திங்கள், 28 செப்டம்பர், 2020

அதிமுக செயற்குழு: எடப்பாடி-பன்னீர் இடையே என்ன நடக்கிறது?

 செயற்குழு: எடப்பாடி-பன்னீர் இடையே  என்ன நடக்கிறது?

minnambalam : அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நாளை (செப்டம்பர் 28) ஆம் தேதி நடக்கும் நிலையில் அதிமுகவில் என்ன நடக்கும் என்று அக்கட்சிக்குள்ளும், அக்கட்சிக்கு வெளியேயும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.   கடந்த 18 ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த விவாதங்களை அடிப்படையாக வைத்து செயற்குழு புயற்குழுவாகும் என்றும் அப்படி எல்லாம் நடக்காது என்று சிலரும் அதிமுகவுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இரு தரப்பிலும் என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரணை செய்தோம்.    வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தானே வர வேண்டும் என்று விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் அடிப்படையிலேயே அவர் தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார். எடப்பாடிக்காக அமைச்சர்கள் சிலர் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அண்மையில் நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் எடப்பாடி ஆதரவு நிலையில் இருக்க பழைய மாசெக்களை எடப்பாடி தரப்பினர் தொடர்புகொண்டு வருகிறார்கள். சில நிர்வாகிகள் தன் மேல் அதிருப்தியில் உள்ளதாக அறிந்த எடப்பாடி, அவர்களின் பட்டியலை வாங்கி வைத்து தானே அவர்களுக்கு போன் போட்டுப் பேசியிருக்கிறார்.

இதேநேரம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் பல மாசெக்களையும் தொடர்புகொண்டு பேசி வருகிறார்.

இப்படி இரு தரப்பிலும் தத்தமது ஆதரவு வட்டத்தைப் பெருக்கிக் கொள்வதிலும், உறுதிப்படுத்திக் கொள்வதிலும் தீவிரமாக இருக்க துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் இதையெல்லாம் கவனித்து வந்திருக்கிறார்கள். இந்த ஆதரவு திரட்டும் அணுகுமுறையில் எடப்பாடி தரப்பு சற்று வலுவாக இருப்பதை உணர்ந்த கேபி.முனுசாமியும், வைத்திலிங்கமும் ஓ.பன்னீரை சந்தித்திருக்கிறார்கள்.“அதிகாரம் அவர்கிட்ட இருக்கு. போலீஸ் பவரும் அவர்கிட்டதான் இருக்கு. பணமும் அதிகம் செலவு பண்ணவும் அவர் தரப்புல கெப்பாசிட்டி இருக்கு. இந்த நிலையில் அவர் கிட்ட ஸ்ட்ரெங்த் அதிகமா இருக்குற மாதிரி தெரியுது. இதையெல்லாம் விட எடப்பாடி எதுக்கும் தயாரா இருக்கிறார். தேவைப்பட்டா பொதுக்குழு நடக்கும்போது பெட்டி வச்சு வாக்களிக்கவும் ஏற்பாடு பண்ணி யாருக்கு பெரும்பான்மை இருக்குனு பாத்துடலாம்குற அளவுக்கு எடப்பாடி தரப்புல பேசிக்கிட்டிருக்காங்க. பெட்டி வச்சா நமக்கு கொஞ்சம் வீக் ஆகத்தான் இருக்கும்.

நிலைமை இப்படி இருக்கும்போது எடப்பாடிய முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறதுக்கு சம்மதம் சொல்றது பெட்டர்னு தோணுது’ என்று கே.பி.முனுசாமி ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறியிருக்கிறார். மேலும், சசிகலா வெளிய வர்ற இந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் எதிரும்புதிருமா நிக்கிறது கட்சிக்கும் நல்லதில்லை’என்றும் ஓ.பன்னீரிடம் கூறியிருக்கிறார் கே.பி. முனுசாமி.

அதற்கு ஓ.பன்னீர், ‘சரி...ஆனால் முதல்வர் வேட்பாளர், பொதுச் செயலாளர் யாருன்னு உடனே இப்ப எதுக்கு அறிவிக்கணும்? தேர்தலுக்கு இன்னும் ஆறு மாசத்துக்கு மேல இருக்கு. ஜனவரியில பொதுக்குழுவை கூட்டி அதுல இதையெல்லாம் அறிவிக்கிற மாதிரி வச்சுக்கலாமே?’என்று கூறியிருக்கிறார்.

ஓ.பன்னீரின் இந்த பதிலை கே.பி.முனுசாமி முதல்வர் எடப்பாடியிடமும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதுபற்றி எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் சொல்லவில்லை.

இதற்கிடையே பாஜக தரப்பில் இருந்தும் அதிமுகவில் எடப்பாடியையும், ஓ.பன்னீரையும் சிலர் தொடர்புகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எடப்பாடியிடம் பேசிய தமிழக விவகாரங்களை கவனிக்கும் பியூஸ் கோயல், ‘போன 18 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்துல உங்க ரெண்டு பேருக்குமான பிரச்சினை டெல்லி மீடியா வரைக்கும் செய்தி ஆகியிருக்கு. இந்த நேரத்தில பிரச்சினை எதுவும் உண்டாக்குற மாதிரி நடந்துக்க வேணாம்.”என்று சொல்லியிருக்கிறார்.

இந்த சூழலில்தான் அதிமுக செயற்குழு செப்டம்பர் 28 ஆம் தேதி கூடுகிறது.

-வணங்காமுடிவேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக