணிப்பது சுயநலத்துடன் கூடிய அரசியல் அடிப்படையிலானது என்று அவர்கள் கோஷமிட்டனர். 

இந்தி மொழிக்கு இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட வேண்டும்.. கர்நாடகாவில் அனைத்து மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளும் கன்னட மொழியில் நடத்தப்படவேண்டும்.. இந்தி தினம், கர்நாடகாவில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.. என்று அவர்கள் கோஷமிட்டனர் .வட இந்தியாவின் உத்தரவை கர்நாடகா எதற்கு கேட்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதே போன்று பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்துக்கு எதிரே கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் அந்த அமைப்புகளை சேர்ந்த பெண்களும் திரளாக பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் மெட்ரோ ரயில் நிலைய வழிகாட்டியில் எழுதப்பட்டிருந்த இந்தி வாசகங்கள் மீதும், ரயில்நிலைய வழிகாட்டி மீது எழுதப்பட்ட இந்தி வாசகங்கள் மீதும் அவர்கள் கருப்பு மை பூசி அழித்தனர். 

கர்நாடக, முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம், தலைவருமான எச்.டி. குமாரசாமி, இந்தி அல்லாத மொழி பேசும் சமூகங்கள் மீது இந்தி திணிப்பதை கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். கன்னடத்தில் 10 ட்வீட்டுகளை வரிசையாக அவர் வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார். இந்தி ஒருபோதும் ஒரு தேசிய மொழி அல்ல, அது ஒருபோதும் தேசிய மொழியாக மாறாது. நமது அரசியலமைப்பு அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்தை வழங்கியுள்ளது. எனவே, டெல்லியில் அமர்ந்திருக்கும் மக்கள் வேறுவிதமாக சிந்திக்கக் கூடாது. 

இந்தி திவாஸைக் கொண்டாடுவது, இந்தியை தேசிய மொழியாக திணிப்பதற்கான மென்மையான வழியாகும். இதை நான் எதிர்க்கிறேன் என்றார் குமாரசாமி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக