புதன், 2 செப்டம்பர், 2020

யார் யாருக்கு பொறுப்பு? ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை!

minnamblam :மீண்டும் பரபரப்புக்கு வந்திருக்கிறது திமுகவின் பொதுக்குழு. திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகனின் மறைவுக்குப் பின் கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் மாதக் கடைசியில் பொதுக் குழு கூட்டப்பட்டது.டிஜிட்டல் திண்ணை:  யார் யாருக்கு பொறுப்பு? ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை!

அந்த பொதுக்குழுவிலே திமுகவின் பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகவே அவர் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு மார்ச் 22 ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டதால் பொதுக்குழுவை அப்போது கூட்ட இயலாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே துரைமுருகன் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த சில தகவல்களால் ஸ்டாலின் வருத்தம் அடைந்தார். துரைமுருகன் முதல்வர் எடப்பாடியை தனியாக சந்தித்துப் பேசியதாகவும், திமுக வரும் தேர்தலில் ஜெயிக்குமான்னே தெரியலை என்று சொன்னதாகவும் ஸ்டாலினுக்கு சென்ற தகவல்களால் அவர் வருத்தம் அடைந்தார். அதனால் துரைமுருகனை பொதுச் செயலாளராக உயர்த்துவதா அல்லது பொருளாளராகவே நீடிக்க விடுவதா என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. இதன் விளைவாகத்தான் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “துரைமுருகன் திமுகவின் பொருளாளர் பதவியிலேயே தொடர்வார்” என்று குறிப்பிட்டார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இதுபற்றிப் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதினார் திமுக தலைவர்.

ஸ்டாலினுக்கு தன் மீது இருக்கும் வருத்தங்களை அறிந்துகொண்ட துரைமுருகன் இடையில் ஸ்டாலினை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார். திமுகவில் தான் கலைஞருடன் இருந்த நிலைமை, இப்போதைய நிலைமை உள்ளிட்ட பல விஷயங்களை உருக்கமாக தனது பாணியில் விளக்கியிருக்கிறார் துரைமுருகன். இதையடுத்து ஸ்டாலின் சமாதானம் அடைந்திருக்கிறார். மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பெரும்பான்மை வன்னியர் சமுதாயத்தை திருப்திப்படுத்தவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதியிருக்கிறார் ஸ்டாலின். அதன்படி கட்சியின் சீனியாரிட்டி என்ற வகையில் துரைமுருகன் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு உரியவராக இருக்கிறார். திமுகவில் மிக நீண்ட கால அனுபவம் பெற்றவர், சிறந்த பேச்சாளர், அமைச்சராக இருக்கும்போது சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர் துரைமுருகன்.

அடுத்து பொருளாளர் பதவிக்கு யார் என்று பார்க்கையில் ஆ.ராசா, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பெயர்கள் பேசப்பட்டன. இப்போது அதிகார பூர்வ பொருளாளராக இல்லாவிட்டாலும் ஸ்டாலினின் ஒரு பகுதி நிதிநிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருக்கும் எ. வ.வேலு பொருளாளர் ஆகலாம் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால், ஏற்கனவே முதன்மைச் செயலாளராக கே.என். நேரு இருக்கிறார். அவர் மைனாரிட்டி ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். மீண்டும் தலைமைக் கழக நிர்வாகி பதவிக்கு இன்னொரு மைனாரிட்டி சமூகமான நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த வேலுவை தேர்ந்தெடுத்தால் அது கட்சி அமைப்புக்குள் விவாதமாகிவிடும் என்று கருதுகிறார் ஸ்டாலின். இதை எ.வ. வேலுவும் உணர்ந்துகொண்டு தன்னை பொருளாளர் ஆக்குமாறு வற்புறுத்தவில்லை. இதற்கிடையில் ஏற்கனவே முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அதிருப்தியில் இருந்த டி.ஆர்.பாலுவை பொருளாளர் ஆக்கலாம் என்ற நிலை இருக்கிறது.

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கும் பொன்முடியை தலைமைக்கு துணைப் பொதுச் செயலாளராக அனுப்பிவிட்டு. அங்கே ஒரு வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை மாவட்டப் பொறுப்பாளராக நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, ‘திமுகவில் ஒரு வன்னியரை மாவட்டச் செயலாளராகக் கூட திமுக ஆக்க விரும்பலை’ என்று பிரச்சாரத்தில் சொல்லியிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக நியமிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்தப் பொறுப்பும் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் தனது வலதுகரமான விக்கிரவாண்டி வேட்பாளர் புகழேந்தியை மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கலாம் என்று தெரிகிறது. திமுகவில் இந்த மாற்றங்கள்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக