வெள்ளி, 11 செப்டம்பர், 2020

பென்னிக்ஸ் கடை வாசலில் கண்ணீர் விடும் நாய்... ஆறுவருட வளர்ப்பு பாசம்... காணொளி

nakkeeran :தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த பென்னிக்ஸின் வளர்ப்பு நாய் டாமி, அவரைத் தேடி அவரின் கடைக்கு வந்து, கடை வாசலிலேயே காத்திருப்பது பார்க்கும் அனைவரின் மனதையும் உருக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை நடத்தி வந்த மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் இருவரையும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று இரவு முழுக்க கடுமையாக தாக்கியதில் அடுத்தடுத்த நாட்களில் மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்களைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர். தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் மீது போடப்பட்ட FIR பொய்யாக ஜோடிக்கப்பட்டது என நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

 இந்தநிலையில் மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த பென்னிக்ஸின் கடை திறக்கப்பட்டதும், பென்னிக்ஸ் வீட்டில் ஆறு வருடமாக பாசமாக வளர்த்த அவரது நாய் டாமி மொபைல் கடை உள்ளே சென்று அவரை தேடி கடையின் உள்புறம் முழுக்க சுற்றிவிட்டு பின் மீண்டும் வாசலில் வந்து சோகத்துடன் படுத்துக் கொள்கிறது. கடையைவிட்டு நகராமல் பென்னிக்சுக்காக காத்திருக்கிறது. முன்பு பென்னிக்ஸ் கடைக்குச் செல்லும்போதெல்லாம் டாமியும் அவருடன் கடைக்குச் செல்லும் என அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக