வெள்ளி, 25 செப்டம்பர், 2020

சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பு: கலங்கும் உறவினர்கள்!

 சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பு: கலங்கும் உறவினர்கள்!

minnambalam :சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை எப்போது என்ற கேள்வி ஒரு பக்கம் அரசியல் வட்டாரத்தில் எழுந்து கொண்டிருக்க..‌‌‌. இன்னொரு பக்கம் சசிகலாவின் உடல்நிலை பற்றிய கவலையும் அவரது உறவினர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நான்கு ஆண்டுகளாக சிறையிலிருந்து வரும் சசிகலாவுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உண்டு. அதற்காகவும் முதுகு வலிக்காகவும் பல மாத்திரைகளை அவர் உண்டு வருகிறார்.  கடந்த வாரம் டெல்லி சென்ற தினகரன் சசிகலாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை முன்கூட்டியே விடுவிக்க உதவுமாறு மத்திய அரசுத் தரப்பிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். இதுபற்றி மின்னம்பலத்தில் நட்டா வீட்டில் அமித்ஷா தினகரன் பேசியது என்ன?என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  இந்த நிலையில் சசிகலாவின் சகோதரரான மன்னார்குடி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஓரிரு நாட்களுக்கு முன் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்திருக்கிறார்.

அப்போது சசிகலாவின் நிலையைப் பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டார். வெளியே இருந்த வரைக்கும் சசிகலா சர்க்கரை வியாதிக்கு போதுமான மாத்திரைகள், ஊசிகள், அவ்வப்போது மருத்துவரின் ஆலோசனைப்படியான உணவு முறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தார். ஆனால் சிறைக்குள் வெளியே இருப்பது போன்ற இந்த முறைகளை அவரால் பின்பற்ற முடியவில்லை. இத்தகைய காரணங்களால் சசிகலாவுக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லும் அவரது உறவினர்கள் இதனால் பதட்டப்பட ஆரம்பித்துள்ளார்கள்.

சசிகலாவை விரைவிலேயே வெளியே கொண்டு வந்து விட்டால் தரமான மருத்துவ சிகிச்சைகள் மூலம் அவரது சிறுநீரகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, டயாலிசிஸ் வரைக்கும் செல்வதிலிருந்து தவிர்த்துவிட முடியும் என்றும் இன்னும் சில மாதம் அவர் சிறையில் இருந்தால் சிறுநீரக பாதிப்பு அதிகமாகும் என்ற கவலையும் அவரது குடும்பத்தினரிடம் ஏற்பட்டிருக்கிறது.

தன் அத்தையை சிறையில் பார்த்தபோது கண்கலங்கிய ஜெய் ஆனந்த், “அத்த நீங்க பத்திரமா வெளியே வந்தாலே போதும். தஞ்சாவூர்ல இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டுல நீங்க இனி நல்லா ஓய்வு எடுக்கணும். உங்களை எல்லாரும் ரொம்ப புண் படுத்திட்டாங்க இனிமேல் வர்ற காலமாவது நீங்க நிம்மதியா இருக்கணும்" என்று சொல்ல... சசிகலாவும் கண்கலங்கி விட்டார். ஒரு வேளை முன்கூட்டியே விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டால், சசிகலாவை பெங்களூருவில் நல்ல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கவும் அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்கள்.

சசிகலா விடுதலையாகி வந்தால் அதிமுகவில் தாக்கம் ஏற்படுத்துவாரா, அமமுக - அதிமுக இணையுமா, அதிமுகவை வழிநடத்துவாரா என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டு கொண்டிருக்க... எதார்த்தத்தில் சசிகலா வெளியே வந்து ஆரோக்கியமான வாழ்வு வாழவேண்டுமென்ற கவலையே அவரது உறவினர்களிடமும் குடும்பத்தினரிடமும் மேலோங்கியிருக்கிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக