வெள்ளி, 11 செப்டம்பர், 2020

கணக்குக் கேட்ட சீமான்- கல்யாண சுந்தரம் விலகல்?

 டிஜிட்டல் திண்ணை: கணக்குக் கேட்ட சீமான்- கல்யாண சுந்தரம் விலகல்?

minnampalam : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது."பொதுவாகவே ஒவ்வொரு கட்சிக்குள்ளும் எழக்கூடிய உட்கட்சி பிரச்சனைகள் நாம் தமிழர் கட்சிக்குள் இப்போது சற்று கூடுதலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக  இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர்.

கல்யாண சுந்தரமும் சீமானும் பொதுவெளியில் நடத்திவரும் கருத்துப் பரிமாற்றங்கள் அக்கட்சி பற்றிய ஊடகச் செய்திகளை அதிகமாக்கி வருகின்றன. தன்னோடு நீண்டகாலமாகவே சீமான் பேசுவதை நிறுத்தி விட்டார் என்றும் எதற்காகத் தன்னை சீமான் விலக்கி வைக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்றும் கல்யாணசுந்தரம் பேட்டியளித்திருந்தார்.இதற்கு பதில் தரும் விதமாக பேட்டி ஒன்றில் பேசிய சீமான், ‘ நாம் தமிழர் கட்சியில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து தனக்கு எதிராக கல்யாணசுந்தரம் அணிதிரட்டி வருவதாகவும் கட்சிக்கான வேலை பார்க்காமல் கட்சிக்குள் தனக்கென வேலை பார்த்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

தன்னை இழிவுபடுத்திக் கொச்சைப் படுத்தி பலரை பதிவுகள் இட கல்யாணசுந்தரம் தூண்டியதாகவும் சீமான் எச்சரித்திருந்தார். இந்த நிலையில்தான் நேற்று நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகும் அறிவிப்பை கல்யாண சுந்தரம் வெளியிட்டார்.   நாம் தமிழர் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று விசாரித்தபோது பல கட்சிகளுக்குள் பிளவுகளை உண்டாக்கிய கணக்கு வழக்கு விவகாரம் தான் இங்கும் என்கிறார்கள்.  ‘கல்யாணசுந்தரம் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். அங்குள்ள இளைஞர் பெருமன்றத்தில் பணியாற்றி வந்தவர். புலிகளைப் பற்றிய அவரது கொள்கையும் சிந்தனையும் அப்போது சீமானின் சிந்தனைக்கு முற்றிலும் விரோதமானதாக இருந்தது.  அவரை ராஜீவ் காந்திதான்  சீமானிடம் அழைத்து வந்தார். கல்யாண சுந்தரத்துக்கு இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்த சீமான் அவரை சுமார் 13 வெளி நாடுகளுக்கு நாம் தமிழர் சார்பாக பேச அனுப்பி உள்ளார்.  அதுவுமில்லாமல் கல்யாண சுந்தரத்தின் மனைவி கல்விக்காக ஜெர்மனி சென்றபோது இவரும் அங்கே சென்று தங்கியிருந்தார். அப்போது கட்சிப் பணிகளில் இருந்து சற்று விலகி இருப்பதற்கும் சீமான் சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கல்யாணசுந்தரம் பற்றி சீமானுக்கு தமிழகத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் பல தகவல்களை அனுப்பி இருக்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்குச் சென்று தனது பேச்சாற்றலால் நாம் தமிழர் கட்சியை வளர்க்க வேண்டிய கல்யாணசுந்தரம் அதற்கு பதிலாக தன்னை மட்டுமே வளர்த்துக் கொண்டுள்ளார் என்றும் இதுகுறித்த விவரங்களை அவரது சமீபத்திய வருமானத்தை, அவரது சொத்துக் கணக்குகளை ஆய்வு செய்தாலே தெரியும் என்றும் அவர்கள் சீமானுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.  மரக்காணம் அருகே கல்யாணசுந்தரம் சில சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதாகவும் அது குறித்த தகவல்களையும் சீமானுக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்தே சிலர் தெரிவித்திருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து கோபமான சீமான். தனக்கும் கல்யாண சுந்தரத்துக்கும் நெருக்கமான சிலர் மூலம் இதுகுறித்து கல்யாண சுந்தரத்திடம் விசாரித்திருக்கிறார். ஆனால் அதற்கு சரியான பதில் இல்லை. இதையடுத்தே அவரோடு பேசுவதை முற்றிலும் தவிர்த்து, அவரை ஒதுக்கி வைக்கத் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். 

இதுபற்றி வெளியே வெளியேறியவர்கள் தரப்பில் விசாரித்தபோது"சீமான் மீதும் இதே போன்ற பொருளாதார புகார்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் ஏற்கனவே வைத்திருக்கிறார்கள். புலிகள் பெயரைச் சொல்லி சீமான் பல நாடுகளிடம் இருந்து வசூல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். ஆனால் சீமானிடம் இதைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் ஒரு எகத்தாள சிரிப்போடு கேலியாகப் பதிலளித்து கடந்து விடுவார். இப்போது கல்யாணசுந்தரம் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை தலைமை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் உள்ளுக்குள் சொல்லி வருகிறது", என்கிறார்கள்.

கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து தான் போட்டி என்ற முடிவோடு செயல்பட்டுவரும் நாம் தமிழர் கட்சி இப்போது தனக்குள்ளேயே சில சர்ச்சைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது இதையெல்லாம் தாண்டி சட்டமன்றத் தேர்தலுக்கு அக்கட்சித் தயாராக வேண்டும் அதற்கு சீமான் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்”என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக