புதன், 23 செப்டம்பர், 2020

எதிர்க்கட்சிகள் இல்லை: நிறைவேற்றப்பட்ட ஏழு முக்கிய மசோதாக்கள்!

மின்னம்பலம்  :எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் மாநிலங்களவையில் நேற்று கல்வி, பொருட்கள், சுகாதாரம், வங்கி, நிறுவனம், தடயவியல் மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான ஏழு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

வேளாண் மசோதா மீதான குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் நீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அவையைப் புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் ஏழு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.   

ஐஐடி மசோதா   ஐஐடி மசோதாவை நேற்று முன்தினம் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா புதிதாக நிறுவப்பட்ட ஐந்து இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அறிவிக்கிறது. பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐந்து ஐஐடிக்கள் சூரத், போபால், பாகல்பூர், அகர்த்தலா மற்றும் ரைச்சூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

தொற்றுநோய் திருத்த மசோதா

இந்த மசோதா சுகாதார ஊழியர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. "இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அரசாங்கம் பல்வேறு சட்ட வல்லுநர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்றது. இந்தச் சட்டத்தின் கீழ் கொரோனா முன்கள வீரர்களை அவமதிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டனை கூட பெறலாம்” என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் மக்களவையில் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா

இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டது. தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை அத்தியாவசிய பொருட்களாக அகற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தனியார் முதலீட்டாளர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளில் அதிகப்படியான ஒழுங்குமுறை தலையீட்டால் ஏற்படும் அச்சங்களை நீக்க முயல்கிறது. இந்தத் திருத்தம் விவசாயத் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் என்றும், அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைத்து அதிக சேமிப்புத் திறனை உருவாக்கும் என்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் டான்வே ரோசாஹேப் தாதராவ் தெரிவித்தார்.

இதுபோலவே, கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவதற்காக வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. வைப்புத் தொகையாளர்களின் நலனை முழுமையாகப் பாதுகாப்பதற்காக இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டியால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குஜராத்தின் தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம், டெல்லியிலுள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை குஜராத்தில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் என்று ஒரே பெயரில் நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாநிலங்கள் முழுவதும் அதிகரித்து வரும் குற்றங்களின் மத்தியில் தடய அறிவியல் துறையில் ஆய்வுகளையும் ஊக்குவிக்கிறது.

இதுபோலவே கம்பெனி திருத்த மசோதா, ராஷ்டிரிய ரக்‌ஷா மசோதா ஆகியவையும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஏழு மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 111ஆவது பிரிவின்படி, குறிப்பிட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்படுகிறதா அல்லது நிறுத்திவைக்கப்படுகிறதா என்பதை அறிவிப்பார்.

எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக