புதன், 30 செப்டம்பர், 2020

மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை.. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,!

tamilmirror.lk : அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, “ஒவ்வொரு கட்சிக்கும் அதிலிருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், தனித்தனிக் கொள்கைகள் இருக்கலாம்; அவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். 20ஐ ஆராய்வதற்காக நான் அமைத்த குழு, அறிக்கையைக் கையளித்துள்ளது. அது, எனக்குக் கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும்” என்றார்.

“13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அவ்வாறே வலியுறுத்தப்பட்டதாக இந்தியச் செய்திகளும் தெரிவிக்கின்றன. இதில் எவை உண்மையென எழுப்பிய கேள்விக்கு, “மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை” என, பிரதமர் பதிலளித்தார்.

“வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலை, நாங்கள்தான் நடத்தினோம். நேரம் வரும்போது, சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவோம்” எனவும் பிரதமர் மஹிந்த கூறியபோது, “அரசமைப்பு அமல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்” என்று, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறுக்கிட்டு பதிலளித்தார்.

ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆகியோர் சகிதம், அலரி மாளிகையில் நேற்று (29) காலை நடைபெற்றது.

இதன்போது, “ஞாபகமில்லை”, “அவதானம் செலுத்துகின்றோம்”, “எனக்குரியது”, “தேவையில்லை” என ஒரேயொரு வார்த்தைகளில் பல கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், தேங்காய் வாங்குவதற்கு அளவுநாடா கொண்டுசெல்ல வேண்டுமா எனக் கேட்டபோது திகைத்துநின்றார். அப்போது, அருகிலிருந்த அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர். “குண்டு பிரதானமாக இருந்த காலம் போய், தற்போது தேங்காய் பிரதானமாக இருக்கிறது” என, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, பிரதமருக்கான அதிகாரங்கள் குறைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டமைக்கு பதிலளித்த அவர், “இங்கு பிரதமர் யாரென்பது பிரச்சினையில்லை; அரசியலிலிருந்து நான் ஓய்வுபெறப் போகின்றேன் எனக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. நான் ஓய்வுபெற மாட்டேன். அரசியல்வாதிகள் எப்போது ஓய்வுபெற்றனர்?” என வினவினார்.

புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை நிறைவேற்றுவதற்கு, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும். கடந்த பொதுத் தேர்தலில், மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஒன்றிரண்டு போதாமல் போகலாமெனத் தெரிவித்த அவர், பதவிகளுக்கு ஆசைப்படும் எம்.பிக்கள் தற்போது இல்லையென்றார்.

தேங்காய்களின் அளவுக்கேற்ப விலைகளை நிர்ணயம் செய்தமை, மக்களிடத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட்டிக்காட்டி பிரதம ஆசிரியர்கள், தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். அத்துடன், வர்த்தமானி அறிவித்தலைத் திருத்துவதில் பெயர் பெற்றிருக்கும் இந்த அரசாங்கம், தேங்காய்க்கான வர்த்தமானியையும் திருத்துமா? என வினவினர்.

“தேங்காய்” கேள்விகளால் ஒருகணம் திகைத்துப்போன பிரதமர் மஹிந்த, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்ட போது குறுக்கிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, “தேங்காய்க்கான வர்த்தமானி அமைச்சுக்குரியது அல்ல; அது, நுகர்வோர் அதிகார சபைக்குரியது. சந்தைகளுக்குச் செல்வோர், தேங்காய்களின் அளவைப் பார்க்க மாட்டார்கள், குவியல்களைப் பார்த்தே தேங்காய்களை விலைக்கு வாங்குவார்கள்” என்றார்.

“ஒரே நோக்கத்தில் பயணித்தால், 20ஐ வெற்றிகொள்வது இலகுவானது. கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கு இடையில் கொள்கைகள் வேறுபடும். இன்னும் சிலர், வாய்த்திறக்காமலே இருக்கின்றனர். 20 நிறைவேற்றப்படுமென்ற நம்பிக்கை இருக்கிறது. அதிலெந்தச் சந்தேகமும் இல்லை” எனப் பதிலளித்த பிரதமர், “வர்த்தமானியைத் திருத்துவது ஜனநாயகம்” என்றார்.

20ஆவது திருத்தச் சட்டத்தில், ஊடக அனுமானங்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனவெனக் கேட்டதற்கு பதிலளித்த அவர், “ஹூல்... ஹூல்” என்றார். அப்போது, அருகிலிருந்த அமைச்சர்களுக்கு விளங்கவில்லை. “ஹூல் போன்றவர்களை நியமித்தால், ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்” எனக் கிண்டல் செய்தார்.

மஞ்சளுக்குத் தட்டுபாடு இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள், சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்படும் மஞ்சள் ஆகியன அரசுடமையாக்கப்படுகின்றன எனினும், அவையாவும் எக்காரணம் கொண்டும் சந்தைக்குக் கொண்டுவரப்படாது என்று கூறினார்.

மஞ்சளை வளர்ப்பதற்கு, உள்ளூர் விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவர். மஞ்சளை உற்பத்திச் செய்வது பிரச்சினைதான். ஆனாலும், பிரச்சினைக்கு மத்தியில்தான் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் எனக்கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மஞ்சள் இறக்குமதிக்கான அனுமதி, எக்காரணம் கொண்டும் வழங்கப்பட மாட்டாது என்றார்.

பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அவற்றுக்குத் தீர்வு வழங்கும் வகையில், 2021 வரவு-செலவுத் திட்டத்தில் (பாதீடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், பாதீடு ஓர் இரகசியமாகும்; அதைப்பற்றி கூறினால், நாளைக்கே எழுதிவிடுவீர்கள், பேசப்பட்ட ஏனைய விடயங்கள் மறந்துவிடப்படுமெனத் தெரிவித்ததோடு, ஒவ்வொரு வாக்காளர் பிரிவுகளிலும், 100 வீடுகளைக் கொண்ட மாடி வீட்டுத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக